ட்விட்டரில் மீண்டும் 'ப்ளூ' டிக் வசதி... நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

ட்விட்டரில் மீண்டும் 'ப்ளூ' டிக் வசதி... நீங்களும் விண்ணப்பிக்கலாம்!
ட்விட்டரில் மீண்டும் 'ப்ளூ' டிக் வசதி... நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

சமூக வலைதள குறும்பதிவு சேவையான ட்விட்டர் தனது பயனாளிகளின் கணக்குகளை சரிபார்த்து, அதன் அதிகாரபூர்வ தன்மைக்கு அடையாளமாக வழங்கி வந்த ப்ளூ (நீலம்) டிக் வசதியை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப முறையையும் ட்விட்டர் அறிவித்துள்ளது.

சமூக ஊடக சேவைகளில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சில அம்சங்கள் இருப்பது போல, குறும்பதிவு சேவையான ட்விட்டரின் அடையாளங்களில் ஒன்றாக அதன் நீல டிக் வசதி அமைந்திருந்தது.

பொதுவாக பிரபலமான நபர்கள், புகழ்பெற்ற ஆளுமைகள் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கம் அவர்களின் அதிகாரபூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நீல டிக் வசதி அமைந்திருந்தது. இத்தகைய கணக்குகளை சரிபார்க்கப்பட்ட பக்கங்கள் என ட்விட்டர் குறிப்பிட்டு வந்தது.

பிரபலங்கள் பெயரில் மற்றவர்கள் பொய்க் கணக்கு அல்லது கேலிப் பக்கங்களை அமைத்து வந்த சூழலில், இத்தகைய போலி கணக்குகளால் பயனாளிகள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்ப்பதற்காக ட்விட்டர் பிரபலங்களின் கணக்குகளை சரிபார்க்கப்பட்டவை என உணர்த்தும் வகையில் நீல நிற டிக் வசதியை அறிமுகம் செய்தது.

இந்த பக்கங்கள் 'வெரிஃபைடு' என குறிப்பிடப்பட்டு, அதன் அடையாளமாக நீல டிக் இருக்கும். இதன்மூலம் அந்தப் பக்கம் குறிப்பிட்ட நபருடைய அதிகாரபூர்வ கணக்கு என தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், மூன்றாண்டுகளுக்கு முன்னர் இந்த வசதியால் இந்தியாவில் ட்விட்டர் பயனாளிகள் மத்தியில் பெரும் சர்ச்சை உண்டானது. ட்விட்டர் நீல டிக் வசதி அளிப்பதில் வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்றும், இந்த வசதி பாரபட்சமான முறையில் அளிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து ட்விட்டர் நிறுத்தி வைத்திருந்த நீல டிக் வசதியை மீண்டும் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான செயல்முறையையும் அறிவித்துள்ளது.

கணக்குகள் சரி பார்க்கப்பட்டு, உறுதி செய்யப்படுவதில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்கும் வகையில் யார் வேண்டுமானாலும், இந்த வசதிக்காக விண்ணப்பிக்கலாம் என்றும், எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும் ட்விட்டர் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்ப பகுதி, பயனாளிகளின் ட்விட்டர் செட்டிங் பகுதியில் தோன்றத் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அமைப்பு, நிறுவனங்கள், பிராண்டுகள், செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், திரைப்படத்துறையினர், விளையாட்டு மற்றும் கேமிங் புள்ளிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் இதர செல்வாக்காளர்கள் ஆகிய பிரிவினர் இந்த நீல டிக் வசதியை பெறலாம். இந்தப் பட்டியலில் கல்வியாளர்கள் மற்றும் டாக்டர்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ட்விட்டர் குழுவால பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்டால் 30 நாட்கள் கழித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஓர் அம்சமாக கருதப்படும் என்றும், ஆனால் அது மட்டுமே முக்கியமாக அமையாது என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இது தவிர தானியங்கி கணக்கு வசதி, பெயர் உச்சரிப்பு வசதி உள்ளிட்ட அம்சங்களையும் ட்விட்டர் அறிவித்துள்ளது.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com