உரிமைக்காக போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிர் நீத்த நாள் இன்று!

உரிமைக்காக போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிர் நீத்த நாள் இன்று!
உரிமைக்காக போராடிய மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிர் நீத்த நாள் இன்று!

1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலியில் நடத்திய பேரணியின்போது காவல்துறை நடத்திய தடியடியில் 17 பேர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். 1929-ம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் 8,374 ஏக்கர் நிலத்தை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம் குத்தகைக்கு எடுத்தது பி.பி.டி.சி நிறுவனம். 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அந்த நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. ஆளும் காங்கிரஸ் கட்சியிடம் குத்தகையைப் புதுப்பித்துக் கொண்டது பி.பி.டி.சி நிறுவனம்.

பல தலைமுறைகளாக வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து 1999-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவகலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதையடுத்து கணவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்துதான், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும்போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு மனு கொடுக்கப் பேரணியாக சென்றனர்.

அந்த அரசியல் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் காவல்துறைக்கும் மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காவல்துறை மக்கள் மீது தடியடி நடத்தியது. இதில், மக்கள் நாளாபக்கமும் சிதறி ஓடினர்.

தடியடியில் இருந்து தப்பிக்க வழிதேடி பெரும்பாலானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றனர். இதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதாலேயே தற்காப்புக்காக போலீசார் தடியடி நடத்தவேண்டியதாயிற்று என்று அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். ஆனால் காவல்துறை திட்டமிட்டே இந்த தடியடியை அரங்கேற்றியதாக அப்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்கள் ஜூலை 28-ம் தேதி அரசால் விடுவிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து 5 நாள்களில் மிகுந்த பாதுகாப்போடு சடலங்களை அரசே புதைத்தது. உயிரிழந்தவர்களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் 20 வருடத்திற்கு மேலாகியும் இன்னும் அந்த கோரிக்கை ஏற்கப்படாமலெ இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com