கிராமிய இசையோ, மேற்கத்திய இசையோ... இசையில் மயங்காதவர் எவரும் இல்லை. அதிலும் இந்தியாவில், எப்போதுமே இசைக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படும். தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் கூட அழிந்து வரும் இசைக்கும், இசைக்கருவிகளுக்கும் முக்கியத்துவம் தந்து, அவற்றை பாதுகாத்து வருகிறது. அப்படி காக்கப்பட்டு வரும் சில இசை கருவிகளின் சிலவற்றின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு இசையும், அதன் இசை கருவிகளை அடிப்படையாக கொண்டதுதான். ஒவ்வொரு கருவியும் ஒருவித ஒலியை எழுப்பும் என்பது நாம் அறிந்ததுதான்.
மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் செயல்படும் சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை நிறைவேற்ற, பழமையான, நீண்ட பாரம்பரியமிக்க தமிழகக் கலைகளை போற்றிப் பாதுகாக்க, தமிழக அரசால் 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இது 1973 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம் மன்றத்தின் மூலம், பல உன்னத விருதுகள் வழங்கி கலைஞர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
தமிழர் இசைக் கருவிகளை பண்ணிசைக் கருவிகள் என்றும் தாளக் கருவிகள் என்றும் குறிப்பிடலாம். கருவிகள் எழுப்பும் ஒலியினைக் கொண்டு அவற்றை நரம்புக் கருவி, துளைக் கருவி, தோற் கருவி, கஞ்சகக் கருவி என வேறுபடுத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் மரம், மூங்கில், நரம்பு, கயிறு, தோல் முதலியவற்றால் வெவ்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுகிறது. இவற்றில் பெரும்பாலான கருவிகள் உபயோகத்தில் இல்லை. நமது சங்க கால இலக்கியங்களிலும், நூல்களிலும், இசை கருவிகளைப்பற்றி அதிகம் குறிப்பிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை காணலாம்.
இசைக்கருவிகளின் பட்டியல்
ஆகுளி, இடக்கை, இலயம், உடுக்கை, ஏழில், கத்திரிகை, கண்டை, கரதாளம், கல்லலகு, கல்லவடம், கவிழ், கழல், காளம், கிணை, கிளை, கின்னாரம், குடமுழா, குழல், கையலகு, கொக்கரை, கொடுகொட்டி, கொட்டு, கொம்பு, சங்கு, சச்சரி, சலஞ்சலம், சல்லரி, சிலம்பு, தகுணிச்சம், தக்கை, தடாரி, தட்டழி, தத்தளகம், தண்டு, தண்ணுமை, தமருகம், தாரை, தாளம், துத்திரி, துந்துபி, துடி, தூரியம், திமிலை, தொண்டகம், நரல் சுரிசங்கு, படகம், படுதம் பணிலம், பம்பை, பல்லியம், பறண்டை, பறை, பாணி, பாண்டில், பிடவம், பேரிகை, மத்தளம், மணி, மருவம், முரசு, முரவம், முருகியம், முருடு, முழவு, மொந்தை, யாழ், வட்டணை, வீணை, வீளை, வெங்குரல்
தோல்கருவிகளின் பட்டியல்
பொரும்பறை, சிறுபறை, பெருமுரசு, சிறுமுரசு, பேரிகை, படகம், பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை ? கரடிகை, திமிலை, தக்கை, கணப்பாறை
தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, முரசு, சந்திர வளையம், மொந்தை, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை, தமுக்கு, உறுமிமேளம், பறை, முரசு, தம்பட்டம்
தமருகம், நகரா, மண்மேளம், தவண்டை, ஐம்முக முழவம்(குடமுழவு), நிசாளம், துடுமை, அடக்கம், தகுனிச்சம், தூம்பு, பேரிமத்தளம், கண்விடு, துடுகை
உடல், உருட்டி, சன்னை, அரைச்சட்டி, கொடுகொட்டி, அந்தலி, அமுதகுண்டலி, அரிப்பறை, ஆகுளி, ஆமந்தரிகை, ஆவஞ்சி, உடல் உடுக்கை, எல்லரி ஏறங்கோள் கோதை, கண்தூம்பு, கணப்பறை கண்டிகை, கல்லல் கிரிகட்டி, குண்டலம் சடடை, செண்டா, சிறுபறை, தகுனித்தம், தட்டை, தடாரி, பதவை, குளிர், கிணை, துடி, பம்பை
காற்றுக் கருவிகளின் பட்டியல்
புல்லாங்குழல், முகவீணை, மகுடி, சங்கு, தாரை, நாதசுவரம், கொம்பு, ஒத்து, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம், தூம்பு, வயிர்
நரம்புக் கருவிகளின் பட்டியல்
யாழ், வீணை, தம்பூரா, கோட்டுவாத்தியம், சாரங்கி, பிடில், வில் (இசைக்கருவி), கின்னாரம்
தட்டுக் கருவிகளின் பட்டியல்
கைமணி, தாளம் அல்லது பாண்டில், நட்டுவாங்கம், கஞ்சம் அல்லது கைத்தாளம், கெண்டி, கடம், சேமக்கலம், தட்டுக்கழி
மேலும் சிலவகை
இசைத்தூண்கள்
நட்டுவாங்கம்
மோசிங்
சுருதிப்பெட்டி
இதில் சங்ககால பாரம்பரிய இசை கருவிகளைப்பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்
உடல் என்று ஒரு இசைக்கருவி இருந்ததெனவும், இது தோல் கருவியை சார்ந்ததெனவும் கூறுகின்றனர். இது உருளை வடிவுடையது.
ஊதல்
சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு,முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை, யாழ், கூத்தர் முதலானவை முழக்கும் பறைக்கருவிகள்.
எக்காளம்
இது கிராமிய இசைக் கருவிகளில் ஒன்று. இது நான்கு பித்தளை அல்லது தாமிரக் குழாய்களை ஒன்று சேர்த்து, வாய் வைத்து ஊதும் துளையுடன் கூடிய இசைக் கருவி.
கடம்
இவ்வகை இசைகருவி இன்றும் வாசிக்கப்படுகிறது. இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும்.
கஞ்சிரா
கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். பஜனைகளிலும், கிராமிய மக்களாலும் பயன்படுத்தப்படும் வாத்தியம் இதுவாகும்.
கொக்கறை
இதில் இரு இசைக்கருவிகள் உள்ளன. ஒன்று மாட்டின் கொம்பால் செய்யப்படுவது. மற்றையது இரும்புக் குழல். முதலாவது கோயிலிலும், இரண்டாவது சாற்றுப்பாடலின் போதும் பயன்படுத்தப்பட்டது.
கொடுகொட்டி
இது ஒரு தோல்கருவி வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இக்கருவி தற்காலத்தில் கிடுகிட்டி என்றழைக்கப்படுகிறது.
கொம்பு எனப்படுவது இது ஒரு ஊது கருவி.
கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது.
சங்கு
ஒரு காற்று இசைக் கருவி. இந்திய பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது.
சிறுமுரசு அல்லது சாயரட்சை மேளம்
இது தோற்கருவி வகை சார்ந்த இசைக் கருவி. இது "சிறிய அரைச்சட்டியில் புள்ளிமான் தோல் கொண்டு வார்க்கப்பட்டது.
பெருமுரசு
இதுவும் தோற்கருவி வகை சார்ந்த ஒரு தமிழர் இசைக் கருவி. இது அரைக் கோள வடிவுடையது. இது "பெரிய இருப்புச் சட்டியில் மாட்டுத் தோலை வார்த்து உருவாக்கப்படும்.
சேமக்கலம்
இது கஞ்சக்கருவி வகை சார்த இசைக் கருவி. இது தூய வெண்கலத்தால் ஆனது. தாதராட்டத்தில், கோயில்களில், இறப்பு வீடுகளில் இக் கருவி இசைக்கப்படுகிறது.
தமுக்கு
இது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும்.
தம்பட்டம்
இது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இதன் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்டிருக்கும்.
தவண்டை
இது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்.
தாரை
இது 12 அடி வரையான நீளத்தைக் கொண்ட ஒரு பழந்தமிழ் ஊதுகருவி. இக் கருவி சீரான, இடை நிற்காத இசை தருவது.
தாளம் :
இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன.
திமிலை :
பலா மரத்தில் செய்யப்பட்டு தோலால் மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று.
திருச்சின்னம் :
இது ஒரு காற்று வாத்தியம் ஆகும். இது ஜோடிக் குழாய்களால் ஆனது.
நகரா :
மிகப்பெரிய வடிவம் கொண்ட இந்த இசைக்கருவி பெரும்பாலும் கோவில்களில் நுழைவாயில் அருகே இடம்பெற்றிருக்கும்.
நமரி :
மேள தாளங்களோடு வாசிக்கப்படும் ஓர் ஊதுகருவி. இது யானையின் பிளிறல் போன்று ஒலி எழுப்பக் கூடியது. இதனை கொண்டாட்ட நிகழ்வுகளிலும் துக்க நிகழ்வுகளிலும் வாசிப்பர்.
நாதசுவரம் :
இது நாதஸ்வரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
பஞ்சமுக வாத்தியம் :
இது ஐம்முக முழவம் வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி ஆகும்.
பம்பை :
பலா மரத்தில் உருளை வடிவத்தில் செய்யப்பட்ட பம்பையின் இரு பக்கங்களிலும் முரட்டு தோல் மூடியுள்ளது. பலா மரத்துக்குப் பதிலாக பித்தளையாலும் பம்பை செய்யப்படுவதுண்டு.
பேரிகை:
இது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும்.
பேரிமத்தளம்:
இது தோற்கருவி வகையைச் சார்ந்த தமிழர் இசைக் கருவி ஆகும். இது மிருதங்கத்தை விட நீண்டது. பலாக்கட்டையால் செய்யப்பட்டு ஆட்டுத் தோல் போர்த்தப்படுவது. அரளிக்குச்சியால் ஒரு முகத்தில் மட்டும் வாசிக்கப்படுவது.
மகுடி:
இந்தியாவில் தோற்றம்பெற்ற ஒரு பண்பாட்டு இசைக்கருவி ஆகும். சமயச் சடங்குகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது.
மண்மேளம்
இது தோல் கருவி வகை தமிழர் இசைக்கருவி.
முகவீணை
ஒரு துளைக் கருவி இக்கருவியில் ஓசையிடுவதற்கு, ஏதுவாக ஏழு துளைகள் காணப்படும்.
முரசு
என்பது ஒரு இசைக் கருவியாகும்.
முழவு
இது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது சிறுகம்பு, கைகளைப் பயன்படுத்தி தாளவிசை எழுப்பும் கருவியாகும்.
யாழ்
இது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். இது தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும். இது முற்றிலுமாக அழிந்து விட்டது.
வீணை
நரம்பினைக்கொண்டு செய்யப்பட்ட இசைக்கருவி.
வீணை வகைகள்
ருத்திர வீணை, விசித்திர வீணை, சித்திர வீணை, நவசித்திர வீணை, சாத்வீக வீணை, அன்ச வீணை