காமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் நாகேஷ்

காமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் நாகேஷ்

காமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் நாகேஷ்
Published on

காமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் என்று சினிமா ஆர்வளர்களால் புகழப்பட்ட நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று. இந்நாளை அவரது ரசிகர்கள் பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். தனது மெலிந்த தேகத்தை வைத்து கொண்டு அவர் சாதித்தவை ஏராளம். சாதாரணமான ஒரு பிரேம் வைத்தால் கூட அதில் தனது அசாதாரணமான பங்களிப்பை அழுத்தமாக பதிய வைத்துவிடுவார் என்று சக நடிகர்களால் புகழப்பட்டவர். இந்தப் புகழ் சிலருக்கு நடுக்கத்தை கூட வர வழைத்தது. அந்தளவுக்கு திரை மொழியும் உடல் மொழியும் கைவர பெற்றவர் நாகேஷ்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட நாகேஷ் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவர் பிறந்தது தாராபுரம் அருகிலுள்ள கொழிஞ்சிவாடி. வீட்டில் அவருக்கு குண்டப்பா என்ற செல்லப் பெயரும் இருந்தது. தாரபுரத்தில் பள்ளிப்படிப்பு, பிஎஸ்ஜியில் கல்லூரி படிப்பு என அடுத்தடுத்து வளர்ந்தார். அவருக்கு ரயில்வே துறையில் எழுத்தராகப் பணி கிடைத்தது. இளம் வயதில் வீட்டில் கோபித்து கொண்டுபோய் ஹைதராபாத் நகரில் ரேடியோ கடை மற்றும் ஊறுகாய் கம்பெனியில் எடுபிடியாக வேலை பார்த்தும் இருக்கிறார்.

டாக்டர் நிர்மலா நாடகத்தில் தை தண்டபாணி என்ற கதாபாத்திரம் மூலம் நாடகத்துறையில் நுழைந்தார். அதில் தை தை என அவர் குதிக்கும் ஸ்டைலை கண்டு அவரை ரசிகர்கள் தை நாகேஷ் என்று அழைத்தனர். தாமரைகுளம் மூலம் தமிழில் அறிமுகமான இந்த முகம் ஆயிரம் படங்கள் வரை எட்டும் என யாரும் எதிர்பாக்கவில்லை. அதற்கும் சில காரணங்கள் இருந்தன. தாமரைக்குளம் ஷூட்டிங்கின்போது இவர் சரியாக நடிக்கவில்லை. உடனே உதவி இயக்குநர்கள் வந்து நாகேஷைக் கடிந்தனர். உடன் நடித்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் நாகேஷ். ‘மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி’ என்று ராதா கூறியதாக பின்னாளில் சிலர் பேட்டி கொடுத்தனர்.

இவரால் நடிக்க முடியும் என நம்பிக்கையை கொடுத்தது காதலிக்க நேரமில்லை. அதன்பின் அவருக்கு ஏறுமுகம் தான். சர்வர்சுந்தரம், எதிர்நீச்சல், நீர்க்குமுழி இவை பெரிய சாதனை படைத்தன. தில்லானா மோகனாம்பாளும், திருவிளையாடலும் அவர் நடிப்பை உச்சத்திற்கு இட்டு சென்றன. நாகேஷுக்கு சிரிக்க மட்டுமே தெரியும் என எதிர்பார்த்தவர்களை அவர் தனது நடிப்பால் அழவும் வைத்தார். அந்தளவுக்கு உருக்கம் அவர் முகத்திற்கு ஒத்து போனது. அபூர்வ சகோதர்களில் அவர் வில்லன் வேடம் எடுத்தது பெரிய ஆச்சர்யம். அவர் உடம்புக்கும் நடைக்கும் வில்லத்தனம் சரியாக வருமா? என யோசிக்க விடாமல் நடிப்பால் பேச வைத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரட்டை குதிரைகளில் மாறி மாறி சவாரி செய்தார், நாகேஷ்.

கமல்ஹாசன் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாகேஷை பாராட்டாமல் இருந்ததே இல்லை. அதன் பின் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என கமல் இவரை இறுக்கமாக பிடித்து கொண்டார். தசாவதாரம் கடைசி நாள் ஷூட்டிங் வந்து நடித்துக் கொடுத்தவர் இனி நம்மால் நடிக்க முடியாது என முடிவு செய்தார். உள்மனதில் ஏதோ உறுத்தல். உடம்பு ஒத்துழைக்கவில்லை. கடைசியாகச் சொன்ன வாக்கியம் ‘என் கடைசிப் படம் இது. நல்ல படம். I am honoured டா கமல்!’ என்றார்.

இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் 1933-ல் பிறந்தார். 2009-ல் தனது 76வது வயதில் மறைந்தார். 30 ஆண்டுகள் திரை ரசிகர்களை நடிப்பால் கட்டிப்போட்ட இந்தக் கலைஞனுக்கு அரசு சார்பில் எந்த விருதுகளும் வழங்கப்படவில்லை. விருதுகள் மூலம் கிடைக்கும் கவுரவம் பற்றி அவர் கவலைப்படவுமில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com