"கொடிது கொடிது வறுமை கொடிது": இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்.!

"கொடிது கொடிது வறுமை கொடிது": இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்.!
"கொடிது கொடிது வறுமை கொடிது": இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்.!

உலகின் கொடுமையான விஷயம் வறுமைதான், மனிதர்களின் அத்தனை வாழ்வியல் பிரச்னைகளுக்கும் காரணமாக இருப்பது வறுமைதான்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலக வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் வறுமை நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விழிப்புணர்வினை உருவாக்கும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

முக்கியமாக பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்கத்துடன் 1992 ஆம் ஆண்டுமுதல் ஐநா சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. உலகில் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக  பாரிஸ் நகரில் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு உலகில் உள்ள வறுமையில் வாடும் மக்களில் பாதி பேர் இந்தியா, நைஜீரியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, வங்கதேசத்தில் வாழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. ஆனால் சமீபத்திய கணிப்புகளின்படி அதிக மக்கள் ஏழ்மையில் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை விட நைஜீரியா முந்திவிட்டது அல்லது முந்தும் நிலையில் உள்ளது என தெரிய வந்துள்ளது, இரு நாடுகளிலும் ஏழ்மையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் சற்று குறைவாக உள்ளது.

உலக அளவில் அதிக அளவிலான வறுமை நிலையில் வாழும் மக்கள் ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. தினமும் 1.90 டாலருக்கு குறைவான வருவாய் உள்ள மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மக்களாக கணக்கிடப்படுகின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் 1.90 டாலர் அல்லது அதற்கு குறைவான வருவாய் உள்ள 10 பேரில் 9 பேர் சஹாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்காவில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வறுமை என்பது வெறுமனே மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை மட்டுமே இல்லை. வறுமை காரணமாக மக்கள் உணவு, குடிநீர், உடை, சுகாதாரம்,வாழ்விடம், கல்வி போன்ற எதுவுமே கிடைக்காத சூழலில் வாழ்கின்றனர். எனவே வறுமை ஒழிப்பு என்பதுதான் மனித இனத்தின் பரிபூரண விடுதலையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com