உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...ஊரடங்கை ஓவியங்களால் கடந்த நவீன ஓவியர்

உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...ஊரடங்கை ஓவியங்களால் கடந்த நவீன ஓவியர்
உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக...ஊரடங்கை ஓவியங்களால் கடந்த நவீன ஓவியர்

கடலூரைச் சேர்ந்த ராஜசேகருக்கு அரசுப் பள்ளியில் பகுதிநேர சிறப்பு ஓவிய ஆசிரியர் பணி. கோடை விடுமுறை வந்தால், மே மாதம் ஊதியம் கிடைக்காது. மிகக் குறைவான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? பகுதிநேரமாக பயிற்சிப் பட்டறை மூலம் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சியும் அளித்து வந்தார். இந்த கொரோனா ஊரடங்கில் ராஜசேகரின் வாழ்க்கை சிதறிய நெல்லிக்காய் மூட்டைபோல ஆகிவிட்டது.

ஊரடங்கு நாட்களில் வருமானம் அடியோடு நின்றுபோனது. பள்ளி வேலையுமில்லை. ஓவியப் பட்டறையும் மூடப்பட்டுவிட்டது. இதனால் ராஜசேகரும் விவரிக்க முடியாத மன நெருக்கடிக்கு ஆளானார். வீட்டில் முடங்கிக் கிடந்தவரை ஓவியம்தான் செவிலித்தாயாக இருந்து வழிகாட்டியிருக்கிறது. எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வீட்டிலேயே இருப்பது என்று நினைத்தவர், ஒரு நாள் ஓவியக் கித்தான்களையும் தூரிகையையும் எடுத்துக்கொண்டு இயற்கையின் வெளிகளைத் தேடத் தொடங்கினார்.

வனாந்தரங்களில் கால்கடுக்க நின்று ஓவியங்களை உருவாக்கிய கணங்களில் மனக்கவலைகள் நீங்கி புத்துணர்வு பெற்றுவிட்டதாகக் கூறுகிறார் ராஜசேகர், "இப்ப சரியாகும் அப்ப சரியாகும்னு நினைச்சேன். நாட்கள் மட்டுமே நகர்ந்தன. ஊரடங்கும் நீண்டுகொண்டே போனது. பண நெருக்கடி. அதனால் உருவான கவலைகள், பல குழப்பங்கள். பின்னர் சூழலின் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டேன். எங்கே தொலைத்தாயோ, அங்கேயே தேடு என்பதைப்போல ஸ்பாட் ஸ்கெட்சஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தேன்" என்று உற்சாகத்துடன் பேசுகிறார்.

கொஞ்சம் தண்ணீர், தேன் மிட்டாய்கள், ஓவிய கித்தான்கள், வண்ணங்களுடன் உதவியாக ஒரு மாணவரையும் அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார் ராஜசேகர். கடலூருக்கு அருகில் 5 கி. மீ. தொலைவில் உள்ள கேப்பர் மலைப்பகுதிதான் அவர் ஓவியம் தீட்டுவதற்காகத் தேர்ந்தெடுத்தது. அள்ள அள்ளக் குறையாத இயற்கையின் காட்சிகளை அங்கே தரிசிக்கமுடியும்.

"மாலை 3 மணிக்குப் போய்விடுவோம். சில நேரங்களில் காலை 10 மணி. இரண்டு மணி நேரம் வரைவேன். அதற்குள் காட்சிகள் மாறிவிட்டால் மீண்டும் அதே நேரத்திற்கு வந்து வரைவேன். வெயில், நிழல், வண்ணங்கள் மாறும். ஸ்பாட் ஸ்கெட்சஸ் செய்யும்போது நிறைய வண்ணங்களைத் தேடலாம். புதிய நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும். திருமணிக்குழி கிராமத்தில் நின்று வரையும்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்களையும் நான் வரைந்திருந்தேன். ரொம்பவும் மகிழ்ச்சி அடைஞ்சுட்டாங்க" என்று சொல்லும் ராஜசேகர், இப்படி வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தும் திட்டமும் வைத்திருக்கிறார்.

இந்த 'இயற்கை' வைத்தியாரால் ராஜசேகரின் மனவுலகம் முற்றிலும் மாறியிருக்கிறது."பரந்த நிலப்பரப்புகளைப் பார்த்துக்கொண்டு வரைவதில் அலாதியான சுகம். அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. என் ஓவியத்தில் செடி கொடிகள், பனைமரம், ஓடைகள், வானம் என எல்லாமும் பதிவாகும். இயற்கையின் முன்னால், நான் தூரிகையுடன் நிற்கும் கணங்கள் தியானம்போலவே இருக்கிறது.

இன்னும் பத்து ஆண்டுகளில் அந்த இடங்கள்கூட மாறிவிடலாம். அப்போது என் ஓவியங்கள் வரலாற்றுப் பதிவாக இருக்கும். உலகமே ஸ்தம்பித்து இருக்கும்போது, ஒரு கலைஞனாக நான் மட்டுமே இயங்குவதைப்போல உணர்கிறேன். அந்த நம்பிக்கையை இயற்கையும் ஓவியமும்தான் எனக்குத் தந்திருக்கிறது" என்கிறார் ஓவியர் ராஜசேகர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com