கொதிக்கும் திருவாரூர் மக்கள்! கண்டுகொள்ளாத ஓஎன்ஜிசி..
ஓஎன்ஜிசிக்கு எதிராக திருவாரூரில் போராடி வரும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி
சார்பில் நடைபெற்று வரும் பணிகளால் நீராதாரம் குறைந்துள்ளதாக விவசாயிகள் சந்தேகிக்கும் நிலையில், அந்த சந்தேகங்களை
போக்க நடவடிக்கை எடுக்காமல் இது தொடர்பாக கேள்வி கேட்பவர்களை அச்சுறுத்தும் விதமாக போராட்டங்களை
முன்னெடுப்பவர்களை கைது செய்து அச்சுறுத்தல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயு எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுக் குழாய்கள் விளை
நிலங்களின் வழியாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன” என்று கூறும் மக்கள், அவ்வாறு செல்லும் குழாய்களிலிருந்து எண்ணெய்
கசிவுகள் ஒருசில இடங்களில் ஏற்பட்டு, விளை நிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது என்றும் குறை கூறுகின்றனர்.
இதுதவிர ஆழ்துளை கிணறு அமைத்து ஓஎன்ஜிசி பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக
குறைந்துவிட்டதென்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபகாலமாக புதிதாக எண்ணெய் கிணறுகள் அமைக்க, அச்சத்தோடு
விவசாயிகள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்படாமலேயே
பணிகளை தொடங்க ஓஎன்ஜிசி நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேலும் கூறும் அப்பகுதியினர், “எதற்காக சட்ட விதிமுறைகளை மீறி செய்கின்றார்கள் என்று ஓஎன்ஜிசியும், உரிய சட்ட
வழிமுறையை பின்பற்றாமல் அப்பகுதி மக்களுக்குத் தெரியப்படுத்தாமல் துரப்பணப் பணிகளை ஏன் அனுமதிக்கின்றார்கள் என்பது
குறித்து மாவட்ட நிர்வாகமும் விளக்கமளிக்கவில்லை. மாறாக இதுபோன்ற கேள்விகளை எழுப்பி போராடுபவர்களை கைது
செய்கின்றனர்.
குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்கள் 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்ததுடன்,
இதுபோன்ற கோரிக்கைகளுக்காக மக்களை ஒருங்கிணைப்பவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து
சிறையில் அடைத்து வருகின்றனர். இதனை மத்திய, மாநில அரசுகள் இணைந்தே செய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில்
ஓஎன்ஜிசி மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் பொதுமக்களும் விவசாயிகளும் ஒருவித அச்ச உணர்வுடன் உள்ளனர்” என்று மக்கள்
குமுறுகின்றனர்.
கட்டுரையாளர்: ராஜசேகர், செய்தியாளர், திருவாரூர் மாவட்டம்.