'ஆப்' இன்றி அமையா உலகு 16: திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தவிர்க்க உதவும் செயலி

'ஆப்' இன்றி அமையா உலகு 16: திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தவிர்க்க உதவும் செயலி
'ஆப்' இன்றி அமையா உலகு 16: திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தவிர்க்க உதவும் செயலி

உலக அளவில் சுமார் 4.2 பில்லியன் மக்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது சுகாதாரமற்ற கழிப்பறை வசதியை பயன்படுத்தி வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சியில் சுகாதாரமும் மிக முக்கியமானதாகும். இன்றைய கொரோனா சூழலில் சுகாதாரத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. 

திறந்த வெளியில் அசுத்தம் செய்வதால் எண்ணற்ற சுகாதார சீர்கேடுகளுக்கு வழிவகை செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. அதோடு சுற்றுப்புறச் சூழலும் அதனால் பாதிக்கப்படுகிறது. அதற்கு தீர்வு காணும் நோக்கில் கிராமம், நகரம் என ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்திய அரசு வீட்டுக்கு ஒரு கழிவறை வேண்டும் என்ற விழிப்புணர்வை கொடுத்து வருகிறது. இத்தகைய சூழலில் திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை (OPEN DEFECATION) தவிர்க்க உதவுகிறது Toilet Finder என்ற மொபைல் போன் செயலி. 

இந்த செயலியின் சிறப்பம்சங்கள்!

>ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம். 

>இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் பொதுக் கழிப்பிடங்கள் மற்றும் கார்ப்பரேட் உணவகங்கள், ஓய்வு விடுதிகள், மருத்துவமனைகளில் அமைந்துள்ள கழிப்பிடங்கள் குறித்த விவரங்களை GPS மற்றும் இணையத்தின் உதவியுடன் ஐகான்களாக (Icons) அறிந்து கொள்ளலாம். 

>தெரியாத இடங்கள் மற்றும் ஊர்களுக்கு செல்லும் நபர்கள் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகே அமைந்துள்ள கழிப்பிடங்கள் குறித்த விவரங்களை லிஸ்டாக (List) தெரிந்து கொள்ளலாம்.

>வரைபடத்தின் (Map) மூலம் கழிப்பிடம் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கான பாதையையும் வழிகாட்டுகிறது இந்த அப்ளிகேஷன். அதற்காக கூகுள் மேப்பை போன்றே இந்த அப்ளிகேஷனில் உள்ள மேப்பும் செயல்படுகின்றது. 

>மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள கழிப்பறை, கட்டண கழிப்பறையா அல்லது இலவச கழிப்பறையா என்பதையும் அறிந்து கொள்ளலாம். 

>மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய வகையிலான கழிப்பறைகள் குறித்த விவரங்களையும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும். 

>அதேபோல் பயனர்கள் தங்களுக்கு தெரிந்த பகுதிகளில் அமைந்துள்ள கழிப்பறைகளையும் இந்த அப்ளிகேஷனில் உள்ள ‘Add Toilet’ ஆப்ஷன் மூலம் அப்லோட் செய்யலாம்.

>மேலும் பயனர்கள் இந்த அப்ளிகேஷன் மூலமாக கழிப்பறைகளுக்கு ஸ்டார் ரேட்டிங் கொடுக்க முடியும். 

>அதே போல இதில் குறிப்பிடப்பட்டுள்ள கழிப்பறை செயல்பாட்டில் இல்லை என்றால் ‘This Toilet Does not Exist’ என்ற ஆப்ஷன் மூலம் செயலியின் வடிவமைப்பாளர்களுக்கு தெரிவிக்கலாம். 

>உலகின் அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ள கழிப்பறைகள் குறித்த விவரங்களை இந்த அப்ளிகேஷன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

>இருந்தாலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள கழிப்பறை சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் உள்ளதா? இல்லையா? என்பதை பயனர்கள், வடிவமைப்பாளர்களுக்கு தெரிவிக்க முடியாதது ஏமாற்றம்தான். அந்த ஆப்ஷனை வரும் அப்டேட்களில் வடிவமைப்பாளர்கள் தவறாமல் சேர்க்க வேண்டும். ஏனெனில் பெரும்பாலான பொதுக் கழிப்பறைகள் சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் இருப்பதில்லை என்ற விமர்சனங்கள் இருப்பதுண்டு. 

முற்றிலும் திறந்த வெளியில் அசுத்தம் செய்வதை தடுப்பதற்காக இந்த அப்ளிகேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அப்ளிகேஷன் லிங்க் : ஆண்ட்ராய்டு! | ஆப்பிள் iOS!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com