நிலவில் முதலில் காலடி வைக்க எட்வின் ஆல்ட்ரின் மறுத்தாரா?.. நூலிழையில் மாறிப்போனதா வரலாறு?

நிலவில் முதலில் காலடி வைக்க எட்வின் ஆல்ட்ரின் மறுத்தாரா?.. நூலிழையில் மாறிப்போனதா வரலாறு?
நிலவில் முதலில் காலடி வைக்க எட்வின் ஆல்ட்ரின் மறுத்தாரா?.. நூலிழையில் மாறிப்போனதா வரலாறு?

நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்க வேண்டியது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல! எட்வின் பஸ் ஆல்ட்ரின்..! ஏன் அவர் முதல் அடியை எடுத்து வைக்க வில்லை? முழு விபரம் இதோ!

ஜூலை 20, 1969 அன்று 20:17 மணியளவில் உலகம் முழுக்க ஒரு குரல் ஒளிபரப்பானது. “That's one small step for man, one giant leap for mankind” என்று அந்த குரல் உலகிற்கு சொன்னது. “மனிதன் எடுத்து வைக்கும் இந்த சிறிய அடி, மனித குலத்திற்கே மிகப்பெரிய ஏற்றம்” என்பதே இதன் பொருள். ஆனால் இக்குரல் பூமியிலிருந்து அல்லாமல் நிலவில் இருந்து ஒலித்தது. ஆம்! நிலவில் முதல் அடியை வைப்பதற்கு முன் நீல் ஆம்ஸ்ட்ராங் உதிர்த்த வாசகம் இது! இன்றுடன் அந்த வரலாற்று சாதனை நிகழ்ந்து 53 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் உண்மையிலே அன்றைய தினம் நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைக்க வேண்டியது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல! எட்வின் பஸ் ஆல்ட்ரின்..! ஏன் அவர் முதல் அடியை எடுத்து வைக்க வில்லை? முழு விபரம் இதோ!

நிலவை நோக்கிய அப்பல்லோ பயணம்:

“நிலவில் மனிதர்களின் காலடியை பதிப்போம்” என்ற அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடியின் சூளுரையை அடுத்து, நாசா நிலவுக்கு விண்கலங்களை அனுப்பும் தனது அப்பல்லோ சீரிஸை துவக்கியது. அதன் 11வது திட்டத்தில் தான் மனிதர்கள் நிலவில் இறங்கிய இந்த சரித்திர சம்பவம் நிகழ்ந்தப்பட்டது. அந்த அப்பல்லோ 11 விண்கலத்தில் தளபதியாக நீல் ஆம்ஸ்ட்ராங், கட்டளைப் பிரிவு பைலட்டாக மைக்கேல் காலின்ஸ், சந்திர கலனின் பைலட்டாக எட்வின் பஸ் ஆல்ட்ரின் ஆகிய மூவரும் பயணித்தனர்.

“வயதில் இளையவர்தான் முதலில் இறங்க வேண்டும்”

நாசாவின் விண்வெளிப் பயணங்களில் வீரர்களிடம் ஒரு விதி முக்கியமாக சொல்லப்படும். ஏதேனும் புதிய விஷயத்தை முயற்சிக்கிறோம் என்றால் அதை குழுவில் இளையவர் தான் செய்ய வேண்டும். அதன்படி அன்று அப்பல்லோ களத்தில் பயணித்தவர்களில் எட்வின் ஆல்ட்ரின் தான் இளையவர். அவர் முதலில் இறங்கவேண்டும் என்றுதான் நாசா தனது திட்டத்தில் குறிப்பிட்டு இருந்தது. நிலவில் விண்கலம் இறங்கியதும் எட்வினைத்தான் நாசா அதிகாரிகளும் நிலவில் இறங்கச் சொன்னார்கள். ஆனால் ஏன் நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கினார்?

“இளைய நபர் தான் முதலில் இறங்க வேண்டுமா? இது நியாயமில்லை”

எட்வின் நிலவில் இறங்குவதற்கான கட்டளை நாசாவில் இருந்து பிறப்பிக்கப்பட்டதும், அவர் அதை ஏற்க மறுத்தார். “நிலவில் விண்கலம் வந்து சேரும் வரை அனைத்து செயல்பாடுகளையும் பொறுப்பாக மேற்கொண்ட தளபதி எதற்காக கலத்திற்குள் இருக்க வேண்டும்?” என்று எட்வின் நாசாவிடம் கேட்டதாக பின்னாளில் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நாசா அதிகாரிகள் “நீங்கள் நிலவில் இறங்கியதும் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்களுக்கு கட்டளையிட தளபதி கலத்திற்குள்தான் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்க, இளையவர் என்பதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியாது என எட்வின் மறுத்துள்ளார். அதே வேளையில் நாசா குழுவில் இருந்த ஒரு விஞ்ஞானியும் எட்வினுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். இதையடுத்து நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்குவதற்கான உத்தரவை நாசா பிறப்பிக்க, அந்த வரலாற்று சம்பவத்தை நிகழ்த்தினார் ஆம்ஸ்ட்ராங். 65 கோடி மக்கள் இந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் நேரலையாக கண்டுகளித்தாக கூறப்படுகிறது.

நாசா என்ன சொல்கிறது?

நாசாவின் வரலாற்று இணையதளம், "அப்பல்லோ எக்ஸ்பெடிஷன்ஸ் டு தி மூன்", சற்று வித்தியாசமான கதையை சொல்கிறது. “சந்திரனில் காலடி எடுத்து வைக்கும் முதல் மனிதராக எட்வின் ஆல்ட்ரின் தான் திட்டமிடப்பட்டிருந்தார் என்று நிறுவனம் முதலில் கணித்தது. ஆனால் நிலவில் இறங்கிய விண்கலனில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஆல்ட்ரின் அமர்ந்திருந்த எதிர்புறத்தில் தரையிறங்குவதற்கான ஹட்ச் திறக்கப்பட்டது. ஆல்ட்ரின் முதலில் வெளியேற வேண்டுமானால், மற்றொருவரின் மீது ஏறித்தான் செல்ல வேண்டியிருக்கும். அதனால் ஆம்ஸ்ட்ராங் முதலில் இறங்க உத்தரவிட்டோம்” என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

வரலாறு என்னவோ எப்பொழுது முதலில் வந்தவர்களைத்தான் நினைவில் வைத்திருக்கிறது. எவ்வளவு நூலிழை வித்தியாசம் என்றாலும் இரண்டாம் இடம் இரண்டாம் இடம்தான்.. அந்த சிறிய நூலிழையில் தான் எட்வின் ஆல்ட்ரின் வரலாறும் கைவிட்டு போனது. ஆம்ஸ்ட்ராங்கின் வரலாறும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. இருப்பினும் இந்த நாளில் அன்று பயணம் மேற்கொண்ட இந்த இரண்டு விண்வெளி வீரர்களையும் போற்றுவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com