கொஞ்சம் மாத்திக்கலாமே.. இந்த 9 தினசரி பழக்கவழக்கங்கள் உங்கள் மனநிலையை மோசமாக பாதிக்கலாம்!
நம்முடைய ஆரோக்கியத்தில் மனநலம் முக்கியப்பங்கு வகிக்கிறது. எப்படியாயினும், நம்முடைய தினசரி பழக்கவழக்கங்களில் தீங்கு விளைவிக்காது என நினைக்கும் சில பழக்கங்கள் மன ஆரோக்கியத்தை பெரிதளவில் பாதிக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. சில சாதாரண ஆரோக்கியமற்ற பழக்கங்கள் நீண்ட நாட்கள் தொடரும்போது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
1. போதிய தூக்கமின்மை
உடல் மற்றும் மன நலத்துக்கு மிகமிக அவசியமானது தூக்கம். தூக்க குறைபாடானது மனம் ஒருநிலையின்மை, மன அழுத்தம், மன பதற்றம் மற்றும் சோர்வு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே தினசரி 7-9 மணி நேர தூக்கம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு மிகமிக தேவை.

2. அதீத சமூக ஊடக பயன்பாடு
சமூக ஊடக பயன்பாடானது பலரையும் அடிமையாக்கிவிட்டது என்றே சொல்லலாம். தங்கள் பதிவுகளுக்கு போதிய லைக்குகள் மற்றும் கமெண்டுகள் வராவிட்டால் பலருக்கும் கவலை மற்றும் வருத்தம் ஏற்படுகிறது. இதுதவிர பலரும் பொழுதுபோக்கிற்காக சமூக ஊடகங்களை சார்ந்து இருக்கின்றனர். இது தனிநபரின் உற்பத்தித்திறனை குறைக்கும்.
3. மோசமான டயட்
நாம் சாப்பிடும் உணவானது நமது மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணுவது செரட்டோனின் சுரப்பில் சமச்சீரின்மையை ஏற்படுத்துவதால், மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனம் அங்கலாய்த்தல் போன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை உண்ணுவது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டையும் மேம்படுத்தும்.
4. காலம் கடத்துதல்
காலம் கடத்துதல் அல்லது தாமதித்தல் மன பதற்றம் மற்றும் கவலையை அதிகரிக்கும். செயல்களை செய்யாமல் காலம் கடத்துபவர்கள் அடிக்கடி பீதி தாக்குதல்களை சந்திக்க நேரிடும். இது மன ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நேரத்தை திறன்பட பயன்படுத்துவது மற்றும் பணிகளை அட்டவணைப்படுத்தி சிறப்பாக கையாள்வது போன்றவை தாமதிக்காமல் வேலைகளை நேரத்துக்குள் முடிக்க உதவும்.

5. சுய எதிர்மறை பேச்சுக்கள்
சுய எதிர்மறை பேச்சுகள் ஒரு பழக்கமாக மாறி, மன ஆரோக்கியத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சுய விமர்சனம் மற்றும் சுய எதிர்மறை பேச்சுகள் தாழ்ந்த சுய மதிப்பீடு, மன அழுத்தம் மற்றும் கவலைக்கு வழிவகுக்கும். எதிர்மறை பேச்சுக்களுக்கு பதிலாக நேர்மறையான வார்த்தைகள் மற்றும் சுய நன்றியுணர்வு போன்றவை மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
6. போதிய உடற்பயிற்சியின்மை
உடற்பயிற்சியானது கார்டிசோலின் அளவை குறைத்து எண்டோர்பின் ஹார்மோன் சுரப்பை ஊக்குவித்து, நேர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும், கவலை மற்றும் அழுத்தத்தை குறைக்கிறது. தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும்.
7. ஒரே நேரத்தில் பல பணிகள்
ஒரேநேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்வது உற்பத்தி திறனை குறைக்கிறது, அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும், அறிவாற்றல் செயல்பாட்டை பலவீனப்படுத்துகிறது. மேலும், இது ஆற்றலை அதிகளவில் எரித்து பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடாமல் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்தி முக்கியத்துவம் அளிப்பது சிறந்தது.
8. பர்ஃபெக்ட்
எப்போதும் பர்ஃபெக்ட்டாக இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், சோர்வு மற்றும் கவலை போன்றவையும் கூடவே இருக்கும். எனவே தங்களால் அடையக்கூடிய இலக்குகளை நியமிப்பதுடன், அப்படி திட்டமிட்டபடி செயல்கள் நடைபெறாவிட்டாலும், அதனை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தவறுகள் மற்றும் பிழைகள் போன்றவை கற்றலுக்கு வழிவகுக்கும்.

9. தனிமைப்படுத்துதல்
மன அழுத்தம் மற்றும் கவலையால் ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டால் அது மன ஆரோக்கியத்தில் மன பதற்றம், சோர்வு, தனிமை போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தினருடன் நட்புறவுடன் இருப்பது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும்.
உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே மன ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். எனவே தினசரி பழக்கவழக்கங்களில் மன ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கங்கள் எவை என கண்டறிந்து அவற்றை மாற்றியமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையை பெறலாம்.