‘லேசா லேசா’ முதல் ‘96’ வரை - த்ரிஷா ‘பர்த்டே’ ஸ்டோரி

‘லேசா லேசா’ முதல் ‘96’ வரை - த்ரிஷா ‘பர்த்டே’ ஸ்டோரி

‘லேசா லேசா’ முதல் ‘96’ வரை - த்ரிஷா ‘பர்த்டே’ ஸ்டோரி
Published on

கதாநாயகர்களை போல கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம் நடிகை த்ரிஷாவை கண் முன்னே நிறுத்திப் பார்க்கலாம். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின். எக்காரணத்தைக் கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்ற தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய த்ரிஷா இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ‘ஐகான்’ ஆக இருக்கிறார். 

பெற்றோருக்கு ஒரே மகளான த்ரிஷா 1983-ஆம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார். சென்னை சர்ச் பார்க் பள்ளியில் படித்த அவர், சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் பி.பி.ஏ பட்டம் பெற்றார். பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர். ஒரு நகைக்கடை விளம்பரம் மூலம் கவனம் பெற தனது முதல் பட வாய்ப்பு த்ரிஷாவுக்கு கிடைத்தது. அதே நகைக்கடை விளம்பரத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்தவர் சமந்தா என்பது கூடுதல் தகவல்.

வாழ்க்கையில் சினிமாவே கிடையாது என்று கூறிக்கொண்டவர் நடிகை சிம்ரனின் தோழியாக ஜோடி திரைப்படத்தில் தன்னுடைய முகத்தை திரையில் காட்டத்தொடங்கினார். அதற்குப் பின் தமிழ் சினிமா த்ரிஷாவை பற்றிக்கொண்டது. அடுத்து ‘லேசா லேசா’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார் த்ரிஷா. ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது. அப்படத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத நகரங்களில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணின் சாயலை அப்படியே கொண்டு வந்தார் த்ரிஷா. அப்படத்தில் வரும் 'தனியாவா? பேசலாமே’ என்ற ஒரு டயலாக் இன்றளவும் ஃபேமஸ்.

த்ரிஷாவை தமிழ் சினிமாவும், தமிழ் ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் ‘சாமி’. காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் புவனாவாக அள்ளி வீசியிருப்பார் த்ரிஷா. அதற்கு பின் ‘அலை’, ‘எனக்கு 20 உனக்கு 18’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்தவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார். த்ரிஷா சினிமா வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘கில்லி’.

நடுத்தர வர்க்க பெண் தனலட்சுமியாகவே வாழ்ந்திருப்பார் த்ரிஷா. காதல் காட்சிகள், பிரகாஷ்ராஜ் உடனான காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய பெஸ்ட்டை காட்டியிருப்பார். ‘கில்லி’ திரைப்படம் விஜய், பிரகாஷ்ராஜை எந்த அளவுக்கு கவனிக்க வைத்ததோ அதே அளவு த்ரிஷாவையும் கவனிக்க வைத்தது. அதற்கு பின் விஜயுடன் ‘ஆதி’,‘குருவி’,‘திருப்பாச்சி’ உள்ளிட்ட படங்களிலும் இணைந்தார். தளபதி ஒருபக்கம் என்றால், தல அஜித்துடனும் ஜோடி சேர்ந்தார். ‘கிரீடம்’,‘மங்காத்தா’,‘என்னை அறிந்தால்’ ஆகிய திரைப்படங்களில் அஜித்துடன் கூட்டணி சேர்ந்து படத்தின் வெற்றியை பங்கிட்டுக்கொண்டார். 

கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா, பல வருடங்களுக்குப் பிறகே ‘பேட்ட’ திரைப்படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தார். ‘அபியும் நானும்’ திரைப்படத்தில் அபி, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் ஜெஸ்ஸி, ‘உனக்கும் எனக்கும்’ திரைப்படத்தில் கவிதா, பீமா திரைப்படத்தில் ஷாலினி, ‘சர்வம்’ படத்தில் சந்தியா என அனைத்து திரைப்படத்திலும் தன் பங்கை அழகாக செய்திருப்பார் த்ரிஷா. 

‘96’ திரைப்படம் மூலம் ஜானுவாக ரசிகர்களின் மனதில் இன்னமும் அழுத்தமாக பதிவாகி, தொடங்கிய புத்துணர்ச்சியுடனேயே தனது திரைப்பயணத்தை இன்னமும் தொடர்ந்து வருகிறார் த்ரிஷா.

திரைப்படம் தாண்டி யோகா, செல்லப்பிராணிகள், வெளிநாடு சுற்றுலா என த்ரிஷாவுக்கு பிடித்த பக்கங்கள் ஏராளம். வெறும் பாட்டுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே கதாநாயகிகள் என்பதை உடைத்து படத்துக்கு பலமாக நின்று, இன்றும் சினிமாவில் நீடிக்கும் த்ரிஷா, புதிதாக கால்பதிக்கும் கதாநாயகிகளுக்கு முன்னுதாரணம். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com