ஸ்டார்ட் அப் இளவரசிகள் 8: ஜீன் ஆர்மர் பாலி - இணையத்தில் உலாவ வைத்த 'வலை அம்மா'!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 8: ஜீன் ஆர்மர் பாலி - இணையத்தில் உலாவ வைத்த 'வலை அம்மா'!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 8: ஜீன் ஆர்மர் பாலி - இணையத்தில் உலாவ வைத்த 'வலை அம்மா'!

ஜீன் ஆர்மர் பாலி (Jean Armour Polly) மாபெரும் இணைய நிறுவனத்தையோ அல்லது வெற்றிகரமான ஸ்டார்ட் அப்பை நிறுவியவர் அல்ல. எனவே, அவரை ஸ்டார்ட் அப் முன்னோடியாக கருத முடியாது என்றாலும், ஸ்டார்ட் அப் பெண் சாதனையாளர்கள் பட்டியலில் அவர் தவிர்க்க இயலாதவராகிறார். இதற்கு முக்கிய காரணம், பாலி இணைய முன்னோடிகளில் ஒருவராக திகழ்வதுதான். அதைவிட முக்கியமாக இணையத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததில், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இணையத்தை அறிமுகம் செய்ததிலும் அவர் மகத்தான பங்களிப்பை செய்திருக்கிறார்.

இணைய முன்னோடிகளில் ஒருவர் என்ற முறையில், இணைய புகழரங்கில் இடம்பெற்றுள்ள பாலி, இணைய மொழியிலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆம், இணையத்தை பயன்படுத்துவதை குறிக்க பரவலாக பயன்படுத்தப்படும், இணையத்தில் உலாவுதல் (Surfing the Internet) எனும் பதத்தை முதலில் பயன்படுத்தியவராகவும் பாலி அறியப்படுகிறார்.

1992-ம் ஆண்டு நூலக சஞ்சிகைக்காக இணையத்தை அறிமுகம் செய்யும் வகையில் எழுதிய கட்டுரையில் இந்தப் பதத்தை அவர் பயன்படுத்தியிருந்தார். நவீன வசதியான இணைய பயன்பாட்டிற்கான அருமையான உருவகமான பதத்தை அளித்ததோடு, இணைய பயன்பாடு பரவலாக்குவதற்காக அவர் பாடுபட்டிருக்கிறார்.

இணையத்தின் வெகுஜன வடிவமான 'வலை' அறிமுகமாவதற்கு முன்னரே பாலி இணையத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார் என்பது மட்டும் அல்ல, பொது இணைய வசதி அறிமுகமாவதிலும் அவரது பங்களிப்பு இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நூலகத் துறையில், இணைய வசதியை இன்றிமையததாக மாற்றியதில் அவருக்கு கணிசமான பங்கு இருக்கிறது.

இணையம் அறிமுகமான காலத்தில் அதன் நியமிக்கப்படாத தூதர் போல செயல்பட்டு, இணையத்தை நோக்கி சாமானியர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டார். இந்தக் காலத்தில் அவர் நடத்தி வந்த வலைதளத்தின் பெயரிலேயே வலை அம்மா (Net-mom) என அழைக்கப்படுகிறார். வலைதளங்களை அறிமுகம் செய்யும் கையேடுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தவரின் செயல்பாடுகள், பின்னாளில் இணையத்தில் உருவான நிறுவனங்களுக்கும், ஸ்டார்ட் அப்களுக்கும் அடித்தளமாக அமைந்தது எனலாம். குறிப்பாக பெண்கள் இணையப் பரப்பில் ஆர்வத்துடன் செயல்படுவதற்கான தூண்டுகோளாகவும் கருதப்படுகிறார்.

அந்தக் காலம்: 1980-களில் கம்ப்யூட்டர்கள் மெல்ல பொது பயன்பாட்டிற்கு வந்துகொண்டிருந்த காலம். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த ஜீன் ஆர்மர் பாலி, நூலகவியலில் முதுகலைப் பட்டம் பெற்று, அங்கிருந்த பொது நூலகம் ஒன்றில் நூலகராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில், பெரிய கம்ப்யூட்டர்களை டைம்ஷேரிங் என்று சொல்லப்பட்ட நேரப் பகிர்வு முறை பிரபலமாக இருந்தது.

பாலியின் தந்தை ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான பணியில் இருந்தவர் என்பதால், அவருக்கும் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் ஆர்வம் இருந்தது. இதன் பயனாக கம்ப்யூட்டர் வகுப்பில் இணைந்து அதன் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொண்டிருந்தார். கம்ப்யூட்டர் பயன்பாடு தொடர்பாக உற்சாகமும் கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் 1981-ல் அவர் நியூயார்க் மாநில நூலக மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்த மாநாட்டிற்கு சென்றிருந்தபோது பல பள்ளிகளில் அப்போது அறிமுகம் ஆகியிருந்த மைக்ரோ கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுவதை பார்த்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கம்ப்யூட்டர்களை இயக்க கற்றுக்கொள்வது நல்லதுதான், ஆனால் பள்ளிகளில் மட்டும் கம்ப்யூட்டர்கள் இருந்தால் போதுமா என நினைத்தார். பிள்ளைகள் கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது, அவர்கள் பெற்றோர்கள், பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் கம்ப்யூட்டர் திறன்களை கற்றுக்கொள்வது எப்படி சாத்தியம் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு நூலகரான பாலி மனதில் இந்தக் கேள்வி தோன்றியதை விஷேசமானது என்றே சொல்ல வேண்டும். இந்தக் கேள்விக்கான பதிலாக பொது நூலகங்கள் அமையும் என அவர் நம்பினார். அதாவது, நூலகங்களில் கம்ப்யூட்டரை கொண்டு வந்து பொதுமக்கள் பயன்பட்டிற்கு அனுமதிக்கலாம் என நினைத்தார். இந்த தொலைநோக்கு பார்வைக்காக என்றென்றும் அவரை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், கம்ப்யூட்டரின் எதிர்கால முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததோடு, அதை பொதுமக்கள் பெறுவதற்கான வழியாக பொது நூலகங்கள் அமைய வேண்டும் என்றும் அவர் நினைத்ததுதான்.

பொது கம்ப்யூட்டர்: ஒரு சாதாரண நூலகரான தன்னால் என்ன செய்ய முடியும் என்று நினைக்காமல், தனது நூலக வாரிய குழுவிடன் இந்த பரிந்துரையை எடுத்துச்சென்றார். நூலகத்தில் கம்ப்யூட்டர் எதற்கு எனும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து, தான் பணியாற்றிய லிவர்பூல் பொது நூலகத்தில் அப்போது அறிமுகம் ஆகியிருந்த ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்க வைத்தார். இதன் மூலம், அமெரிக்காவில் உறுப்பினர்கள் பயன்பாட்டிற்காக கம்ப்யூட்டர் வாங்கி நிறுவிய முதல் நூலகமாக லிவர்பூல் நூலகம் அமைந்தது.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்கியாகிவிட்டது. ஆனால் அந்தக் கம்ப்யூட்டரில் என்ன செய்வது? அதோடு கம்ப்யூட்டரை பயன்படுத்த என யாரேனும் நூலகத்திற்கு வருவார்களா? அப்படியே வந்தாலும் அவர்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்ய முடியும்? - இதுபோன்ற பல கேள்விகளுக்கு மத்தியில், கம்ப்யூட்டர் இயக்கம் தொடர்பான அடிப்படைகளை கற்றுக்கொள்வதற்கான வசதி உறுப்பினர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது.

கம்ப்யூட்டரில் ஃபிளாப்பி டிஸ்க் எனும் சாதனத்தை பொருத்தி (அந்தக் கால பென் டிரைவ்) அதில், தோன்றும் நீல நிற நூலக அட்டையை கிளிக் செய்வதன் மூலம் உறுப்பினர்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் நேரத்தை பதிவு செய்ய முடிந்தது. இந்த வசதியை பயன்படுத்துவதில் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டியதன் விளைவாக மாதக் கணக்கிலும், வாரக் கணக்கிலும் முன்னதாகவே கம்ப்யூட்டர் நேரம் முன்பதிவு செய்யப்பட்டு பலர் காத்திருந்தனர்.

கம்ப்யூட்டரில் விரிதாள் வடிவில் தரவுகளை உள்ளீடு செய்ய வழி செய்யும் விஸிகால்க் (மைக்ரோசாப்ட் எக்ஸெல் மென்பொருளுக்கு முன்னோடி), கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்து கோப்புகளை உருவாக்க உதவும் வேர்ட்பிராசஸ்ர் உள்ளிட்ட மென்பொருள்களையும் நிறுவி பொதுமக்களை பயன்படுத்தவைத்தார். அடுத்த ஆறு மாதங்களில், நூலகத்தில் இரண்டாவது கம்ப்யூட்டர் வாங்கப்பட்டது. 1980-களில் இதை பெரிய விஷயம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படித்தான் பொது நூலகங்கள் வாயிலாக சாமானிய மக்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாடு அறிமுகமானது. இதனிடையே, பாலிக்கு இணையம் எனும் வலைப்பின்னலும் அறிமுகமானது. கம்ப்யூட்டருடன் தொலைபேசியை இணைக்க உதவும் மோடம் சாதனம் நூலகத்தில் பொருத்தப்பட்டது. இதே காலத்தில் வீட்டில் சொந்த கம்ப்யூட்டர் வைத்திருந்த பலரும் மோடம் சாதனத்தை வாங்கினர். ஆனால், பிரச்னை என்னவென்றால் மோடம் மூலம் தொடர்புகொள்ள அவர்களுக்கு போதுமான விஷயங்கள் இல்லாமல் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில், பிபிஎஸ் என அழைக்கப்படும் மின்னணு தகவல் பலகை அமைப்பு (electronic BBS systems) பிரபலமாகி கொண்டிருந்தன. தொலைபேசி வாயிலாக பயனாளிகள் கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டிருந்த மென்பொருளை அணுகி, அதன் வாயிலாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடவும் இந்த மின்னணு தகவல் பலகைகள் வழி செய்தன. (ஒரு வகையில் நவீன சமூக ஊடகங்களுக்கு இந்த தகவல் பலகை முன்னோடி எனலாம்.) இணையத்தை அணுகுவதற்கான வழியாகவும் மின்னணு தகவல் பலகைகள் அமைந்தன.

இலவச இணையம்: பாலி, தமது நூலகம் சார்பிலும் மின்னணு தகவல் பலகை அமைக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என நினைத்தார். நூலக மோடத்தை தொலைபேசியில் இணைத்து தகவல் பலகை வசதியை உண்டாக்கினார். நூலகத்தில் ஒரே ஒரு தொலைபேசி மட்டுமே இருந்ததால், நூலகம் மூடப்பட்ட பிறகு இந்த தகவல் பலகை செயல்பட்டது. இதனால் நைட் ஷிப்ட் என பெயரிடப்பட்ட இந்த தகவல் பலகையை உறுப்பினர்கள் ஆர்வத்தோடு பயன்படுத்தினர்.

இதனிடையே 'வெல்' (WELL) எனும் இணைய சமூகத்திலும் அவர் உறுப்பினராக இணைந்திருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான், 1991-ல் அவருக்கு தனியே இணைய கணக்கு கிடைத்தது. இணைய வெளிக்குள் நுழைந்து மகிழ்ந்தவர் மனதில், இதைப் பொதுமக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்லப்போகிறோம் எனும் கேள்வியும் எழுந்தது.

1991-ல் இணையம் என்பது பெரும்பாலும் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இணையத்தை அணுகுவது என்பது சிக்கலான தொழில்நுட்ப செயலாக இருந்ததும் இதற்கு ஒரு காரணம். 1993 -ல் 'வைய விரிவு வலை' (WWW) வடிவில் இணையத்தை பொதுமக்கள் அணுகுவது சாத்தியமானபோது இணையம் எல்லோருக்குமானதாக மாறியது.

இந்த நிலை வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பொதுமக்களிடம் இணையத்தை கொண்டு செல்வது எப்படி என பாலி சிந்தித்ததை இங்கு நினைவில் கொள்வது முக்கியம். நூலகம் மூலம் பொதுமக்கள் இணைய வசதியை அணுகலாம் என நினைத்த பாலி, உள்ளூர் இணைய சேவை நிறுவனமான Nysernet நிறுவனத்திடம் இருந்து நூலகத்திற்கான இணைய இணைப்பை பெற வழி செய்தார். இதன்மூலம், பொதுமக்கள் நூலகங்களில் இருந்து புத்தககங்களை வாசிப்பது போல, இலவச இணைய வசதியை அணுகுவதையும் சாத்தியமாக்கினார்.

நூலக வலை: பொது நூலகங்களில் இணைய வசதியை சாத்தியமாக்கும் வகையில் செயல்பட்டதை பாலியின் ஆகப்பெரிய சாதனையாக குறிப்பிட வேண்டும். இன்றளவும் பொது நூலகம் போன்ற இடங்களில் பொது இணையம் சாத்தியமாகிறது என்றால், பாலி போன்ற இணைய முன்னோடிகளின் முயற்சியே அதற்கான முக்கிய காரணமாக அமைகிறது. நூலகத்தில் இணைய வசதியை கொண்டு வந்ததோடு நில்லாமல், பாலி நூலக உலகில் இணைய வசதி ஏற்றுக்கொள்ளப்படவும் தீவிரமாக பாடுபட்டார்.

இணையம் எனும் வலைப்பின்னல் மூலம் தகவல்களை எளிதாவது பல்வேறு தரப்பினரை ஈர்த்தாலும், நூலகர்கள் இந்த வசதியை துவக்கத்தில் தங்களுக்கான போட்டியாகவே பார்த்தனர். இணையத்தின் வளர்ச்சி நூலகம் மற்றும் நூலகர்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிடும் என்ற அச்சமும் இருந்தது. இணையத்தில் இடம்பெறும் தகவல்களின் நம்பகத்தன்மை தொடர்பான சந்தேகமும் இருந்தது. தவிர, புதிய தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்வதில் இருந்த தயக்கமும் நூலகர்களை தடுத்தது. இதே நிலை தொடர்ந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பாலி போன்றவர்கள் இணைய தூதர்களாக மாறி அதன் வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

பாலி அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நூலகங்களில் இணைய வசதி தேவைப்படுவதற்கான காரணங்களையும், அதன் பயன்பாட்டையும் விளக்கி கூறினார். நூலகர்கள் அவர் சொல்வதை உற்சாகத்தோடு கேட்காதபோதும் அவர் மனம் தளரவில்லை. இன்னொரு பக்கம், வர்த்தக இணைய சேவை நிறுவனங்களும் நூலக இணைய வசதியில் ஆர்வம் காட்டவில்லை. இலவச இணைய வசதி தங்கள் தொழிலை பாதிக்கும் என நினைத்தன. இத்தனை அவநம்பிக்கைகளுக்கு மத்தியில் பாலி, நூலக இணைய பயன்பாடு பற்றி வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் பேசிவந்தார். கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார்.

வலை அம்மா: இந்நிலையில், வலை அறிமுகமான பிறகு இணையம் பொதுமக்கள் மத்தியில் பிரபலம் அடைந்திருந்தது. யாஹு, அமேசான், இபே உள்ளிட்ட முன்னோடி வலைதளங்கள் பயன்பாட்டிற்கு வந்திருந்தன. எனினும், இணையத்தில் என்ன செய்யலாம்? எப்படி பயன்படுத்தலாம்? - இப்படி பல கேள்விகள் சாமானியர்கள் மனதில் இருந்த சூழலில், பாலி இதற்கு விடை அளித்து இணைய பயன்பாட்டிற்கு வழிகாட்டும் புத்தகங்களை எழுதத் துவங்கினார்.

பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இணையத்தை அறிமுகம் செய்யும் The Internet Kids & Family Yellow Pages புத்தக வரிசையை அவர் எழுதினார். இதன் தொடர்ச்சியாக நெட்-மாம் வலைதளத்தை அமைத்து, பெற்றோர்களும், பிள்ளைகளும் பயன்படுத்த வேண்டிய இணையதளங்களை அறிமுகம் செய்தார். பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த இணையதளங்களிலும் பாதுகாப்பான இணையதளங்களை அறிமுகம் செய்தார்.

இணையம் என்றால் என்ன என்று புரியாமல் குழும்பிய சாமானியர்கள் பலருக்கு, மிக எளிமையாக இணைய பயன்பாட்டை பாலியின் புத்தகங்களும், இணையதளமும் அறிமுகம் செய்தன. இதன் காரணமாக அவர் இணையத்தை கற்றுக்கொடுக்கும் 'வலை அம்மா' என அன்போடு அழைக்கப்பட்டார். இணையத்தில் எல்லாவிதமான தகவல்களும் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் பாலியை போல பரிவுடனும், பொறுப்புணர்வுடனும் இணைய பயன்பாட்டிற்கு வழிகாட்டும் நபர்கள் தேவைப்பட்டனர்.

இதனிடையே 1992-ல் அவர் நூலக சஞ்சிகைக்காக இணையத்தை அறிமுகம் செய்யும் கட்டுரையை எழுதி, அதன் மூலம் இணையத்தில் உலாவுவது எனும் பதத்தையும், கருத்தாக்கத்தையும் பிரபலமாக்கியிருந்தார். பாலிக்கு முன்பாக யூஸ்னெட் விவாதக்குழு மற்றும் இணைய காமிக் புத்தகம் ஒன்றில் இந்த பதம் பயன்படுத்தப்பட்டதாக பதிவாகி இருந்தாலும், இத்தகைய கவித்துவமான உருவகம் இணைய பயன்பாட்டை மேலும் பிரபலமாக்க உதவியது என்பதை மறுப்பதற்கில்லை.

அமெரிக்காவில் தன்னாட்சி மிக்க தேசமாக கருதப்படும் Oneida பூர்வகுடி மக்கள் தங்களுக்கான இணையதளத்தை பெறவும் பாலி வழி செய்திருந்தார். அமெரிக்க அரசின் சார்பில் வெள்ளை மாளிகைக்கான இணையதளம் அமைக்கப்படும் முன், இந்த சின்னஞ்சிறிய தேசம் தனக்கான சொந்த இணையதளத்தை அமைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

நூலகத்தின் இணைய செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்ற பாலி, தொடர்ந்து பொதுமக்கள் நலனை மனதில் கொண்டே செயல்பட்டு வந்துள்ளார். அவரது இந்த பங்களிப்பிற்காக 2019-ம் ஆண்டில் இணைய புகழரங்கில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. நூலகங்கள் வாயிலாக பொது இணைய வசதியை அளிப்பதை நடைமுறைக்கு கொண்டு வந்ததிலும் அவரது பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது.

இணைய வளர்ச்சியை திரும்பி பார்க்கும்போது, நிச்சயம் பாலி போன்ற தொலைநோக்காளர்களின் செயல்பாட்டை நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com