ஆலம்பாடி முதல் பர்கூர் மாடுகள் வரை : நம்ம ஊர் நாட்டு மாடுகளின் தனித்தன்மை!

ஆலம்பாடி முதல் பர்கூர் மாடுகள் வரை : நம்ம ஊர் நாட்டு மாடுகளின் தனித்தன்மை!
ஆலம்பாடி முதல் பர்கூர் மாடுகள் வரை : நம்ம ஊர் நாட்டு மாடுகளின் தனித்தன்மை!

‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ தமிழர்களின் ஒற்றுமையை உலகத்திற்கே பறைசாற்றிய நிகழ்வாகும். சென்னை மெரினாவில் தொடங்கி தமிழ்நாடு, இந்தியா, உலகம் என பார் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரவர் இருக்கின்ற இடத்தில் இருந்து கொண்டே போராட்டம் மேற்கொண்டனர். அதன் பலனாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2017-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இருந்த தடையை நீக்கியது. 

இந்நிலையில் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். அதோடு மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

பால் சுரக்கும் திறனுக்காக இந்தியாவில் வெளிநாட்டு மாடுகள் கொண்டுவரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நம் ஊரில் உள்ள நாட்டு மாடுகள் மற்றும் அதன் தனித்தன்மை குறித்தும் பார்க்கலாம். 

ஆலம்பாடி

கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது தான் ஆலம்பாடி ரக மாடுகள். விவசாய நிலங்களை உழுவதற்காகவும், அதிக பளுவை இழுக்கவும் இந்த ரக மாடுகள் பயன்படுகின்றன. கடுமையாக உழைக்க கூடியது. ஒரு குறிப்பிட்ட அளவிலான (Medium) உயரத்தில் இருக்கும். கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் இருக்கும். நெற்றி, கால்கள் மற்றும் வால் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். ஒகேனக்கல் அருகே உள்ள ஆலம்பாடி பகுதியில் அதிகளவில் தென்பட்டதால் ஆலம்பாடி இன மாடுகள் என பெயர் வந்துள்ளது. தற்போது அழிவின் விளிம்பில் உள்ள இந்த மாட்டினம் கோவை,  ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில்  உள்ளன.

காங்கேயம்

விவசாய பணிகளை மேற்கொள்ள அதிகம் பயன்படுத்தப்பட்ட மாட்டினம்தான் காங்கேயம். பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு வகைகளாக இதை பிரித்துக் கொள்ளலாம். இரண்டு ரக மாட்டுக்கும் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு இருக்கும். கடுமையான வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாட்டின் கால்கள், நெற்றி பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். காங்கேயம் பசுவின் பாலில் சுத்தமான கொழுப்பு உள்ளது. தமிழகத்தில் கோவை,  ஈரோடு,பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் காங்கேயம் மாடுகள் அதிகளவில் உள்ளன.

உம்பளச்சேரி

டெல்டா பகுதியை பூர்வீகமாக கொண்ட மாடு உம்பளச்சேரி. ஏர் உழுவதற்கு ஏற்ற மாட்டினம். அதிகபட்சமாக உம்பளச்சேரி ரக காளைகள் நாலரை அடி வரை வளரும். இந்த ரக பசுவின் பால் சுவையாக இருக்குமாம். வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தற்போது இந்த ரக மாடுகளை வளர்த்து வருகின்றனர். கன்றாக இருக்கும்போது காவி நிறத்திலும், வளர வளர சாம்பல் நிறமாக மாறும் தன்மை கொண்ட மாடு.

பர்கூர்  

செம்மண் நிறத்தில் வெளிர் சிவப்பாக பர்கூர் இன மாடுகள் இருக்கும். பாலுக்காக வளர்க்கப்படும் நாட்டு மாடு. காட்டுப் பகுதியில் மேய்ச்சல் செய்கின்ற வழக்கம் கொண்டதாம். இயற்கையாகவே ஆக்ரோஷ குணம் கொண்டது பர்கூர் மாடுகள். பர்கூர் மாடுகள் பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்குமாம். அதற்கு அழகு சேர்க்கும் விதமாக கொம்புகள் பெருசாக இருப்பது இதன் சிறப்பு. ஈரோடு, ஓசூர் பகுதிகளில் அதிகளவில் இந்த மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

புலிக்குளம் (ஜல்லிக்கட்டு மாடு) 

நம் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் மாடு புலிக்குளம் மாடு. இதனை பட்டி மாடு எனவும் சொல்வர். திட்டமான அளவில் பெரிய கொம்புகள் மற்றும் திமிலும் கொண்டிருக்குமாம். சாம்பல் மற்றும் கருப்பு நிறத்தில் புளிக்குளம்  மாடுகள் இருக்கும். மதுரை, சிவகங்கை, தேனி போன்ற தென் மாவட்டங்களில் புளிக்குளம் மாடுகள் அதிகளவில் உள்ளன. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் மாட்டினம் இது.

திருவண்ணாமலை நாட்டு மாடுகள்

கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய நாட்டு மாடு தான் திருவண்ணாமலை நாட்டு மாடுகள். ஊசி இலை, தழைகளை சாப்பிட்டு வாழக் கூடியவை. இந்த ரக மாட்டின் கொம்பு மற்றும் கால் குளம்புகள் வெள்ளை நிறத்தில் இருப்பதுதான் இதன் சிறப்பு.  தற்போது அழிந்து வரும் மாட்டின பட்டியலில் இந்த மாடுகள் உள்ளன.

இது தவிர நெல்லை மாவட்டத்தில் தென்பாண்டி சிங்கம், இராமநாதபுரம் பகுதியில் உள்ள குட்டை மாடு,  ஹல்லிகர், கிர், கில்லாரி, ஓங்கோல்,  புங்கனூர், தர்பாகர் என பல மாநில நாட்டு மாடுகளும் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com