பணத்தைக் பாதுகாப்பது சரி...! ஆனால், நேரத்தை காப்பது?

பணத்தைக் பாதுகாப்பது சரி...! ஆனால், நேரத்தை காப்பது?

பணத்தைக் பாதுகாப்பது சரி...! ஆனால், நேரத்தை காப்பது?

நிஜம்தான். இந்திய நேரத்தைத் துல்லியமாக பாதுகாக்க, மத்திய அரசு 100 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றைத் தொடங்க உள்ளது. இதற்கு முதல்கட்டமாக 2018-19ம் ஆண்டுக்கான, அண்மைய பட்ஜெட்டில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு, உடனடி பணிகள் ஆரம்பமாகும். அடுத்தடுத்த தேவைகளின் போது, கூடுதல் நிதி வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

படிக்கவும், கேட்கவும் சற்றே ஆச்சரியமாக... புருவத்தை உயர்த்த வைப்பதாக இருந்தாலும், அண்மைய பட்ஜெட்டில் அதிகமானவரின் பார்வைக்கு எட்டாத விஷயம் இது. கையில் கட்டியிருக்கும் வாட்ச்(Watch)சிலேயே நேரத்தை தெரிந்து கொள்ள முடியும்போது, அதை "பாதுகாக்கிறேன் பேர்வழி" என, பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதா என்ற கேள்வி கூட எழலாம். 

இதை புரிந்து கொள்வதற்கு, அடிப்படையில் இருந்து அணுகுவதுதான் சரி! உங்கள் வாட்ச் அல்லது கடிகாரம் காட்டும் நேரம் சரியா? அது இந்திய நேரம்தானா..? இது அவ்வளவு முக்கியமான கேள்வியாகத் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், நேரத்தின் பங்கு... குறிப்பாக, மிக நுட்பமான - எந்தெந்த விஷயங்களில்.... எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொண்டால், 'இது' தவிர்க்க முடியாத கேள்வி என்பதை ஒப்புக் கொள்வோம். 

விஷயத்துக்கு வருவோம். உங்கள் கையில் உள்ள வாட்ச்... அல்லது, வீட்டின் சுவரில் தொங்கியபடி, உங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம் போன்றவை இப்போது எப்படி இயங்குகின்றன? 'அதில் உள்ள பேட்டரி தரும் சக்தியின் மூலம்தான்' என்பதை, குழந்தைகள் கூட சொல்லிவிடுவார்கள். இந்த வாட்ச்சோ, அல்லது கடிகாரமோ இயங்கப் பயன்படுத்தப்படும் பேட்டரியில் மின் அழுத்தம் தீர்ந்து போனால், கடிகார ஓட்டம் நின்றுவிடும்; சரியான நேரம் காட்டுவதில் வாட்ச் தவறிவிடும். அந்த மாதிரி சூழலில், பழைய பேட்டரியை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக, புதிய பேட்டரியை மாற்றி, வாட்ச்சிலும், கடிகாரத்திலும் சரியான நேரத்தை திருத்தி வைத்துவிட்டால் வேலை முடிந்தது. ஓகே! தனிப்பட்ட நபர்களுக்கு இது சரி... ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்கும், அதன் நிர்வாகத்தில் 'நேரம்' தொடர்பான பல விஷயங்களுக்கும் இது சாத்தியமா? 

அதை தாண்டி, ஒரு நாட்டின் நேரம் காட்டும் கடிகாரம் எது...? அது எங்கிருக்கிறது...? அதைக் கண்காணித்து பராமரிப்பது யார்....? அதில் நேரத்தை மாற்றி வைப்பது சாத்தியமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன. 

வீட்டிலோ, அலுவலகத்திலோ, பள்ளி அல்லது கல்லூரிகளிலோ நாம் பயன்படுத்தும் / பயன்படுத்திய கம்ப்யூட்டரில், அதை அணைத்து விட்டாலும், பின்னர், மீண்டும் பயன்படுத்தத் தொடங்கும்போது, அதில் நேரம் சரியாகக் காட்டப்படுவதை கவனித்திருக்கிறீர்களா? கம்ப்யூட்டரின் உள்ளேயே, 'அணையா விளக்கா'க எப்போதும் இயங்கும் வகையில், அந்த 'நேரங்காட்டி-கடிகாரம்' வடிவமைக்கப்பட்டுள்ளது. குவார்ட்ஸ் கடிகாரம் என்று கூட சொல்வார்களே! அதுபோன்றது. இதேபோல, ஒரு ஏற்பாடு, ஆனால் மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டு, அதுவே ஒரு நாட்டின் நேரத்தை... ஏன் மற்ற பல நாடுகளிலும், அந்தந்த நாடுகளின் நேரங்களை காட்டிக் கொண்டுள்ளன. இவை ஏற்கப்பட்டு, அதுவே சர்வதேச நாடுகளால் பரவலாக அங்கிகரிக்கப்பட்டு இப்போது நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கடைபிடிக்கப்படும் நேரம், IST - Indian Standard Time,அதாவது "இந்திய நேரம்" என உலகமே ஏற்றுக் கொண்டு கடைபிடிக்கிறது. 

இப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நேரத்தை, இம்மி பிசகாமல் கடைபிடிக்க வேண்டியது அவசியம். மற்ற இடங்களில் எப்படியோ! ஆனால், நிதி தொடர்பான - வங்கி, கிரிடிட் கார்ட், ஆன்லைன் வணிகம், நெட் பேங்கிங், ஏடிஎம் போன்ற விஷயங்களில் மட்டுமின்றி, தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து, நாட்டின் பாதுகாப்பு, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இடர்களை கையாள்வது, ஏவுகணை, செயற்கைக் கோள் உள்ளிட்ட அதிநவீன ஆராய்ச்சிப் பணிகள் என பல இடங்களில் - ஒரு நாட்டின் நேரத்தைத் துல்லியமாக பராமரிப்பது அவசியமாகிறது.

சரி.... ஒவ்வொரு நாட்டுக்கும் "ஒரு நேரம்", என்பது எப்படி முடிவு செய்யப்படுகிறது? நியாயமான, அறிவார்ந்த கேள்விதான். 

முதலில் பூமி கோளத்தின் மீது, மேலிருந்து கீழாக, ஒரு கத்தியைக் கொண்டு வெட்டி, இந்தக் கோளத்தை இரு சம பாதியாகப் பிரிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படி வெட்டிய விளிம்பில் ஒரு கோடு வரைந்து, மீண்டும் அந்த இரு அரைக் கோளங்களை முழு பூமியாக இணைத்து விடுங்கள். இப்போது நீங்கள் வரைந்துள்ள ஒரு கற்பனைக் கோடுதான் நேரம் கணக்கிடுவதன் தொடக்கப் புள்ளி. அறிவியல் ரீதியாக, அதை தீர்க்க ரேகை என்கிறார்கள். 

எல்லாருக்கும் பொதுவான நேர கணக்கீடுகள் தேவை என்ற அவசியம் ஏற்பட்ட, அல்லது அத்தகைய உணர்வு வந்த காலத்தில், உலக அளவில் பொருளாதார வலிமையும், படை வலிமையும் கொண்ட நாடாக இருந்தது யுனைடெட் கிங்டம் அல்லது இங்கிலாந்துதான் போல. அல்லது, இந்த யோசனைத் தொடங்கியவரோ, விஞ்ஞானியோ கூட, இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம். அதனால், அவர்களது நாட்டின் தலைநகரம் லண்டனில் உள்ள கிரின்வீச் என்ற இடத்தின் வழியே, பூமியை ஒரு நெடுக்கு கோட்டால் இரு சம பகுதிகளாகப் பிரிக்கும் ஒரு கற்பனைக் கோடு - தீர்க்க ரேகையை ஆரம்ப புள்ளியாக வைத்தார்கள். அதை கிரின்வீச் கோடு எனவும் குறிப்பிட்டார்கள். எல்லோராலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது எப்படி ஆரம்பப் புள்ளியாக ஏற்கப்பட்டதோ, அதே போல, அது நேரக் கணக்கீட்டின் தொடக்கப் புள்ளி என்றும் சொன்னார்கள். அதாவது, ஜீரோ நேரம். அங்கிருந்து பயணித்து மேற்கே முன்னேற... முன்னேற... எத்தனை டிகிரி கோணத்துக்கு முன்னேறி இருக்கிறோமோ, அதைப் பொறுத்து அங்கே நேரம். அப்படியே பூமியை ஒருமுறை சுற்றுவிட்டு, மீண்டும் கிரின்வீச் வந்து சேர்ந்தால், 360 டிகிரி பயணித்து விட்டால், ஒருநாள் முடிந்தது. அடுத்த நாள் தொடங்கிவிடும். இதுதான் நேர நிர்ணயத்தின் அடிப்படை கணக்கீடு. இதை ஏற்றுக் கொண்டு, இன்று உலகம் முழுக்க கடைபிடித்து வருகிறோம்.  

சரி... இந்த ஒரு கணத்தில் கிரீன்வீச் அமைந்துள்ள லண்டனில் 0 நேரம் என்றால், மற்ற இடங்களில்? 

0 டிகிரியில் உள்ள தீர்க்க ரேகை, அதாவது கிரின்வீச் கோட்டில் இருந்து, ஒரு குறிப்பிட்ட நாடு, நகரம் எவ்வளவு கோணத்தில்... தூரத்தில் இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அந்த நாட்டின் நேரத்தை முடிவு செய்கிறார்கள். பரப்பளவில் ஒரு பெரிய நாடு என அமைந்தால், அந்த நாடு முழுமைக்கும் ஒரே நிலையான நேரம் தேவை என கருதும் அந்த நாட்டினர், அவர்களது நாட்டில் இருந்து எந்த நகரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அந்த நகரம், கிரின்வீச் கோட்டில் இருந்து என்ன கோணத்தில் உள்ளதோ... எவ்வளவு தூரத்தில் உள்ளதோ, அதன் அடிப்படையில் கணக்கிட்டு அந்நாட்டுக்கு நேரத்தைச் சொல்கிறார்கள். 

லண்டனில் இப்போது பகல் 12 மணி. அங்கிருந்து தொலைப்பேசி மூலம் அழைத்த நண்பர், இந்தியாவில் உள்ள ஒருவரிடம் பேசினால், இந்தியாவில் உள்ளவருக்கு அப்போது நேரம் என்ன...? 

கிரின்வீச் கோடு எனப்பது, 0 டிகிரியில் உள்ள தீர்க்க ரேகை. அங்கு நேரம் 0 என வைத்துக் கொண்டால், சூரியன் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்வதால், கிரின்வீச்சில் இருந்து மேற்கு நோக்கிய பயணத்தில் எட்டும் நாடாக, ஊராக இருந்தால் அங்கு இன்னும் தாமதமாகத்தான் சூரியன் வரும். எனவே, அதை '-' என குறைத்துக் கொள்வது. மாறாக, நாம் கிழக்கு நோக்கி பயணிக்க வேண்டி வந்தால் '+' என கூட்டிக் கொள்வது எனவும் முடிவு செய்து கடைபிடிக்கப்படுகிறது. எனவே, கிரின்வீச் நகரத்தில் பகல் 12 மணி என்றால், அந்தத் தீர்க்க ரேகையின் வழியே பயணித்து பூமியின் மறு முனையில் 90 டிகிரி தீர்க்க ரேகையில் இரவு 12 மணி என இருக்கும். 

இந்தக் கணக்கின்படி பார்த்தால், கிரின்வீச்சில் பகல் 12 மணி எனும் போது இந்தியாவில் அதைவிட குறைவாக இருக்கும் என்பது வெளிப்படை. ஆனால், எந்த அளவு குறைவு.... 

இந்தியாவில் எந்த நகரம் வழியே பயணிக்கும் தீர்க்க ரேகை, நாம் பின்பற்றும் நேரத்தைக் கணக்கிட உதவியுள்ளது என்ற கேள்வி நியாயமானது. பிரிட்டீஷார் இந்தியாவை ஆண்ட நேரத்தில்தான் இதுபோன்ற விஷயங்கள் நடைமுறைக்கு வந்ததால், அவர்களது இந்திய தலைநகராக இருந்த கொல்கொத்தாத் தேர்ந்தெடுத்தார்கள். அதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டதுதான், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான நேரம். எனவே, அதே முறையில் பார்த்தால், கிரின்வீச் நேரத்தில் இருந்து, இந்திய நேரம் என்பது சுமார் ஐந்தரை மணி நேரம் முன்னதாக உள்ளது. இதனால், கிரின்வீச் நேரத்துடன் 5 மணி 30 நிமிடங்களைக் கூட்டிக் கொண்டால், அதுதான் இந்திய நேரம். இதே வகையில்தான் மற்ற எல்லா நாடுகளின், நகரங்களின் நேரமும் கணக்கிடப்படுகிறது.

அது சரி... இப்போது, இந்தியாவுக்கென முடிவான நேரத்தை எங்கேயிருந்து..., யார்..., எதை வைத்து பராமரிக்கிறார்கள்... இப்போது ஒதுக்க முடிவாகியுள்ள 100 கோடி ரூபாயில் செய்யப் போகும் வேலை என்ன?

இந்தியாவுக்கு என முடிவான நேரத்தை, தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 வெவ்வேறு தேசிய இயற்பியல் ஆய்வகங்களில் (National Physical Laboratory) உள்ள பிரத்யேக கடிகாரங்களை வைத்து கணக்கிட்டு பராமரிக்கிறார்கள். அந்த ஆய்வங்கள் அஹமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், ஃபரிதாபாத் மற்றும் கவுகாத்தி நகரங்களில் உள்ளன. எனவே இந்த 5 இடங்களில் உள்ளவைதான் இந்தியாவின் தேசிய நேரம் காக்கும் கடிகாரம். இந்தக் கடிகார நேரத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மின்னணு இணைப்புகளும், வலை பின்னல்களும், அவற்றின்மூலம் இந்தியா தொடர்பான பணிகளில் உள்ள, மற்ற நாடுகளின் மின்னணு, இணைய வலை பின்னல்கள் என, எல்லாவிடங்களிலும் நொடி பிசகாமல் பராமரிக்க வேண்டியுள்ளது. இது மட்டுமின்றி, கூடுதலாக 2 தேசிய இயற்பியல் ஆய்வகங்களை உருவாக்கி, நேரத்துல்லியத்தை காப்பதும் அரசின் 100 கோடி ரூபாய் மதிப்புத் திட்டத்தில் உள்ளது.  

இந்தத் தேசிய இயற்பியல் ஆய்வகங்களில் உள்ள கடிகாரங்களில் தேசிய நேரத்தை 20 மைக்ரோ நொடி துல்லியத்தோடு பராமரித்து வருகிறார்கள். இப்படி பராமரிக்கப்படும் நேரமே, இந்திய நேரம் - Indian Standard Time (IST)என எல்லா இடங்களிலும், பின்பற்றபடவும், பராமரிக்கப்படவும் வேண்டும் என்பதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO - இஸ்ரோ) துணையோடு, அவர்கள் அனுப்பிய இன்சாட் செயற்கைக்கோள் சேவையையும் பயன்படுத்துக் கொள்கின்றனர். 

இதெல்லாம் சரி... அவ்வளவு துல்லியமாக நேரத்தைப் பராமரிப்பதில் வேறு பலன்கள் எதுவும் உண்டா, என்றால் "உண்டு" என்கிறார்கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, தற்போது குக்கிராமங்கள் வரை அதிகரித்துவிட்ட கைப்பேசிகளின் கட்டணம், இணையத் தொடர்பு சேவைக் கட்டணம் போன்றவை குறைக்கப்பட உதவுமாம். அது மட்டுமின்றி, தேசிய மற்றும் சர்வதேச மின் பகிர்மான வலைபின்னலை பராமரிக்கவும், தானியங்கி ரயில்வே சிக்னல் முறையை சிக்கலின்றி பராமரிக்கவும், சர்வதேச வணிகத்திலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வானிலை ஆய்வுப் பணிகளிலும் இந்த நேரத்துல்லியம் மிக முக்கியம் என்பது அறிவியலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் கூற்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com