“அரசியலில் அண்ணாமலை நீடிப்பாரா? என்பது சந்தேகம்தான்” முன்னாள் ஐ.பி.எஸ் திலகவதி பேட்டி!

“அரசியலில் அண்ணாமலை நீடிப்பாரா? என்பது சந்தேகம்தான்” முன்னாள் ஐ.பி.எஸ் திலகவதி பேட்டி!
“அரசியலில் அண்ணாமலை நீடிப்பாரா? என்பது சந்தேகம்தான்” முன்னாள் ஐ.பி.எஸ் திலகவதி பேட்டி!

ரஜினி ஆரம்பிக்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலை தற்போது பா.ஜ.கவில் இணைந்துவிட்டார். இந்நிலையில், ’ஐ.பி.எஸ் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் முடிவு சரியானதா?’ என்று ’தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்’ என்ற பெருமையை பெற்ற ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி திலகவதியிடம் பேசினோம்,

                “அண்ணாமலை ஐ.பி.எஸ் பணியை விடப்போகிறார் என்ற தகவல் வந்ததுமே, ‘பணியை விடக்கூடாது’ என்று வலியுறுத்துவதற்காக அவருக்கு போன் செய்தேன். ஆனால், அவரிடம் பேச முடியவில்லை. பின்பு ராஜினாமா செய்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். கரூர் மாதிரியான சிறிய மாவட்டத்தில் பிறந்து கடுமையாக உழைத்து நல்ல ஐ.பி.எஸ் என்று பெயரெடுத்துள்ளார். பயிற்சியின்போதே பரிசுகள் வாங்கியுள்ளார். பணியிலும் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

       இந்தியாவில் காவல்துறையைப் பொறுத்தவரை கர்நாடகாதான் பெஸ்ட் கேடர். ஏனென்றால், ஒருவர் அம்மாநிலத்திற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணியில் சென்றால், அவர் உயிர் இருக்கும்வரை அரசு உதவிகரமாக இருக்கும். திறமைகளை மதிக்கும். நல்ல இடங்களில் பணியை கொடுக்கும். எல்லாமே சீனியாரிட்டி அடைப்படையில்தான் காவல்துறையினரை நியமிப்பார்கள். ஆனால், தமிழகத்தில் மேலே எட்டுப்பேர் சீனியாரிட்டியில் முன்னணியில் இருந்தாலும், அவர்களுக்கு கீழே உள்ளவர்களை தலைமை பொறுப்பில் அமர்த்துவார்கள். கர்நாடகாவில் அப்படி கிடையாது. கேள்வி கேட்பார்கள். ஏற்கனவே, அப்படி கேள்விகேட்டு நீதிமன்றம்வரை சென்று தமிழகத்தைச் சேர்ந்த தினகரன் டி.ஜி.பியாகவே இருந்துள்ளார். அதேபோல, இந்தியாவிலேயே காவலர்களுக்கு அதிக வீட்டுவசதியை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது கர்நாடகாதான்.  இவ்வளவு சிறப்புகள் கொண்ட கர்நாடக காவல்துறையை விட்டுவிட்டு அண்ணாமலை ஏன் அரசியலுக்கு வரவேண்டும்?

            ஒரு வருடத்தில் எட்டு லட்சம் பேருக்குமேல் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆகவேண்டும் என்று தேர்வு எழுதுகிறார்கள். அதில், பாதிபேர் முதன்மை தேர்வு எழுதுகிறார்கள். அவற்றிலும் சில ஆயிரம் பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுகிறார்கள். இறுதியாக வடிகட்டப்படுபவர்கள் சில நூறு பேர்கள்தான். கடந்த 2019 ஆம் ஆண்டுத் தேர்விலேயே 150 பேர் ஐ.ஏ.எஸ் ஆகியிருக்கிறார்கள். 140 பேர் ஐ.பி.எஸ் ஆகியிருக்கிறார்கள். எட்டு  லட்சத்தில் 140 பேர் தேர்வு பெற்று வரக்கூடியப் கடினமான பதவியே ஐ.பி.எஸ் எனப்படும் இந்தியன் போலீஸ் சர்வீஸ். மக்களுக்கு காவல்துறை மூலம் சேவை செய்வதற்கான வாய்ப்புதான் இந்தப் பணி. பதவிக்கு வந்துவிட்டால் இதற்குமேல் போகமுடியாது என்றில்லை. அண்ணாமலை கர்நாடகாவில் பல இடங்களில் பணிபுரிந்தார். அங்கேயே பணிபுரியவேண்டும் என்றில்லை. காவல்துறையில் இருந்துகொண்டே நாட்டிற்காக சுய அடையாளத்தை மறைத்து உலகம் முழுக்க பணிபுரியலாம். என்னுடன் பணியாற்றிய ஒருவர் ஸ்ரீலங்காவிலும் மற்றொருவர் ஜெர்மனியிலும் பணிபுரிந்தார்கள்.

அதனால், அண்ணாமலை பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்குச் சென்றுதான் மக்களுக்கு சேவை செய்வேன் என்பது சரியான முடிவாக தெரியவில்லை. காவல்துறையில் இருந்துகொண்டே  பல்வேறு மக்கள் சேவையை செய்திருக்கலாம். இறையன்பு, உதயச்சந்திரன் போன்ற ஐ.ஏ.எஸ்கள் மிகச்சிறப்பாக மக்கள் பணி செய்கிறார்கள். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள். ஆனாலும், இவர்களை தமிழக அரசு ஒதுக்கித்தான் வைத்திருக்கிறது. ஆனாலும், இவர்கள் பணியை ராஜினாமா செய்யவில்லை. பணியில் இருந்துகொண்டே தங்கள் மக்கள் சேவையை செய்வதில் சலிப்படையவில்லை. இப்படி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்களில் பலர் சமூக சேவைகளை செய்துகொண்டுதான் வருகிறார்கள்.

 நான் பணியில் இருந்தபோதும் சமூகத்திற்கும் பெண்களுக்கும் சட்டத்தின் வழி சேவைகளை செய்தேன். அதனாலேயே, பணியில் இருந்தும் மாற்றப்பட்டேன். நான் எந்தப் பதவியில் இருந்தாலும் மக்கள் வந்து பார்த்துக்கொண்டே இருப்பார்கள். பிரச்சனைகளை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்போது,  ஓய்வு பெற்றுவிட்டேன் என்றுகூட சொல்லமுடியாது. மக்கள் பல விஷயங்களுக்கு நம்மை எதிர்நோக்குகிறார்கள். அரசின் பணம் எனக்கு ஓய்வூதியமாக வந்துகொண்டிருக்கிறது. அதனால், இது மக்களின் வரிப்பணம்தான்.  இப்போதும் மக்களுக்கு சேவை செய்கிறேன்.

        எந்தப் பதவியும்  குப்பைத்தொட்டி பதவி அல்ல. எந்த பதவியில் இருந்தாலும் மக்கள் பணி செய்யவேண்டும். ஐ.பி.எஸ் என்பது கடினமானத் தேர்வு.  எத்தனை காலியிடங்கள் உள்ளது என்று பார்த்துதான் தேர்வு வைக்கிறார்கள். அண்ணாமலை 9 வருடம் பணியாற்றிவிட்டு ராஜினாமா செய்துள்ளார். இந்த முடிவை, இவர் முன்கூட்டியே எடுத்திருந்தால், வேறு ஒருவருக்கு அந்தப் பணி கிடைத்திருக்கும். ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரியையும் பயிற்றுவிக்கும்  முறையும் அதற்காக, அரசு செய்யும் செலவும் அதிகமானது. இந்தியா மாதிரியான வளர்ந்து வரும் நாட்டுக்கு அதிக பணத்தை செலவு செய்துதான் ஐ.பி.எஸ்களை உருவாக்குகிறார்கள். இந்தியாவிலேயே மிகச்சிறந்த மனிதர்களைக் கொண்டு வந்து எங்களோடு பயிற்சியில் பேச வைக்கிறார்கள். ஒருவரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் திறனுடையவராக மாற்றுகிறார்கள். நான் தர்மபுரியில் குக்கிராமத்தில் பிறந்துள்ளேன். உடனேபோய் பிரதமரை பார்க்கமுடியுமா? ஆனால், இந்தப் பதவியில் இருந்ததால் பிரதமரை பார்த்தேன். இவை எல்லாவற்றையும் விட ஒரு மனிதன் உயிர் எவ்வளவு மகத்தானது? குற்றம் செய்யும்போது தேவை ஏற்பட்டால் ஒரு மனித உயிரையும் எடுக்கலாம் என்ற அதிகாரத்தை 23 வயதில் ஐ.பி.எஸ்களுக்கு கொடுத்து உட்கார வைக்கிறார்கள். இந்தப் பவரை வேறு எந்தப் பணியிலும் அடைய முடியாது. இவ்வளவு பெரிய அதிகாரம் கொண்ட ஐ.பி.எஸ் பணியை மக்களுக்காகத்தான் பயன்படுத்தவேண்டும். பயன்படுத்தி இருக்கவேண்டும். ஆனால், வேண்டாம் என்று வெளியில் வருவது வேறு யாரோ ஒரு இளம் பெண்ணின், இளைஞரின் வாய்ப்பை தட்டிப் பறித்ததாகவே அமைகிறது. பணியில் சேரும் முன்பே இவர் முடிவெடுத்திருக்கவேண்டும். அண்ணாமலைக்கு  பயிற்சி கொடுத்தவர்கள் பைத்தியக்காரர்களா?

       இந்தியாவில் எல்லா மொழிகளையும், எல்லா வழிபாட்டு உரிமைகளையும், எல்லா மாநில மக்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்றுதான் ஐ.பி.எஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வும், அப்படித்தான் நடத்தப்படுகிறது. ஆனால், இவர் சேர்ந்துள்ளக் கட்சி இந்த மாதிரியான வாய்ப்புகளை கொடுக்குமா என்று யோசிக்க வேண்டும். அந்த வகையில் இவர் எப்படி சேர்ந்துள்ளார் என்பது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. மேலும், ஒரு விஷயத்தில் உறுதியாக நிற்காமல் மாறி மாறிப்போனால் செய்யவேண்டும் என்று நினைக்கிற விஷயத்தை முழுமையாக செய்யமுடியாது. முதலில் காவல்துறை, இரண்டாவது விவசாயம், இப்போது அரசியல்வாதி. அதிலும் நீடிப்பாரா? என்பது சந்தேகம்தான்” என்று கேள்வி எழுப்புகிறார், திலகவதி ஐ.பி.எஸ்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com