எவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ! ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர்

எவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ! ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர்

எவ்வளவு தூரம் ஓடினாலும் உன்ன விடமாட்டேன் ! ரத்தம் வழிய திருடனை சேஸ் செய்த இளைஞர்
Published on

வடிவேல் காமெடியைப் போல் எல்லா தடைகளையும் தாண்டி தாண்டி தப்பித்து ஓடிய திருடனை இளைஞர் ஒருவர் தன்னுடைய உயிரை பணயம் வைத்து பிடித்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. 

வடிவேலு ஒரு படத்தில் தன்னுடைய மனைவியிடம் திருடனை எப்படி துரத்திச் சென்றேன் என்றும் அதில் இருந்து எப்படி திருடன் தப்பித்துச் சென்றார் என்றும் விவரிப்பார். எல்லாவற்றையும் தாண்டி திருடன் வடிவேலுவிடம் இருந்து தப்பித்து விடுவார். இறுதியில் உங்களுடைய பாய்ச்சலான துாரத்தில் இருந்து தப்பித்துச் சென்ற அந்தத் திருடன்தான் வீரன் என்று வடிவேலுவிடம் கூறுவார். இந்த காமெடி மிகவும் பிரபலமானது. அந்த காமெடியே இப்படிதான் ஆரம்பிக்கும், ரத்த களறியுடன் நின்று கொண்டிருக்கும் வடிவேல், ‘பஸ்ஸில் இருந்து மாமா கீழே இறங்கிவந்தேன், என்னை இடித்துவிட்டு அருகில் இருந்த பெண்ணின் தங்கச் சங்கிலி பறித்துக் கொண்டு ஒரு திருடன் ஓடினான்’ என்று மனைவியிடம் கூறுவார்.

இப்படிதான் கர்நாடகாவைச் சேர்ந்த அந்த இளைஞர் மஞ்சுநாத்திற்கும்(23) நிகழ்ந்துள்ளது. தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து நியூஸ் மினிட் செய்தியிடம் அவர் விளக்கி கூறியுள்ளார். மொபைல் போன் சரிசெய்வதற்காக பெங்களூருவின் எம்.ஜி சாலையில் உள்ள கடைக்கு மஞ்சுநாத் கடந்த ஞாயிற்றுக்கிழமை  சென்றுள்ளார். அப்போது, யாரோ ஒருவர் ஹெல்ப், ஹெல்ப் என்று கத்தும் சத்தம் கேட்டுள்ளது. திரும்பி பார்த்தால் பெண் ஒருவரிடம் திருடன் கத்தியை காட்டி மிரட்டி நெக்லஸை பறித்துக் கொண்டு ஓடுகிறான். 

இதுகுறித்து மஞ்சுநாத் கூறுகையில், “ஹெல்ப், ஹெல்ப் என்று சத்தம் கேட்டதை முதலில் நான் ஜோக் என்று தான் நினைத்தேன். தனக்கு அருகில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே போலீஸ் ஒருவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நான் பார்க்கையில் திருடன் ஒருவன் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது நெக்லஸை பறித்துக் கொண்டு ஓடினான். அப்போது எதனையும் யோசிக்கவில்லை. திருடனுக்கு பின்னால் ஓடத் தொடங்கினேன்” என்றார். 

அடுத்த 15 நிமிடங்களில் அடுத்தடுத்து நடந்தது தான் மிகவும் சுவாரஸ்யமானது. திருடன் தஷ்தஹீரை துரத்திக் கொண்டு ஓடுகிறார் மஞ்சுநாத். எம்.ஜி சாலையில் இருந்து திருடன் அருகில் உள்ள சர்ச் சாலைக்கு ஓடினான். மஞ்சுநாத்தும் விடாமல் துரத்தினார். திருடனிடம் கத்தி இருந்ததால் யாரை அவனை துரத்தவில்லை. போலீஸ்காரர்களும், ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களும் அவனை பிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அதனையெல்லாம் தாண்டி தப்பித்து திருடன் தொடர்ந்து ஓடினான். அங்கிருந்து செயிட்ண்ட் மார்க் சாலையில் திருடன் ஓடினான். 

அதனையடுத்து, முகேஷ் என்ற பார் ஊழியர் திருடனை வேகமாக துரத்தியுள்ளார். அப்போது, தன்னிடம் இருந்த கத்தியால் திருடன் தஷ்தஹீர் சுழன்று சுழன்று தாக்குவது போல் சுத்தியுள்ளார். அதில் முகேஷின் கை கத்தியால் கிழிக்கப்பட்டது. பின்னர் திருடன் தொடர்ந்து ஓடினான். திருடன் ஓடி வந்த பாதையில் ஒருவர் சைக்கிளை வீசி அவனை தடுக்க முயன்றார். ஆனால், அதனை  தாண்டி திருடன் தொடர்ந்து ஓடினான். இந்த முறை பிரதாப், மகேஷ் என்ற இரண்டு போலீஸ் அவனை துரத்தினார்கள். 

ஆனால், அந்தச் சாலையின் முடிவில் திருடனுக்காக முஞ்சுநாத் இருந்தார். அவருடன் எம்.ஜி சாலை போலீஸ் கான்ஸ்டபிள் நாகேஷ் இருந்தார். இருவரும் சேர்ந்து எப்படியோ திருடன் தஷ்தஹீரை கீழே விழ வைத்துவிட்டனர். ஆனால், இந்த முறை கீழே விழுந்த திருடன் எழுந்து தனது கத்தியை சுழட்டியதில் மஞ்சுநாத்தின் கை மற்றும் வயிற்றில் கிழித்துவிட்டது. 

திருடன் கத்தியால் கிழித்தது குறித்து மஞ்சுநாத் கூறுகையில், “என்னுடைய சட்டை கிழிந்துவிட்டது. கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் நான் அதனை உணரவில்லை. அவ்வளவு நேரம் துரத்திக் கொண்டு வந்த நான் அப்பொழுதுதான் பயத்தை உணர்ந்தேன். அதுவரை திருடன் என்னை கத்தியால் தாக்குவான் என்று நினைக்கவில்லை” என்றார். 

மஞ்சுநாத்தை கத்தியால் கிழித்துவிட்டு அங்கிருந்து திருடன் மீண்டும் ஓடினான். இந்த முறை நீண்ட தூரம் திருடனால் ஓடமுடியவில்லை. அடுத்த 10-20 அடி தூரத்தில் திருடனை துரத்திபிடித்த போலீஸ் கான்ஸ்டபிள் அவனை ஓங்கி குத்தினார். மஞ்சுநாத்தும் திருடனின் கைகளில் குத்தி கத்தியை கீழே விழ வைத்தார். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்ட மக்களும் திருடனை சூழ்ந்துவிட்டனர். போலீசும், பொதுமக்களும் சேர்ந்து திருடன் தஷ்தஹீரை பிடித்தனர். 

ரத்த காயங்களுடன் விரட்டி விரட்டி திருடனை துரத்திய மஞ்சுநாத்திற்கு ஒருவழியாக பலன் கிடைத்து விட்டது. திருடனை போலீஸ் அழைத்துச் சென்றனர். அருகில் உள்ள கடைக்கு சென்ற மஞ்சுநாத் தன் உடலில் வழிந்த ரத்தத்தை துடைத்துக் கொண்டார். அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் மஞ்சுநாத்திற்கு 5 தையல்கள் போடப்பட்டன. அன்று இரவு 11 மணிக்கு தான் அவர் வீட்டிற்கு சென்றார்.

போனை சரிசெய்வதற்காக தான் எம்.ஜி சாலைக்கு அவர் சென்றிருந்தார். ஆனால், தான் இன்னும் போனை சரிசெய்யவில்லை என்று கூறிய மஞ்சுநாத், திருடனை பிடிப்பதில் போலீசாருக்கு உதவியதில் பெருமை தான் என்று மகிழ்ச்சியாக கூறினார். மஞ்சுநாத் திருடனை விரட்டி ஓடிய அந்த 15 நிமிடங்களும் நமக்கு வடிவேலு பட காமெடியை எப்படியோ நினைவுக்கு கொண்டு வருகிறது. அதில் வடிவேலுவிடம் இருந்து திருடன் தப்பித்து விடுவான். ஆனால், இளைஞர் மஞ்சுநாத் எப்படியோ இறுதிவரை போராடி திருடனை பிடித்துவிட்டார். அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

Courtesy - The News Minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com