"மக்களுக்கு வீதிகளை மீட்டுக்கொடுத்தவர்"-சாதி எதிர்ப்புப் புரட்சியாளர் அய்யங்காளி

"மக்களுக்கு வீதிகளை மீட்டுக்கொடுத்தவர்"-சாதி எதிர்ப்புப் புரட்சியாளர் அய்யங்காளி
"மக்களுக்கு வீதிகளை மீட்டுக்கொடுத்தவர்"-சாதி எதிர்ப்புப் புரட்சியாளர் அய்யங்காளி

கேரள மண்ணில் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய புரட்சியாளர் அய்யங்காளியின் 157 வது பிறந்த நாளான ஆகஸ்ட் 28 ம் தேதியன்று அவரது பணிகளை வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் இயக்கங்களும் நினைவுகூர்ந்துள்ளனர். இதுபற்றிய செய்தியை தி நியூஸ்மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூர் என்ற கிராமத்தில் ஆகஸ்ட் 28, 1863ம் ஆண்டு பிறந்தார். தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட புலையர் வகுப்பைச் சேர்ந்த அய்யன் - மாலா தம்பதிக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் மூத்தவர் அய்யங்காளி. அதே சமூகத்தை சேர்ந்த மற்ற குடும்பங்களைவிட அவர்கள் சற்று வசதியாக இருந்தார்கள். சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருந்தது. குழந்தைகள் அனைவருமே விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தக் காலத்தில் புலையர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்தனர்.

1893ம் ஆண்டு நாயர்களுடன் தொடர்புடைய உடைகளை அணிந்து அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். உயர்சாதியினரால், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இளைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து, முதல்முறையாக சொந்தமாக மாட்டு வண்டி வாங்கி கம்பீரமாக ஓட்டிக்காட்டினார். சாதிய நெருக்கடிகள் நிறைந்த,  மரபுகளால் பின்னப்பட்டிருந்த அந்தக் காலத்தில் அய்யங்காளி செய்தது மிகப்பெரிய புரட்சிகர நடவடிக்கை. நெடுமங்காடு சந்தைப் பகுதிக்கு வண்டியுடன் நுழைந்து எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

பின்னாளில் இது பொது இடங்களில் உரிமை கோரும் போராட்டமாக பெருகத் தொடங்கியது. திருவாங்கூர் சமஸ்தானம் முழுவதும் அய்யங்காளியின் போராட்டம் மெல்ல பரவியதற்கு அவருடைய நடவடிக்கை காரணமாக அமைந்தது.

அய்யங்காளியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், "சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் விளைவாக நாம் அனைவரும் பொதுவானவர்கள் என்பதை அந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. அனைத்து மக்களுக்கும் அவர் வீதிகளை மீட்டெடுத்துக் கொடுத்தார். அது நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான நமது மாநிலத்தில் நடந்த முக்கியமான அத்தியாயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அய்யங்காளியின் இரண்டு செயல்கள் மறக்கமுடியாதவை. ஒரு பட்டியலின பெண்ணை உயர்சாதியினர் நடத்திய பள்ளிகள் அனுமதிக்க மறுத்த நிலையில், அந்தப் பெண்ணை பள்ளியில் சேர்த்தார். அடுத்து உயர்சாதியினர் மட்டுமே செல்லக்கூடிய சாலையில், புலையர் வகுப்பைச் சேர்ந்த அய்யங்காளி வண்டியை ஓட்டி மிகப்பெரும் சமூக மாற்றத்துக்கு வித்திட்டார்.

அய்யங்காளியின் வாழ்க்கை வரலாற்றை இணைந்து எழுதியுள்ள எழுத்தாளர் மீனா கந்தசாமி, "சாதிய நடைமுறைகளை போர்க்குணத்துடன் எதிர்த்தார். பண்ணைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். பட்டியலின குழந்தைகளுக்காக பள்ளிகளை ஏற்படுத்தினார். 1907ம் ஆண்டு பெரிய விவசாயப் போராட்டத்தை ஒருங்கிணைத்தார். பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காகவும், விடுதலைக்காகவும் போராடிய தலைவர்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.



"நீங்கள் எங்கள் குழந்தைகளைப் படிக்க அனுமதிக்காவிட்டால், உங்கள் நிலங்களில் களைகள் மட்டுமே வளரும் " என்று சொன்னவர் அய்யங்காளி என்று ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரும் மகன்களில் ஒருவர் என்று காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, "மகாத்மா அய்யங்காளி போன்ற பெரிய மனிதர்களுக்கு இந்தியா கடன்பட்டிருக்கிறது. சமூகச் சீர்திருத்தம் மற்றும் நலிந்த மக்களின் மேம்பாட்டுக்கான அவரது பணிகள் எப்போதும் ஊக்கமளிப்பவை" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com