”வந்து விட்டது மழைக்காலம்” - உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி? - சித்தமருத்துவர் பேட்டி

”வந்து விட்டது மழைக்காலம்” - உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி? - சித்தமருத்துவர் பேட்டி

”வந்து விட்டது மழைக்காலம்” - உடல் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி? - சித்தமருத்துவர் பேட்டி
Published on


மழைக்காலம்... இந்தக் காலங்களில் குழந்தைகள், நடுத்தர வயதினர், முதியோர்கள் என அனைத்து தரப்பினரையும் நோய் ஒருபாடு படுத்திவிடும். சளியில் ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு நோயானது, கவனமின்மையாலும் அலட்சியத்தாலும் இறுதியில் அதிகப்படியான காய்ச்சலுக்கு வித்திட்டு விடும் அபாயம் இருக்கிறது. ஆகையால் கொஞ்சம் சமயோஜித புத்தியுடன் இந்த மழைக்காலத்தை நாம் கையாள வேண்டி இருக்கிறது.

அதன்படி இந்த மழைக்காலத்தில் என்ன விதமான நோய்கள் நம்மைத் தாக்கக்கூடும், உணவில் நாம் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் என்னென்ன உள்ளிட்டப் பல விஷயங்களை அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் அவர்களை தொடர்புகொண்டு பேசினோம். நமது கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு:

மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி கூறுங்கள்?

பொதுவாக குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகமாக ஏற்படுகின்றன. குழந்தைகள் சளியோ அல்லது இருமலால் பாதிக்கப்பட்டால், பெற்றோர் உடனே மாத்திரை மருந்துகளை நாடிச் செல்கின்றன. இந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது.

குழந்தைகளுக்கு சளியோ அல்லது இருமலோ ஏற்படுமாயின், சுடு தண்ணீர் கொடுப்பதில் தொடங்கி அதிக நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை கொடுப்பது என படிப்படியாகத்தான் மருந்துகளை அணுக வேண்டும். மிகச் சிறிய குழந்தைகளாயின் இருப்பின், தாய்ப்பாலுடன் உறை மாத்திரையை கலந்து கொடுக்கலாம். சிறுவர் சிறுமியராக இருப்பின் அவர்களுக்கு உணவில் தூதுவளைச் சட்னி, கற்பூரவல்லி சட்னி, கொள்ளு சுண்டல், கொள்ளு சட்னி, கொள்ளு ரசம் உள்ளிட்ட உணவுகளை கொடுக்கலாம். இது தவிர்த்து அதிகமான கீரைகள் மற்றும் காய்கறிகளை பகல் உணவின்போது எடுத்துக்கொள்ளலாம்.

முதியோர்கள் மற்றும் நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வோர் சித்த மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் சில மருந்துகளை எடுத்துக்கொண்டு உடலை பராமரித்துக்கொள்ளலாம். மூச்சுத்திணறல், இருமல் பிரச்னை உள்ளவர்கள் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

குறிப்பாக இரவில் கீரை சாப்பிடுவது, குளிர்ச்சியான காற்றில் அதிக நேரம் இருப்பது முதலியவற்றைத் தவிர்க்கலாம். குளிர் நீரில் குளிப்பதைத் தவிர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். கூடுமானவரை குளிர்சாதன அறையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இந்தக் காலங்களில் முதியோர்கள் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நடுத்தினர் வயதினர் கவனத்தில் கொள்ள வேண்டிவை?

துரிதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்க்கவேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இரவு நேர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சாப்பிடும் உணவுடன் இணைத்து ஐஸ்கீரிமை எடுத்துக்கொள்வதை உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை இரவு நேரங்களில் அதிகமான உணவை எடுத்துக்கொள்வதை தவிர்ப்பதுடன், சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்வது மிக முக்கியமானது.

வாரத்திற்கு இரு முறை ஆவிப்பிடிக்கலாம். இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் மஞ்சள், மிளகு மற்றும் பால் கலந்த கலவையை எடுத்துக்கொள்ளலாம். குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்த்து, உடலுக்கு வெப்பம் கொடுக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். மதிய வேளையில் மோர் குடிக்கலாம். மனநல ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மோர் முக்கியப்பங்கு வகிக்கும்.

இந்தக் காலங்களில் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாமா?

ஆம், அவரவர் உடல்நிலையைப் பொறுத்து நிச்சயம் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். இந்தப் பயிற்சிகள் உடலின் வெப்ப நிலையை அதிகரிக்க உதவும்.

- கல்யாணி பாண்டியன் 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com