வெயில்காலத்தில் முடியை பராமரிக்க சில டிப்ஸ்!

வெயில்காலத்தில் முடியை பராமரிக்க சில டிப்ஸ்!
வெயில்காலத்தில் முடியை பராமரிக்க சில டிப்ஸ்!

வெயில்காலத்தில் சூரியஒளிக் கதிர்களால் சருமம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. தலைமுடியும்தான். சூரிய கதிர்கள் தலைமுடி வறட்சி மற்றும் உடைவை அதிகரிப்பதுடன், வியர்வை சுரப்பையும் அதிகமாக்கி தலையில் ஒருவித பிசுபிசுப்பு மற்றும் ஈரப்பதத்தையும் உருவாக்குகிறது. எனவே சருமத்தை பாதுகாப்பது போலவே தலைமுடி வறட்சியை குறைத்து, பளபளப்புடன் வைத்திருக்க சில வழிகளை பின்பற்றவேண்டும்.

வெயில் எவ்வாறு தலைமுடியை பாதிக்கிறது?

சூரியகதிர்கள் முடியின் வேர்க்கால்களுக்குள் ஊடுருவிச் சென்று பாதிப்பை ஏற்படுத்தி, வறட்சி, வெடிப்பு மற்றும் ஈரப்பதத்தை உருவாக்குகிறது.

புற ஊதாக்கதிர்கள் முடியின் செல்களை பாதித்து, முடியின் நிறத்தை மாற்றுவதோடு, முடியிலுள்ள புரதச் சிதைவை ஏற்படுத்துகிறது. இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. மேலும் தலைமுடியின் வாழ்நாளையும் குறைக்கிறது.

வெயில்காலத்தில் வியர்வை மற்றும் மாசு அதிகரிப்பதால் முடி பிரச்னையும் அதிகரிக்கிறது. மேலும் பொடுகு, முடி வெடிப்பு மற்றும் வறட்சியுடன் முடி உதிர்வை அதிகமாகிறது.

உடல்சூடு அதிகமாக உள்ளவர்களுக்கு தலையில் புண்கள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். யு.வி கதிர்கள் முடியிலுள்ள மெலனினை பாதிக்கிறது. இதனால்தான் முடியின் நிறம் மாறுகிறது.

தலையை மூடிச்செல்லுங்கள்!

வெயில்காலங்களில் அதிக வெயில்நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்கவும். வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது குடை, துப்பட்டா அல்லது தொப்பியைப் பயன்படுத்தவும்.

தளர்வாக இருப்பது அவசியம்!

தலைமுடியை இறுக்கமாக கட்டிவைக்காமல் எப்போதும் தளர்வாக வைத்திருப்பது தலையில் ஈரம் சேராமல் தடுக்கும். மேலும் இறுக்கமாக கட்டும்போது அது உடைந்த முடிகள் விழுவதை எளிதாக்கும்.

அடிக்கடி தலைக்குளிக்க வேண்டும்

அடிக்கடி எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பது அவசியம். மேலும் கண்டிஷ்னர் பயன்பாட்டையும் வழக்கப்படுத்தவேண்டும். இயற்கையான ஷாம்பு மற்றும் கண்டிஷ்னர் சிறந்தது.

முடிதிருத்தம் செய்யவேண்டும்

அடர்த்தியான முடி இருப்பவர்கள் முடிந்தவரை முடியின் நீளத்தை குறைத்துக்கொள்ளலாம். இது முடி பராமரிப்பை எளிதாக்கும்.

அதிக சூடு வேண்டாம்!

சிலருக்கு அடிக்கடி ஸ்ட்ரெய்ட்னர் மற்றும் ட்ரையர் பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். முடியில் அடிக்கடி வெப்பத்தை செலுத்தும்போது முடியின் வேர்க்கால்கள்
பலவீனமாகும். எனவே ட்ரையரை தவிர்ப்பது நல்லது.

நீராகாரங்கள் அவசியம்!

அதிக நீராகாரங்கள் வெயிலிலிருந்து உடலுக்கு மட்டுமல்ல; முடிக்கும் நல்லது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஜூஸ் நீரேற்றத்தை அதிகரிக்கும். அதிக தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம். அதேபோல் நீர்ச்சத்துமிக்க காய்கறிகள் மற்றும் பழங்களையும் எடுத்துக்கொள்ள மறக்கவேண்டாம்.

முடி உதிர்வு மற்றும் உடைதல் அதிகமாக இருப்பவர்கள் வீட்டிலேயே சில ஹேர்மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்தலாம்.

கால் கப் தயிருடன், கால் கப் மயோனிஸ் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை நன்கு கலந்து தலை மற்றும் முடியில் தேய்த்து தலையிலிருந்து நன்கு சீவிவிட வேண்டும். அரைமணிநேரம் கழித்து சுத்தமான நீரால கழுவிவிட முடி பளபளப்பாகும்.

அதேபோல், மயோனிஸுடன் ஆலிவ் எண்ணெயையும் சேர்த்து மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் கற்றாழை, வாழைப்பழம், முட்டை, தேன் போன்றவற்றைப் பயன்படுத்தி மாஸ்க்குகளை தயாரித்து பயன்படுத்தலாம்.

- சினேகதாரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com