இவர்கள்தான் வனத்தின் எதிர்காலம் !

இவர்கள்தான் வனத்தின் எதிர்காலம் !

இவர்கள்தான் வனத்தின் எதிர்காலம் !
Published on

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் 
காடும் உடைய தரண்.குறள் ( அதிகாரம் - அரண் )
அகழி, பரந்த நிலப்பரப்பு, உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும் என்கிறது வள்ளுவம். காடு மற்றும் மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது இந்த குறள்.


தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். காட்டுத் தீ குறித்தும் மலையேற்றம் பற்றியும் பரவலாக பேசப்படும் இந்தச் சூழ்நிலையில் ,சமீபத்தில் இந்திய வனப்பணிக்குத் தேர்வான சிலரை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமியில் ஒரு மாலை நேரத்தில் சந்தித்தோம்.
 
கிராமப் பின்னணி ,விவசாயக்குடும்பம் ,வேளாண் படிப்பு ஆகியவையே பெரும்பாலும் இந்தத் துறையில் நுழைய இவர்களை ஊக்கப்படுத்தியிருக்கின்றன. சமூக ஊடகங்களினால் காடு குறித்த புரிதலும், காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் இளைய தலைமுறையிடம் அதிகமாகி இருக்கிறது என்கிறார் இந்திய வனத் தேர்வில் வெற்றி பெற்ற பிறைசூடன். இவருக்கு சொந்த ஊர் பொள்ளாச்சியில் ஆனை மலை அடிவாரம். இந்த வாழ்விய சூழலின் உந்துதல் காரணமாகவே அவர் வனப் பணியை தேர்ந்தெடுந்திருக்கிறார். 

மன அழுத்தம், காடு பற்றிய விழிப்புணர்வு ஆகியவை அதிகரித்ததன் காரணத்தால் காட்டுக்கு பயணம் போவதும் கூடியிருக்கிறது என்கிறார் இந்தத் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்தியாயினி. குரங்கணி சம்பவத்திற்குப் பிறகு காடுகளுக்குள் நுழைய விதிக்கப்படும் தடையை இவர்கள் வரவேற்கவில்லை. காட்டுப் பயணத்தை தடை செய்வது மனிதர்களுக்கும் காட்டுக்கும் நல்லதல்ல ,இருவருக்குமான இடைவெளியை அதிகரிக்கும். எனவே வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக்குவதே சரி என்கின்றனர் அனைவரும் ஒருமித்த குரலில்.

காட்டு விலங்குகளின் வாழ்விடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்தல், பருவக்கால மாறுபாடு ,மனிதப் பெருக்கம் போன்றவற்றால் மனிதர்கள் - விலங்குள் மோதல் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் காடு பற்றிய புரிதல் அவசியம் என்பது விஷ்வநாத்தின் கருத்து. திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் பொறியியல் பட்டதாரி.
 
காடு - விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான வசிப்பிடம். அதற்குள் மனிதர்கள் நுழையவே கூடாது .இயற்கைக்குச் சொந்தமான அத்தனை இடங்களையும் பார்க்க மனிதன் ஆசைப்படக்கூடாது என்பதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் மதுமிதா , மழை பொய்த்துப் போகும் சமயங்களிலும் ,வேட்டையாடுதல் மற்றும் வளங்கள் கடத்தலைத் தடுக்கவும் மனிதத் தலையீடு தேவை என வலியுறுத்துகிறார். மக்கள் vs சுற்றுசூழல் என்பதாக இல்லாமல் சுற்றுச்சூழலில் நாமும் பங்கு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது இவரின் கருத்து. தாராபுரத்துக்காரரான இவருக்கு கிராமத்து வாழ்க்கை மீதான காதலே வனப்பணிக்கு வரத் தூண்டியிருக்கிறது.வனச்சட்டங்கள் ,பழங்குடியினர் நலன் ,வளர்ச்சி குறித்தும் பல கோணங்களை இவர்கள் முன்வைக்கிறார்கள்.

மக்கள் பிரதிகள்தான் சட்டத்தை இயற்றுகிறார்கள்.எனவே மக்களை பாதிக்காத வண்ணம் தான் சட்டங்கள் இருக்கும் எனச்சொல்லும் கார்த்தியாயினி சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது இருக்கும் சிக்கல்களை களைந்தாலே போதும் என்கிறார்.
 பழங்குடி  மக்களின் உரிமைகள் குறித்த புரிதல்களை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும், பழங்குடியினரை மறு குடியமர்த்தும் போது போதிய கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் பிறைசூடன். 

நீடித்த வளர்ச்சியே நமது இலக்கு எனக்குறிப்பிடும் மதுமிதா வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும் போது இயற்கை மீதான பாதிப்பையும் குறைக்க வேணடும் என்கிறார்.நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவில் 22 சதவீதம் அளவுக்கு காடுகள் தான் உள்ளன. காடு என்பது சூழல் இயலில் ஒரு அங்கம் மட்டும் இல்லை.உள் நாட்டு பாதுகாப்பின் ஓர் அங்கமும் கூட. இவற்றைப் பாதுகாக்கும் முனைப்போடு களம் இறங்கப்போகும் எதிர்கால வனப்பணி அதிகாரிகளுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com