ட்விட்டர் Vs மத்திய அரசு... வலுக்கும் பனிப்போர்... மாற்று செயலி ஆக்கப்படுகிறதா 'கூ'?

ட்விட்டர் Vs மத்திய அரசு... வலுக்கும் பனிப்போர்... மாற்று செயலி ஆக்கப்படுகிறதா 'கூ'?
ட்விட்டர் Vs மத்திய அரசு... வலுக்கும் பனிப்போர்... மாற்று செயலி ஆக்கப்படுகிறதா 'கூ'?

மற்ற சமூக வலைதளங்களில் உள்ள எடிட் ஆப்ஷன் ட்விட்டரில் இதுவரை இல்லை. அதற்காக காரணத்தை ஒருமுறை கூறிய அந்நிறுவனத்தின் நிறுவனர் ஜாக், ''உங்களின் பதிவுக்கு பதில் பின்னூட்டங்கள் நிறைய வரலாம். அந்த நேரத்தில் உங்கள் பதிவு மாற்றப்பட்டால் பதிலளிப்பவர்களின் கருத்தே பயனற்று போகுமே. அதனால் எடிட் என்பது ஆரோக்கியமான விவாதத்துக்கு சரிபடாது'' என்றார். யோசித்துப் பார்த்தால் அவரின் கருத்து சரியென்றே தோணும்.

இந்த நேரத்தில் மற்றொரு சம்பவத்தையும் நினைவுகூர வேண்டும். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இருந்த நேரத்தில் கருப்பின நபர் ஒருவர் போலீசாரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அது தொடர்பான ட்ரம்பின் பதிவை அதிரடியாக நீக்கியது ட்விட்டர். நாட்டின் அதிபராக இருந்தாலும் தவறான கருத்துக்கு இங்கு இடமில்லை எனக் கூறியது. ஆனால் ஃபேஸ்புக் அந்தப் பதிவை நீக்காமல் சிக்கலில் சிக்கியது. ''கருத்துரிமைக்கு என்றுமே ட்விட்டர் முழு சுதந்திரம் கொடுக்கும். அதேநேரத்தில் தவறான கருத்தை யார் பதிவிட்டாலும் அதற்கு ட்விட்டர் வழிவிடாது'' என்பதே தங்கள் நிறுவனத்தின் தாரக மந்திரமாக இருப்பதாக ஜாக் அடிக்கடி கூறுவார். இன்று இந்தியாவில் கருத்துரிமை என்ற கோட்டுக்கும், வன்முறை தூண்டும் பதிவுகள் என்ற கோட்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு நிற்கிறது ட்விட்டர்.

இடையிடையே சிறு சிறு பிரச்னைகளில் ட்விட்டர் சிக்கினாலும், விவசாயிகளின் போராட்டங்களுக்கு பிறகு ட்விட்டருக்கும், அரசுக்கும் இடையே பனிப்போரே தொடங்கிவிட்டது. விவசாயிகள் பிரச்னைகள் குறித்து பதிவிடப்படும் பதிவுகளும், அதற்கான பதில் பதிவுகளும் உலக அளவை கவனம் ஈர்க்கின்றன. வன்முறையைத் தூண்டும் கருத்துகளை பதிவிடும் 1000-க்கும் மேற்பட்ட கணக்குகளை உடனே முடக்குங்கள் என ட்விட்டரை கேட்டுக்கொண்டது இந்திய அரசு. ஆனால், கருத்து உரிமைக்கும், வன்முறை தூண்டும் பதிவுகளுக்கும் வித்தியாசம் உண்டு. அதனால் அனைத்து கணக்குகளையும் முடக்க முடியாது என அரசுக்கு எதிராக நிற்கிறது ட்விட்டர்.

இது குறித்து விளக்கமும் அளித்த ட்விட்டர், ''இந்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப சில கணக்குகளை முடக்கியுள்ளோம். முடக்கப்பட்ட கணக்குகள் இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் அந்தக் கணக்குகள் பயன்பாட்டிலேயே இருக்கும். இருப்பினும், செய்தி ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய கணக்குகள் குறித்து நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பொதுத்தளத்தில் பயனாளர்கள் சுதந்திரமான கருத்துப் பதிவிடுவதையே நாங்கள் விரும்புகிறோம். ஆதரிக்கிறோம். அதனை அரசின் விதிகளுக்குள் கொண்டு வரவும் முயற்சி செய்கிறோம்'' என்று குறிப்பிட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றும் குறிப்பிட்டது. ஆனால், இது குறித்து சற்றே காட்டமான பதிலை கூறி இருந்தது தகவல் தொழில்நுட்பத்துறை. ''பேச்சுவார்த்தை எனக் கூறிவிட்டு பொது வெளியில் தங்களது தரப்பு விளக்கத்தை ட்விட்டர் வெளியிட்டிருப்பது அசாதாரணமானது. இந்த விவகாரத்தில் இந்திய அரசின் பதில் விரைவில் பகிரப்படும்'' என பதிவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் அதிகாரிகள் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கண்ட விவகாரங்கள் அரசுக்கும், ட்விட்டருக்கும் இடையே நிலவும் பனிப்போரை காட்டுவதாகவே உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது அரசு தரப்பில் விளம்பரப்படுத்தப்படும் 'கூ' ஆப். ட்விட்டரில் படு ஆக்டீவாக இருக்கும் மத்திய அமைச்சர்களே தற்போது ட்விட்டருக்கு எதிராக நிற்கும் நிலை உருவாகிவிட்ட நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'கூ' செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர் . ட்விட்டர் செயலி மாதிரியான சமூக வலைதளமாக 'கூ' உள்ளது. இதன் மூலம் ட்விட்டருக்கு அரசு ஏதோ சொல்ல வருவதாகவே படுகிறது. ட்விட்டருக்கு மாற்றாக ஒரு செயலியை கொண்டு வந்து எந்த நேரத்திலும் ட்விட்டர் முடக்கப்படலாம் என யூகிக்கின்றனர் சிலர். நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பு குறைபாடு என பல செயலிகள் கடந்த காலத்தில் முடக்கப்பட்டுள்ள நிலையில், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் எல்லாம் அரசுக்கு முன்னால் என்ன செய்துவிட முடியும் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

இந்தியா-ட்விட்டர் இடையேயான பனிப்போரை உலக நாடுகளும் கவனிக்காமல் இல்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களின்போது, அரசுக்கு எதிராக பலர் ட்விட்டரில் கருத்து பதிவிடத்தான் செய்தார்கள். ஆனால் ட்விட்டரை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அரசு இறங்கவில்லை என்கின்றனர் அமெரிக்க ட்விட்டர்வாசிகள். இந்தியாவில் கருத்துரிமை குறித்து ட்விட்டர் அளித்துள்ள விளக்கம் சரிதான் என ட்விட்டருக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆதரவு குரல் எழுகின்றனர்.

ட்விட்டர் விளக்கத்துக்கு மத்திய அரசு கொடுக்கப்போகும் பதில் விளக்கம் என்ன? 'கூ' செயலியின் அடுத்தகட்டம் எப்படி? ட்விட்டர் நிர்வாகத்தின் நகர்வு என்னவாக இருக்கப்போகிறது? - இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதிலுக்கு ட்விட்டர்வாசிகள் மட்டுமின்றி உலக நாடுகளும் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com