ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கையர்... மீட்சி அளிக்கும் இளைஞர் ஏசுராஜா

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கையர்... மீட்சி அளிக்கும் இளைஞர் ஏசுராஜா
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த திருநங்கையர்... மீட்சி அளிக்கும் இளைஞர் ஏசுராஜா

சென்னை பெருங்களத்தூரில் வசிக்கும் இளைஞர் ஏசுராஜா. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கையர் போன்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உதவிகள் செய்துவருகிறார். பால்புதுமையினர் எனப்படும் LGBTQIA+ சமூகத்தினருக்கான வேலைவாய்ப்பு, கல்வி, மனநல ஆலோசனை மற்றும் அவர்களின் உரிமை மீட்சிக்காக மகிழ்வன் என்ற தொண்டு நிறுவனத்தையும் தொடங்கி நடத்திவருகிறார்.

"மனரீதியிலான ஊக்கமளிப்பதற்கும், தற்கொலைகளைத் தடுப்பதற்கும் திறன்பெற்ற நபர்கள் மூலம் மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறோம். அத்துடன், பால் புதுமையின சமூகத்தினரை, அவர்களுக்கு எதிரான பாகுபாடு, வெறுப்புணர்வு, வன்முறை போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கமாகவும் செயல்படுகிறோம்" என்று பேசத் தொடங்குகிறார் ஏசுராஜா.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பால்புதுமையினர், முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் எண்ணத்துடன் 'மகிழ்வன் உங்களுக்காக' எனப்படும் என்ற ஒரு புதிய திட்டத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.

"நாங்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு மற்றும் மாளிகைப் பொருட்களை இத்திட்டத்தின் மூலமாக கொண்டு சேர்க்கிறோம். நாங்கள் இதுவரை முன்களப்பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கைவிடப்பட்ட முதியோர்கள் உட்பட பலருக்கும் உதவிகள் செய்துள்ளோம்" என்கிறார்.

இந்த திட்டத்தின் நீட்சியாக, பல்வேறு LGBTQIA+ அடையாளங்களைக் குறிக்கும் கொடிகளைக் கொண்ட முகக்கவசங்களை தைத்து விற்பனை செய்துவருகிறார்கள். அதன் மூலமாக கிடைக்கும் பணமும், ஊரடங்கால் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமான பணிகளான மனநல ஆலோசனை, கல்வி, வேலைவாய்ப்புக்கான உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.

"எங்கள் திட்டத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, இன்னும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பலநூற்றுக்கணக்கான மக்களுக்கும் உதவிகளைச் செய்ய நினைக்கிறோம். எங்களுடைய உதவிக்கு நன்கொடை அளிக்கவோ, முகக்கவசம் வாங்கவோ அல்லது இதர கேள்விகள் கேட்கவேண்டும் என்றாலோ +918754411849 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது magizhvanfoundation@gmail.com என்ற இணைய முகவரிக்கு எழுதுக" என்று கேட்டுக்கொள்கிறார் ஏசுராஜா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com