“சிகிச்சையோடு மன உறுதியும் வேண்டும்“ - கொரோனாவை வென்ற பா.வளர்மதி ’உற்சாக’ பேட்டி!

“சிகிச்சையோடு மன உறுதியும் வேண்டும்“ - கொரோனாவை வென்ற பா.வளர்மதி ’உற்சாக’ பேட்டி!

“சிகிச்சையோடு மன உறுதியும் வேண்டும்“ - கொரோனாவை வென்ற பா.வளர்மதி ’உற்சாக’ பேட்டி!
Published on

அரசியலில் எதற்கும் அஞ்சாமல் அதிரடியாக வலம் வருபவர் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி. உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வளர்மதியையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், தற்போது, மீண்டு வந்திருக்கிறார்.  கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டு வந்தது எப்படி? என்று நாம் கேட்டபோது,  “பயப்படாம பாசிட்டிவ் எனர்ஜியோடவே இருந்தேன். அந்த, பாசிட்டிவ் எனர்ஜிதான் ட்ரீட்மெண்ட்டுக்குப் பிறகு கொரோனா  ‘நெகட்டிவ்’ன்னு வந்துச்சு” என்று செம்ம உற்சாகத்தோடு பேசுகிறார் வளர்மதி.  

    “கொரோனா எனக்கு வரும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதிர்பாராத விதமாக வந்துவிட்டது. தன்னம்பிக்கையோடு வெல்லவேண்டும் என்று நினைத்தேன். இதுவும் ஒருவகை, ஜுரம். இதுக்கான ட்ரீட்மெண்டை பண்ணினா வந்தமாதிரி திரும்பிப் போயிடும்னு கேஷுவலாத்தான் இருந்தேன். அதேமாதிரி, போயிடுச்சு.

வாழ்க்கையாக இருந்தாலும் நோயாக இருந்தாலும் அச்சமின்மை, மன உறுதி, தன்னம்பிக்கை இருந்தால் போதும் வென்றுவிடலாம். இதையெல்லாம், இழந்துவிடக்கூடாது. நோய் குறித்த விழிப்புணர்வு இருக்கவேண்டும். அதற்காக, எப்போதும் பயந்துகொண்டே இருக்கக்கூடாது. கொரோனா வந்துடுச்சுன்னதும் எனக்கு பயமே வரல. உலகத்துக்கே வந்திருக்கு. நிறையத்தலைவர்கள், டாக்டர்கள், காவல்துறையினர்ன்னு மக்கள் பணியாளர்களுக்கு வந்திருக்கு. அவங்க எல்லாம்  மீண்டு வந்துக்கிட்டுத்தான் இருக்காங்க. அதேமாதிரி, நாமும்  வந்துடுவோம்ங்குற நம்பிக்கைதான்  இதிலிருந்து மீண்டுவர முக்கியக்காரணம். எனக்கு கொரோனா பாதித்தவுடனேயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஃபோன் செய்து,  “எப்படி இருக்கீங்க அக்கா? உடம்பைப் பார்த்துக்கோங்க”ன்னு ரொம்ப அன்பா ஆதரவா பேசினார். அதேமாதிரி, அமைச்சர்களும் ஃபோன் செய்து நலம் விசாரித்தார்கள். இதுவும், எனக்கு நோயை எதிர்த்துப்போராடும் வலிமையைக் கொடுத்தது. எனது மகன்கள் அவரவர் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்துவருகிறார்கள். கொரோனா வந்ததிலிருந்து தினமும் மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஃபோன் செய்து வீடியோக்கால் மூலம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதுதான், எனக்கு மிகப்பெரிய பாசிட்டிவ் எனர்ஜியாக இருந்தது.  கொரோனாவையும் வெல்ல வைத்தது.  

நாம, எவ்வளவுக்கு எவ்வளவு பயப்படுறோமோ அவ்வளவுக்கவ்வளவு நோயோட பாதிப்பு அதிகமாகும். பயமே ஒரு நோய்தான். நம்ம மனசு தைரியமா எதிர்த்து போராட ஆரம்பிக்கும்போதுதான் நம்ப உடம்பும் நோயை எதிர்த்து சண்டையிடும். ஒரு நோயை விரட்டுறதுக்கு உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் மட்டும் போதாது. பயமின்மை, நம்பிக்கை என்கிற மனதுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் தேவை. அதாவது, உடம்பும் மனசும் ஒற்றுமையோடு சேர்ந்து போராடணும்” என்று அதே அதிரடி வளர்மதியாக பேசுபவரிடம் ‘ கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்?’ என்று நாம் கேட்டபோது,

      “கொரோனா சென்னையில பரவ ஆரம்பிச்சதுமே மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துகொண்டிருந்தேன். அப்படி, வெளியில வரும்போது தொற்றியிருக்கலாம். பேரிடர் சூழலில்  உதவிகளை செய்யாம வீட்டுக்குள்ள பயந்துக்கிட்டு ஒடுங்கிக் கிடக்கமுடியாது. காற்று மூலமா வந்ததா? மனிதர்கள் மூலமா வந்ததா?ன்னு எனக்கு தெரியாது. லேசா ஜுரம் அடிக்கிறமாதிரி இருந்தது. டாக்டர்களிடம் போயி காண்பிச்சதுக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது, கொரோனா  உறுதியானது. ஏழு நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். மருத்துவர்கள் கொடுத்த சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அனைத்தையும் பின்பற்றினேன். ஏழு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்தபிறகும், பத்து பதினைந்து நாட்கள் வீட்டு தனிமையில் இருக்கச் சொன்னார்கள். இன்னும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறிப்பாக, என்னால் யாருக்கும் பரவிவிடக்கூடாது என்பதற்காக இன்னும் 22 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன். அந்த, தனிமைப் படுத்திக்கொள்ளலின்போது டிவியில் செய்திகள் பார்ப்பது மட்டுமல்ல, புத்தகம் எடுத்துவரச் சொல்லியும் படித்துக் கொண்டிருந்தேன்.

தினமும் கபசுர குடிநீரையும் நிறைய காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொண்டேன். மாலையில் தினமும் சுண்டல் சாப்பிட்டுவேன். தனிமைப்படுத்தலின்போது யாரையும் நான் அனுமதிக்கவில்லை. ஒரே வீட்டுல இருந்தாலும், ஏதாவது முக்கியமாக பேசவேண்டும் என்றால்கூட கணவரும் நானும் ஃபோனில்தான் பேசிக்கொண்டோம். அந்தளவுக்கு, விழிப்புணர்வோடு இருந்தேன்.

அரசியல்வாதிகள் எப்போதும் மக்களுக்காக களப்பணியாற்றிக் கொண்டே இருப்பவர்கள். இந்த, கொரோனாவால் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும்போது வெளியில் போய் மக்களுக்கு எதுவும் முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்தது. இப்போது, வழக்கமான வாழ்க்கைக்கு வந்துட்டேன். கொரோனா, வந்தமாதிரி, அப்படியே போயிடும்னு நான் நினைச்சபடியே போனதுல நான் ரொம்ப சந்தோஷம்.  இனி, என்னால முடிந்த அளவுக்கு தனிமனித இடைவெளியுடன்  மக்களுக்காக ஓட ஆரம்பித்துவிடுவேன்” என்கிறார் உறுதியுடன்.  

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com