'இணைப்பு'க்கு அச்சாரமா? - அதிமுகவினரின் திடீர் சசிகலா பாசத்தின் பின்புலம் எழுப்பும் கேள்வி
உதயநிதியின் சர்ச்சைக்குரிய பேச்சை முன்வைத்து, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக அழுத்தமாக குரல் எழுப்பி வருவது அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதை கோகுல இந்திரா இன்று சசிகலாவுக்கு சூட்டிய புகழாரமும் உறுதிபடுத்தியுள்ளது.
சில நாள்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சசிகலா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல்வேறு மட்டத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இந்த கருத்திற்கு எதிராக தனது வன்மையாக கண்டனத்தை பதிவுசெய்தார். அமமுக சார்பாக பல இடங்களில் உதயநிதி உருவபொம்மை எரிப்பு போராட்டங்களும் நடந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை அவதூறாக பேசியதாக உதயநிதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.
ஆனால். ஆச்சர்யப்படும் விதமாக இந்த விஷயத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், குஷ்பு உள்ளிட்ட பல தலைவர்கள் உதயநிதியை கண்டித்தனர். அதோடு மட்டுமின்றி சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை அவதூறான முறையில் உதயநிதி பேசியதாக, அவரைக் கண்டித்து அதிமுகவினரே பல இடங்களில் அதிகாரபூர்வமற்ற முறையில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், “சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான கோகுல இந்திரா கூறியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்றுவோம், அவர் ஜெயலலிதாவுடன் துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். உதயநிதிக்கு எதிராக முதல்வரும் துணை முதல்வரும் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
அதிமுகவினரின் இந்த திடீர் சசிகலா பாசம், அதிமுக-அமமுக இணைப்புக்கான அச்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2016-இல் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார், பிறகு அவர் ராஜினாமா செய்துவிட்டு சசிகலா முதல்வராகும் வேலைகள் நடந்தன. அப்போதுதான் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா சிறைக்கு செல்லும் சூழல் உருவானது. அதனால் திடீரென்று எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக அறிவித்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் சசிகலா.
பிறகுதான் ஆர்.கே.நகர் தேர்தல் வழக்கில் தினகரன் கைது, அதிமுக பிளவு, தினகரன்-சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கம், ஓபிஎஸ் இணைப்பு என்று கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுகவில் அடுக்கடுக்கான பிரளயங்கள் நடந்தன. தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியையும் உருவாக்கினார், இந்த சூழலில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக உள்ளார் என்ற செய்திதான் இப்போதைய அரசியல் களத்தில் ஹாட் டாபிக்.
அதிமுக – அமமுக தனித்தனியாக செயல்படும் நிலையில், அமமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களையும் வென்றது. கணிசமான வாக்குவங்கியை வைத்துள்ள அமமுக கடந்த இரு தேர்தல்களிலும் பல இடங்களில் அதிமுக தோற்கவும் காரணமாக இருந்தது. இதுதான் இப்போதைய அதிமுகவின் திடீர் சசிகலா பாசத்துக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்களால் சொல்லப்படுகிறது.
வலுவான கூட்டணியுடன் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றிபெற்ற திமுக இப்போது கூடுதல் பலத்துடன் உள்ளது. பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுகவுக்கு இயல்பாக எழும் மக்களின் அதிருப்தியுடன், வலுவான கூட்டணியும் இன்றி தவிக்கிறது. பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு கொடுக்கும் நெருக்கடி அதிமுகவை விழிபிதுங்க வைக்கிறது.
கடந்த இரு தேர்தல்களிலும் வலுவான கூட்டணியை அமைத்து, சிறப்பான வியூகங்களுடன் அதிமுகவை வெற்றிபெற வைத்தவர் சசிகலா. எனவே, தற்போதைய தேர்தலிலும் அவரின் பங்களிப்பு இருந்தால் நிச்சயமாக வெற்றிவாகை சூடலாம் என்று அதிமுகவின் ஒரு தரப்பினர் பேச ஆரம்பித்துள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக-அதிமுக இடையேயான வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், ஒருவேளை அமமுக தனியாக நின்றால், அது பிரிக்கும் வாக்குகள்தான் அதிமுகவின் தோல்விக்கு முதல் காரணமாக அமையும். அதனால் அதிமுக-அமமுக இணைப்புதான் 2021 தேர்தலின் வெற்றிக்கான ஒரே ஆயுதம் என்று அதிமுக மட்டுமின்றி பாஜகவும் நம்புகிறது என்பதைத்தான் சமீபத்திய திடீர் சசிகலா பாசம் வெளிப்படுத்துகிறது என்று அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது அதிமுகவில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள். முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் சசிகலாவால் உருவாக்கப்பட்டவர்கள்தான். எனவே அவர் விடுதலையாகி வரும் நேரத்தில், அதிமுகவில் காட்சிகள் மாறவும் வாய்ப்புள்ளது. அதனை பேலன்ஸ் செய்யும் விதமாகவே அதிமுக இப்போதே காய்நகர்த்தல்களை தொடங்கி சசிகலாவுடனான உறவை புதுப்பிக்க விரும்புகிறது என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ உதயநிதியின் பேச்சால் அதிமுக - சசிகலா உறவில் புதிய ‘உதயம்’ உருவாகுமா என்பதைப் பொறுத்தியிருந்துதான் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
-வீரமணி சுந்தரசோழன்