“முதல்வரின் அறிவிப்பை ஏற்றால் பெண் காவலர்களுக்கு சிக்கல்தான்” : திலகவதி சிறப்பு பேட்டி

“முதல்வரின் அறிவிப்பை ஏற்றால் பெண் காவலர்களுக்கு சிக்கல்தான்” : திலகவதி சிறப்பு பேட்டி
“முதல்வரின் அறிவிப்பை ஏற்றால் பெண் காவலர்களுக்கு சிக்கல்தான்” : திலகவதி சிறப்பு பேட்டி

மாதவிடாய், கழிப்பிட வசதியின்மை, கர்ப்பக்காலம், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில்கொண்டு இனி,  ’பெண் காவலர்கள் முதல்வரின் பயணங்களின்போது சாலையோரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டாம்’ என்ற தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் புதிய அறிவிப்பு வரவேற்பையும் பாராட்டையும் குவித்துவரும் சூழலில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

”முதல்வரின் இந்த அறிவிப்பு பார்வைக்கு மகிழ்ச்சித்தரும் அறிவிப்பாகவும் காவல்துறையில் இருப்பவர்களுக்கு நன்மை செய்வது போலவும் மேம்போக்காக இருக்கிறது. ஆனால், இதன் உள்ளார்ந்த விஷயங்களை கணக்கில் எடுத்துப் பார்த்தால், வேறு விதமான பல குழப்பங்களை உருவாக்கும். காலப்போக்கில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். காவல்துறையில் ஆண், பெண் இருவருக்குமே சமமான பயிற்சி, சமமான சம்பளம், சமமான வாய்ப்புகள், வீடுகள்  எல்லாம் கொடுக்கப்படுகிறது. அனைத்து தேவைகளுக்கும் லோன் வாங்கிக்கொள்ளலாம்.  இப்படி பல சலுகைகள் சமமாகக் கொடுக்கப்படும்போது, பெண்களின் இதுபோன்ற பிரச்சனைகளைச் சொல்லி புலம்பிக்கொண்டே இருப்பது சரியாக இருக்காது. எங்குமே அதிகப்படியான சலுகைகள் கொடுக்கப்படுவது, உரிமைகள் இழப்பில் கொண்டு சென்று நிறுத்தும். இப்போதே, விஜிலன்ஸ், பொருளாதார குற்றப்பிரிவுகளில் அதிகமாக பெண் காவலர்கள்தான் இருக்கிறார்கள்.  இயந்திரங்களும் ரெக்கார்டுகளும் அதிகம் என்பதால், அதில் வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். பெண் காவலர்கள் இதுபோன்ற பணிகளுக்குத்தான் ஏற்றவர்கள் என்று பணியை பிரித்துக்கொடுப்பதால், ஏற்கனவே மூன்று பேர் பார்க்கும் பணியை செய்யும் ஆண் காவலர்களின் பணிச்சுமை இன்னும் கூடுகிறது.

 மேலும், வெளிமாநில குற்றவாளிகள், உள்ளூர் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் தனி டீமும் ஆண்களாகவே செல்கிறார்கள். பெண் காவலர்களுக்கு அதிக கஷ்டம் கொடுக்கக்கூடாது என்று அழைத்துச் செல்லாமல், உட்கார்ந்துகொண்டு எஃப்.ஐ.ஆர் எழுதட்டும். ரெக்கார்டுகளை பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இப்படி பிரித்துக்கொடுக்கும் முறையே தவறானது. கண்டிப்பாக தனி டீம்களிலும் பெண் காவலர்கள் இருக்கவேண்டும். பெண் காவலர்களாலும் அனைத்து காவல்துறை பணிகளையும் செய்ய முடியும். அதற்காகத்தான், சமமாக பயிற்சி எடுத்திருக்கிறார்கள்.

இப்படி பிரித்து கொடுத்துக்கொண்டே இருந்தால், ஆண் காவலர்கள் மட்டுமே துணிச்சலான வேலைகளுக்கும் பெண் காவலர்கள் இந்தந்தப் பணிகள்தான் செய்வார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாலின அடிப்படையில் வேலைப் பகிர்வு என்ற விஷயத்தை கொண்டுவந்து விட்டுவிடும்.

குறிப்பாக, இந்தப் பாகுபாட்டினால் ஆண் காவலர்களுக்கு பெண் காவலர்கள் மீது ’நம்மை மட்டும் இப்படி வேலை வாங்குகிறார்களே’… சம்பளம் நம்மைபோல் சமமாக வாங்கிக்கொண்டு உட்கார்ந்து பணி புரிகிறார்களே… இவர்களால்தான் நமக்கு வேலை அதிகமாகிறது. வீட்டில் உட்காராமல் நம் கழுத்தை வந்து அறுக்குதுங்க’ என்ற வெறுப்பும் கோபமும் மன வருத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அவர்களின், இந்த ஆதங்கத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்கி அவர்கள் செய்யக்கூடிய வேலையில் பழுது வந்துவிடுகிறது.

கழிவறைப் பிரச்சனை, பீரியட்ஸ், கர்ப்பகாலம் உள்ளிட்டவைதான் பெண் காவலர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யவேண்டுமோ அதைத்தான் அரசு செய்து கொடுக்கவேண்டும். நம் சமூகமே தாய்வழி சமூகம். பெண் என்பவள் காடுகளில் ஆண்களுக்கு சமமாக வேட்டையாடி திரிந்தவள். தாய்தான் இங்கு தலைவியாக இருந்தாள். அதனால், அரசின் இந்த சலுகைகளை பெண் காவலர்கள் ஏற்றுக்கொள்ளவே கூடாது. சலுகைகளுக்காக போய் நின்றாலே, அவர்களுக்கு அடிபணிந்து போகவேண்டியதாகிவிடும். தங்களுக்கான மரியாதை, வேலைத்திறன், பணித்திறன் எல்லாவற்றையும் பெண் காவலர்கள் இழப்பார்கள். பாலின அடிப்படையில் பணிச்சுமையை பங்கிட்டுக் கொடுப்பது மீண்டும் மீண்டும் பிற்போக்குத்தனமான பழமைவாதத்தை புகுத்துவதாகும். பெண்களாலும் அனைத்து பணிகளையும் பார்க்க முடியும் என்பதை நிரூபிக்கத்தானே நாங்கள் எல்லாம் கஷ்டப்பட்டு இந்தத் துறைக்கு வந்திருக்கிறோம்? பெண்களுக்கு திறமை, ஆற்றல், தைரியம் உண்டு என்று இத்தனை ஆண்டுகளில் நாங்கள் நிரூபித்துவிட்டப்பிறகும் ஏன் திரும்பவும் அதேமுறையை புகுத்தவேண்டும்?

மிக முக்கியமாக, அரசின் இந்த அறிவிப்பை பெண் காவலர்கள் ஏற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் சம்பளக்குறைப்புக்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறிய வட்டத்திற்குள்ளேயே பெண் காவலர்களை சுருக்கிவிடுவார்கள். இன்று இருக்கக்கூடிய விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்தி வசதிகளை அதிகப்படுத்துவதைதான் முன்மாதிரியான அரசு செய்யவேண்டும்.

சாலைகளில் ஒரு பெண் காவலர் யூனிஃபார்மில் நிற்பதை பேருந்தில் அமர்ந்துகொண்டு  ஒரு 16 வயது சிறுமியோ, பத்து வயது சிறுமியோ, இளம் வயது தாயோ பார்க்கும்போது ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும்.  ’அந்த அக்கா மாதிரி ஒரு நாளைக்கு நாமும் காக்கி யூனிஃபார்ம் போடணும். அந்த அக்கா மாதிரி நாமும் போலீஸ் வேலைக்குப் போகணும், நம்ம பொண்ணையும் போலீஸாக்கணும்’ என்ற பாசிட்டிவ் மனநிலையை உருவாக்கும். இன்னும் பல பெண்கள் காவல்துறை பணிக்கு வீறுநடை போட்டுக்கொண்டு வருவார்கள். இதெல்லாம் நல்ல நம்பிக்கையை  திசைத்திருப்புக்கின்ற விஷயம். அதேபோல, ஒரு கிராமத்தில் ஒரு பெண் காவல்துறை பணியில் சேர்ந்துவிட்டுச் சென்றால், அது எத்தனை பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்? 25 வருடத்திற்கு முன்பு பெண்களை வெள்ளை உடை கொடுத்து ட்ராஃபிக் அம்பர்லாவிலெல்லாம் ஏற்றி நிற்க வைத்துள்ளோம். இப்போது, அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ட்ராஃபிக்கில் அதிக பெண் காவலர்கள் இருப்பதில்லை. இந்தச் சூழலில் முதல்வரின் அறிவிப்பு பழமைவாதத்தையே ஊக்குவிப்பது போன்றதாக இருக்கிறது".

அப்போ, பெண் காவலர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?

   ” தமிழக காவல்துறையில் 12 சதவீதம்தான் பெண் காவலர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் அறிவிப்புப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், இதில் 20 ஆயிரம் பணியிடங்கள் காலியிடங்களாகத்தான் வைத்திருக்கிறார்கள். இதனை 33 சதவீதமாக உயர்த்தி  பெண் காவலர்களை அதிகப்படுத்தவேண்டும். பிரதமர், முதல்வர் செல்லும் ரூட் பந்தபோஸ்த்தில் இருக்கும் பெண் காவலர்களுக்கு ஒன்னரை மணி நேரத்திற்கு ஒருமுறை மொபைல் டாய்லெட், மொபைல் ரெஸ்ட்டாரண்ட் வசதிகளை செய்து கொடுக்கலாம். மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை பெண் காவலர்களை சுழற்சியாக மாற்றலாம். இதுபோன்ற வசதிகள் மிக பயனுள்ளதாக இருக்கும்.  பெண் காவலர்களுக்கு மட்டுமல்ல. ஆண் காவலர்களுக்கும் இந்த வசதிகளை இதனை செய்யவேண்டும்.

அதேபோல, மாதவிடாய் நிகழ்வையும் சொல்லி பணியை பகிர்ந்தளிக்கக்கூடாது. மாதவிடாய் சமயத்தின்போது, அந்தக் காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தி உட்காரவைத்த தீண்டாமை கொடுமை பழக்கம்போல் இதுவும் ஆகிவிடும். அதனால், மொபைல் டாய்லெட்டையும், நாப்கின் மெஷின் வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும்.

எங்கள் காலத்தில் எல்லா சூழலிலும் பணி செய்திருக்கிறோம். நாங்கள் பணிபுரியும்போது எந்தவிதமான சலுகையும் கேட்கவில்லை. அரசு கொடுக்கவுமில்லை. இதுதான் வேலை என்று வந்துவிட்டார்கள். இஷ்டமிருந்தால் வரட்டும். இல்லையென்றால் செல்லட்டும். பெண் என்று இந்தமாதிரி எவ்வளவுக்கெவ்வளவு சலுகைகளை எதிர்பார்க்கிறோமோ, அந்தளவுக்கு மதிப்பையும் மரியாதையையும் இழந்துவிடுவோம். எம்.ஜி ஆர் 660 பெண்களை காவல்துறைக்கு எடுத்தார். அப்போது, நான்தான் அவர்களை பயிற்றுவிக்கும் அதிகாரி. அப்போது, பெண் அதிகாரிகள் கிடையாது. அனுபவமும் கிடையாது. அந்தக் கால சூழலிலும் நம்பிக்கை அளித்து பெண்களுக்கு பயிற்சி அளித்தேன். ஆண் பெண் காவலர்கள் ஒரே மாதிரியான பயிற்சி எடுத்துக்கொள்ளும்போது  இருவருக்குமே சமமான பணியைத்தான் கொடுக்கவேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு உண்மை சம்பவத்தையே சொல்கிறேன்.  ராஜீவ் காந்தியை கொன்ற பெண் அவரிடம் நெருங்கி செல்லும்போது, அப்பெண்ணை கையைப்போட்டு தடுத்து நிறுத்தியவர் என்னுடன் பணிபுரிந்த அனுசியா என்ற காவலர். அவர் தடுத்து யார் என்று கேட்டதற்கு, அருகில் இருந்த ராஜீவ் காந்தி அனுசியாவைப் பார்த்து ‘ரிலாக்ஸ்’ என்றார். உடனே குண்டு வெடித்தது. அதில், அனுசியாவின் சுண்டி விரலும் போய் அரசு மருத்துவமனையில் பல மாதங்கள் வைத்திருந்துதான் காப்பாற்றினார்கள். இதுபோல, முதல்வர் வரும்போது சந்தேகப்படும்படியாக நான்கு பெண்கள் நின்றால், அவர்களை, முதலில் பெண் காவலர்கள்தான் விசாரிப்பார்கள். விசாரிக்கவேண்டும். பெண்களை காவல்துறைக்கு பணிக்கு எடுக்கக் காரணம் இதுபோன்ற பெண் குற்றவாளிகளை கண்காணிக்கவும்தான். திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவது பாதுகாப்பு சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்தான். ஆனால், அந்தப் பணியை செய்யவே செய்யவேண்டாம் என்று இருக்கிறது, முதல்வரின் இந்த அறிவிப்பு".

ஆனால், விடுமுறையே இல்லாமல் பணிபுரிவது மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடாதா?

” 1861 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் காவலர் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில் காவல்துறை பணியில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதாகத்தான் அறியப்படுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.  உண்மையில் 24 மணிநேரம் வேலை இருப்பதில்லை. திருமணம், குடும்ப விழாக்கள் என காவலர்கள் விடுமுறை தேவைக்குத் தகுந்த மாதிரி விடுமுறை கொடுக்கிறார்கள். ஆனால், தீபாவளி, பொங்கல் சமயங்களில் விடுமுறை அளிப்பதில்லை. அன்றுதான், அவர்களுக்கு பணி அதிகமாக இருக்கும். இதெல்லாம் தெரிந்துதானே, காவல்துறை பணியில் 50 இடத்திற்கு 50 ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்?”.  

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com