2022ல் உலகத்தை துயரத்தில் ஆழ்த்திய மிக முக்கிய 10 பிரபலங்களின் இறப்பு!

2022ல் உலகத்தை துயரத்தில் ஆழ்த்திய மிக முக்கிய 10 பிரபலங்களின் இறப்பு!
2022ல் உலகத்தை துயரத்தில் ஆழ்த்திய மிக முக்கிய 10 பிரபலங்களின் இறப்பு!

இந்த ஆண்டு பல எதிர்பாராத இழப்புகளை இந்த உலகம் சந்தித்து. மிக முக்கியமாக நீண்ட காலம் பிரிட்டனை ஆட்சி செய்த ராணி எலிசபெத் மற்றும் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் லதா மங்கேஸ்கர் என பலர் உடலால் நம்மை விட்டு பிரிந்தனர். இவர்களை போல உடலால் பிரிந்து நினைவால் நம்மோடு வாழும் மிக முக்கிய 10 பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. லதா மங்கேஷ்கர்

இந்திய இசை உலகில் பலரால் பாராட்டப்பட்டு ஹிந்தி, தமிழ், மராத்தி என 36 மொழிகளில் 25,000-த்திறக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி எட்டு தசாப்தங்களுக்கு தன் குரலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்த பாடகி லதா மங்கேஷ்கர், தனது 92 வயதில் பல உறுப்பு செயலிழப்பு காரணமாகப் பிப்ரவரி 6, 2022 அன்று காலமானார். இவரின் இறப்பு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா மற்றும் தாதாசாகேப் பால்கே விருது உட்பட இன்னும் பல உயர்ந்த விருதுகளை வாழ்நாளில் குவித்துள்ளார்.

2.ராணி எலிசபெத் II

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மிக நீண்ட காலத்துக்கு ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத், செப்டம்பர் 8, 2022 அன்று தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் காலமானார். இவர் 70 ஆண்டுகள் மற்றும் 214 நாட்கள் பிரிட்டனை ஆட்சி புரிந்தார். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்த சாதனையையும் செய்தார். இவர் தனது வாழ்நாளில் வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தாட்சர் மற்றும் சமீபத்தில் போரிஸ் ஜான்சன் உட்பட 15 பிரதமர்களை நியமித்திருக்கிறார். இவரது இறுதி ஊர்வலத்தில் பல லட்சம் பேர் ஒருசேர இணைந்து, அவரது பூத உடலுக்கு ஒரேநேரத்தில் அஞ்சலி செய்தனர். அதில் உலகத் தலைவர்கள் பலரும் அடங்குவர்.

இறுதிச் சடங்கிற்கு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நான்கு நாட்கள் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலைக் காண, ஆயிரக்கணக்கான மக்கள் மத்திய லண்டனின் தெருக்களில் குளிரில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செப்டம்பர் 19 அன்று, கோட்டையில் உள்ள அவரது கணவர் இளவரசர் பிலிப்பின் கல்லறை அருகில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

3. ஷேன் வார்னே

கிரிக்கெட்டின் ஜாம்பவான் எனக் கூறப்படும் ஷேன் வார்ன் தன்னுடைய 52 வயதில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மார்ச் 4, 2022 அன்று தாய்லாந்து தீவில் விடுமுறையிலிருந்தபோது, மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். இது உலகளவில் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் வார்னே, 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரின் இறப்பு சர்ச்சையினை உருவாக்கிய நிலையில், பிரேதப் பரிசோதனை மூலம் மரணத்திற்கான காரணம் 'இயற்கை காரணங்கள்' என அதிகாரபூர்வமாக சொல்லப்பட்டது.

4.முலாயம் சிங் யாதவ்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவரான முலாயம் சிங் யாதவ் இந்தியாவின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்டவர். ஆதரவாளர்கள் மத்தியில் 'நேதாஜி' என்று அன்பாக அழைக்கப்படும் இவர், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பத்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை உத்தரப்பிரதேச முதல்வராகவும் இருந்துள்ளார். உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு மாத சிகிச்சை காலத்துக்குப் பிறகு, சரியாக அக்டோபர் 10, 2022 அன்று குர்கான் மருத்துவமனையில் தனது 82 வயதில் காலமானார். அவரது சொந்த ஊரான சைஃபாயில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

5.ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

தலால் தெருவின் பிக் புல் என்று அழைக்கப்படும் ஜுன்ஜுன்வாலா, தனது துல்லியமான பங்குச் சந்தை கணிப்புகள் மற்றும் முதலீட்டுத் திறன்களுக்காக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு சின்னமாக இருந்தார். 1985-ல் ரூ. 5,000 மூலதனத்துடன் தொடங்கிய இவரின் பங்குச் சந்தை வாழ்க்கை, மேலும் அவரது கணிப்பு மற்றும் முதலீட்டுத் திறன் மூலம் $5.8 பில்லியின் (அவர் இறக்கும் வரையில் அவர் ஈட்டிய) செல்வத்தை ஈட்டியது. இவர் ஆகஸ்ட் 15, 2022 அன்று சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் காலமானார்.

6. சைரஸ் மிஸ்திரி

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்திரி, செப்டம்பர் 4, 2022 அன்று அவர் அமர்ந்திருந்த Mercedes-Benz வாகனம் பல்கர் மாவட்டத்தில் அகமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலைப் பிரிப்பான் மீது மோதியதில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54. சுமார் 29 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், மிஸ்திரி இறக்கும் போது இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். அவர் தனது நிறுவனமான சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளை வைத்திருந்தார்.

7. ஷின்சோ அபே

ஜப்பானின் நாரா நகரில், ஜூலை 8, 2022 அன்று லிபரல் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளருக்காகப் பிரச்சார உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, படுகொலை செய்யப்பட்டார். ஜப்பானில் ஒலிம்பிக் நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக இவர் இருந்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக அவரது ஆட்சி பின்னடைவைச் சந்தித்தது. அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அபே உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

8. பண்டிட் ஷிவ்குமார் சர்மா

ஹிந்துஸ்தானி இசையின் வித்தகராகத் திகழ்ந்த பண்டிட் ஷிவ்குமார் சர்மா, தன்னுடைய 13 வயதாக இருந்தபோது சந்தூர் இசைக்கருவி பாடங்களை நடத்தத் தொடங்கினார் மற்றும் 17 வயதில் தனது முதல் மேடை நிகழ்ச்சியை வழங்கினார். சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் பத்ம விருதுகளைப் பெற்றுள்ள இவர், ஷர்மா சௌராசியாவுடன் இணைந்து பல ஆல்பங்களை இயற்றியுள்ளார். மேலும் அனில் கபூர் மற்றும் ஸ்ரீதேவி நடித்த லாம்ஹே, சாந்தினி மற்றும் ஃபாஸ்லே போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இத்தகைய பெருமைகளையுடைய சர்மா, சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு மே 10, 2022 அன்று 84 வயதில் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.

9. பப்பி லஹிரி

ஜிம்மி ஜிம்மி, தம்மா தம்மா, நான் ஒரு டிஸ்கோ டான்சர், ஜவானி ஜான் இ மேன், பாப்பி லஹிரி அல்லது பாப்பி டா போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை உருவாக்கி ஹிந்தி திரையுலகத்தை இசை வறட்சியிலிருந்து மீட்டெடுத்தவர் பப்பி லஹிரி. 1980கள் மற்றும் 1990களில் இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட டிஸ்கோ இசையைப் பிரபலப்படுத்தியவர் இவர்தான். இவர் இசையமைத்த லஹிரியின் வேர்ல்ட் பீஸ், லவ் & ஹார்மனி ஆல்பம் 2012 இல் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் ஐந்து ஆல்பங்களில் ஒன்றாகும். டிஸ்கோ இசை மூலம் மட்டும் மக்கள் மனதை கொள்ளையடிக்காமல், சல்தே சல்தே, ஜக்மீ, ஆங்கன் கி காளி, லால்சி மற்றும் ஐத்பார் உள்ளிட்ட படங்களின் மெல்லிசைப் பாடல்களாலும் ரசிகர்களின் மனதை வென்றார் இவர். அப்படிப்பட்ட இவர் கடந்த பிப்ரவரி 15, 2022 அன்று மும்பையில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தார். அப்போது அவருக்கு வயது 69.

10. சித்து மூஸ் வாலா.

பஞ்சாபில் பிறந்த 28 வயதான ராப்பர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் சித்து மூஸ் வாலா, மே 29, 2022 அன்று மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் இருந்த போது, அடையாளம் தெரியாத ஆசாமிகளால் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தலைமுறையின் சிறந்த பஞ்சாபி கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் சித்து, உலகளாவிய இசை மேடையில் பாரம்பரிய பஞ்சாபி படல்களைப் பாடி பெருமை சேர்த்தவர். அவரது முதல் ஆல்பமான பிபிஎக்ஸ் 1, 2018 இல் வெளியான பிறகு பில்போர்டு கனடிய ஆல்பங்கள் தரவரிசையில் 66 வது இடத்தில் இருந்தது. அதே நேரத்தில் அவரது சிங்கிள் 47 யுஎஸ் சிங்கிள்ஸ் தரவரிசையிலும் இடம் பிடித்தது.

இவர்களன்றியும் பல்வேறு பிரபலங்கள் இந்த 2022-ல் நம்மை விட்டு உடலால் பிரிந்தனர். இருப்பினும் அவர்களின் நோக்கங்களாலும் கடந்த கால செயல்களாலும், கலையாலும் என்றும் நினைவாக அவர்கள் நம்முடனே இருப்பர்.

-சுஹைல் பாஷா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com