பேராசையில் இந்தியாவுக்கு ஓடோடி வந்த ஆங்கிலேயர்கள்! பலரையும் ஓடவிட்ட கோலார் தங்கச் சுரங்கம்

பேராசையில் இந்தியாவுக்கு ஓடோடி வந்த ஆங்கிலேயர்கள்! பலரையும் ஓடவிட்ட கோலார் தங்கச் சுரங்கம்
பேராசையில் இந்தியாவுக்கு ஓடோடி வந்த ஆங்கிலேயர்கள்! பலரையும் ஓடவிட்ட கோலார் தங்கச் சுரங்கம்

தங்கம் இன்று ஒரு கிராம் 5000 ஐ தாண்டிவிட்டது. சொல்லப்போனால் தங்கம் அப்பர் மிடில்கிளாஸ், பணக்கார வர்க்கத்தினர் பக்கம் போய்விட்டது.

அப்படிப்பட்ட தங்கமானது ஒரு காலத்தில் சாமானியரும் அணியும் விதத்தில் விலை குறைவாக இந்தியாவிலேயே கிடைத்தது என்றால் நம்ப முடிகிறதா? இந்தியாவில் கிடைக்கும் தங்கத்திற்காக அயல் நாடுகள் இந்தியா வந்து நம்மை அடிமைப்படுத்தினர் என்றால் நம்பமுடிகிறதா?. ஆம், கோலார் சுரங்கத்தில் உள்ள தங்கத்தை அடைவதற்காக அவர்கள் எப்படி எல்லாம் முயன்றார்கள் என்பதை சொல்லும் கட்டுரை தான் இது. வாங்க என்ன நடந்து என்று பார்க்கலாம்.

திப்பு சுல்தானின் தோல்வியும் கோலாரில் ஆங்கிலேயரின் ஆதிக்கமும்

1799 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் திப்பு சுல்தானை வென்று, கோலார் பகுதியை கைப்பற்றினார்கள். அப்படி, அவர்கள் வென்ற பகுதியை நிலமதிப்பீடு செய்ய லெப்ட்டினல் ஜான் வோரன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை கோலார் பகுதிக்கு அனுப்பினர் ஆங்கிலேயர்.

தங்கத்தின் பயணத்தை தொடங்கிய லெப்டினல் ஜான்வோரன்!

லெப்டினல் ஜான்வோரன், தங்கத்தப் பற்றி ஏதும் அறியாமல்தான் கோலார் பகுதிக்கு வந்தார். ஆனால், தனது பணியில் ஈடுபட்ட சமயம் அக்கிராமத்து மக்கள் மிக சுலபமாக ஆற்று நீரிலும், நிலத்தில் இருக்கும் மண்ணை சலித்தும், வெட்டியும் தங்கத்தை எடுப்பதை அவர் தெரிந்துக்கொண்டார். இவ்வளவு சுலபமாக கிராம மக்கள் நிலத்திலிருந்து தங்கத்தை எடுப்பதை தெரிந்துக்கொண்ட லெப்டினல் ஜான்வோரன், அவ்விடத்தில் தங்கம் நிலத்திற்கு அடியில் கிடைக்கிறதா? என்பதை தெரிந்துக்கொள்ள தேடுதலைத் தொடங்கினார்.

பல தேடல்களுக்குப்பிறகு அவ்விடத்தில் தங்கம் இருப்பதை ஜான் வோரன் தெரிந்துக்கொண்டு அதிர்ச்சியானார். தான் ஒரு சர்வேயர் என்பதால் தங்கத்தின் இருப்பிடத்தின் அளவு அதன் எல்லை உள்பட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அவ்விடத்தை பற்றியும், தங்கத்தின் படிமானத்தைப்பற்றியும் கட்டுரை ஒன்றை எழுதினார். பின்னர், உள்ளூர் மக்களின் உதவியால் அவர் அங்கு தங்கத்தை வெட்டி எடுக்க முயன்றார். ஆனால் அவரின் முயற்சி தோல்வியைதான் தந்தது.

பலரையும் தூண்டிய ஒற்றை ஆய்வுக் கட்டுரை!

ஆனால், வோரனின் ஆய்வுக்கட்டுரையில் உண்மை இருப்பதை உணர்ந்த ஆங்கிலேய அதிகாரிகளும், சில சுரங்க செல்வந்தர்களும் அங்கு தங்கத்தை தேடத்துவங்கினர். இருந்தும் அவர்களுக்கு பணம் தான் விரயமானதே தவிர, தங்கம் கிடைக்கவில்லை. அதாவது கிடைத்த கனிமத்தை தங்கமாக்கத் தெரியவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம்.

தேடல் பயணத்தில் அடுத்து வந்த ஆங்கிலேயர்!

இச்சமயத்தில் ஆங்கிலேயர் ஆர்மியில் பணிசெய்த மைக்கல் ஃபிட்க்ரோல் லவேல் என்பவருக்கு இச்செய்தி எட்டவே, அவரும் தங்கத்தைத் தேடி இந்தியா வந்தார். அவரும் வோரனின் ஆய்வுக்கட்டுரையின் உண்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு, அக்கிராம மக்களின் உதவியுடன் தங்கத்தின் தேடலை ஆரம்பித்தார்.

இந்த முறை இவர்களின் தேடல் வீண்போகவில்லை. கிராம மக்களின் சொல்படி கோலாரின் மண்ணை நீரில் அலசிப்பார்த்த லவேலுக்கு ஆச்சர்யம் தாளவில்லை. ஆம் அவர் தேடி வந்த தங்கம் குண்டுமணி அளவுகளில் கிடைத்தது. அதன்பின் அவ்விடத்தில் ஒரு நவீன சுரங்கம் அமைக்கும் எண்ணத்தை லவேல் மேற்கொண்டார். அதற்காக சுரங்கத்தில் வேலைசெய்வதற்கு பல மனித அடிமைகளை அங்கு வரவழைத்து தங்கம் எடுக்கும் பணிக்கு அவர்களைக் கட்டாயப்படுத்தினார். ஆனால் ஃபிட்க்ரோல் லவேல் நினைத்தது போல் அது அவ்வளவு சுலபமானதாக அவருக்கு இருக்கவில்லை.

அவ்வளவு சுலபத்தில் தங்கம் கிடைக்கவில்லை!

கோலாரில் மக்கள் தங்கத்திற்காக துன்புறுத்தப்படுவதையும், அவர்களின் ஆபத்தான வாழ்க்கைப்பற்றியும் கோலாருக்கு வருகைதந்த எஃப்.வி.பென்னி என்பவர்
”Living Dangerously” என்ற நூலை லண்டனில் வெளியிட்டார். மாறாக, அந்நூலானது மேலும் பல சுரங்க முதலாளிகளை அவ்விடம் ஈர்த்தது. இச்சமயத்தில் தனது இக்கட்டான சூழ்நிலையில் ஃபிட்க்ரோல் லவேல் தனது சுரங்கத்தை ‘அர்பேட் நோட் & கம்பெனி’க்கு விற்று விட்டு தனது தாய்நாடு திரும்பினார்.

நவீன கருவிகளுடன் புதிய முயற்சி! ஆனால்..!

அர்பேட் நோட் & கம்பெனி சில பணம் படைத்தவர்களின் உதவியுடன் ஓரு கூட்டமைப்பை உருவாக்கி, சில நவீன கருவியுடன் சுரங்கத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்தனர். ஆனால், இவர்கள் நினைத்தது போலவே பல விதங்களில் முயன்றும் அவர்களால் தங்கத்தை பிரித்தெடுக்க முடியவில்லை. நாளடைவில் அவ்வமைப்பு தங்கத்திற்கான தேடுதலை குறைத்துக்கொண்டு, வந்த விலைக்கு அச்சுரங்கத்தை வேறொரு நிறுவனத்திடம் விற்றுவிட்டுச் சென்றது.

பல கைகளுக்கு மாறிய கோலார் சுரங்கம்!

இப்படியாக கோலார் சுரங்கத்தை பல நிறுவனங்கள் வாங்கி தங்கபுதையலைத் தேடி சலித்த நிலையில் பிரித்தானியாவின் சுரங்கம் மற்றும் கட்டுமான நிறுவனமான ஜான் டெய்லர் & சன்ஸின் நிறுவனர் கோலார் நிலத்தின் உரிமையை வாங்கிக்கொண்டார். பின்னர், ஜான் டெய்லர் கோலாரில் உள்ள இடங்களையும் பழைய மற்றும் புதிய சுரங்கத்தின் வாயில்களையும் ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் பண்டைய காலத்து சுரங்க வாயில் ஒன்று இருப்பதை கண்டுப்பிடித்தார். அது, இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னதாக சோழர்கள் தங்கத்தை எடுப்பதற்காகப் பயன்படுத்திய நுழைவாயிலாக இருந்ததை தெரிந்துக்கொண்ட டெய்லர், பல எதிர்ப்பையும் மீறி அவ்விடத்தை தேர்வு செய்து அங்கிருந்து தனது தேடுதலை ஆரம்பித்தார். இறுதியாக அவர் தேடுதலுக்கு விடை கிடைத்து. ஆயிரம் கிலோ பாறைகளில் 100 கிராம் தங்கம் கிடைத்தது.

அடிமைகளும் தங்கச் சுரங்க பணிகளும்!

பிறகு அங்கு தொடர்ந்து தங்கம் தோண்டும் பணி நடந்து வந்தது. அதனால், பல பணியாளர்கள் அவ்விடத்தில் அடிமைகளாக தங்கவைத்து அவர்களுக்கென ஒரு கிராமும் உருவாக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும் 1956 வரை கோலாரில் தங்கம் தோண்டப்பட்டு வந்தது. 1963 பின் அது இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் சில பல காரணங்களால் தங்கத்தின் உற்பத்தியை விட அதற்கு ஆகும் செலவு அதிகமாக இருந்ததால், இந்திய அரசாங்கம் சுரங்கத்தை 2001 ல் நீதிமன்ற உத்தரவுடன் மூடிவிட்டது. தற்பொழுது இருக்கும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் மறுபடி சுரங்கத்தை திறந்தால், பலருக்கு வேலை கிடைப்பதுடன் உலகளவில் இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என்பது சந்தேகமில்லை.

ஜெயஸ்ரீ அனந்த்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com