பண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை

பண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை
பண்டிகை காலங்களில் தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை

தொடர்ந்து உயர்ந்து வரும் வெங்காயம் விலையை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் சமயத்திலே வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விற்பனை ஒவொரு வருடமும் குறையும் என்றாலும், வெங்காயத்தின் விலை இந்த வரும் நவராத்ரி பண்டிகை காலத்திலும் தொடர்ந்து உயர்ந்து இருப்பது பொதுமக்களுக்கு கவலை அளிக்கிறது.

மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மழை குறைவு காரணமாக வெங்காய விளைச்சல்  பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதால்தான் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நவராத்திரி பண்டிகை முடிந்த பிறகு தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் வெங்காயத்தின் விலை டெல்லி போன்ற இடங்களில் ஒரு கிலோ 50 ரூபாய் வரை கூட  அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக மத்திய மாநில அரசுகளும் கவலையடைந்து, சில்லறை வணிகத்தில் வெங்காயம் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பதை கண்காணித்து வருகின்றன. அரசியல் ரீதியாக, வெங்காயம் விலை உயர்வது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி அரசு ஆட்சியில் இருந்த போது வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாகவே  சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்தித்தது என்பது இன்றும் நினைவில் உள்ள நிகழ்வு.

அடுத்த மாதம் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மத்திய அரசு வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க விடாமல் தடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தொடர் அழுத்தம்  கொடுத்து வருகின்றனர். அடுத்த வருடம் மக்களவை தேர்தல் நடக்க உள்ளது என்பதையும் அவர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.அன்றாடம் சமையலில் பயன்படுத்த கூடிய பொருள் என்பதால், வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் போது பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் மொத்த விலை சந்தைகளிலேயே வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 22 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள  சந்தைகளில் தற்போது வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.இது வரும் நாட்களில் இன்னும் மடமடவென உயர்ந்து ஒரு கிலோவுக்கு 50 ரூபாய் வரை கூட போகக் கூடும் என சில்லறை வியாபாரிகள் கருதுகிறார்கள். 

மகாராஷ்டிராவில் உள்ள வெங்காய சந்தைகளில் வரத்து குறைந்ததால்  வெங்காயத்தின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தீபாவளிக்கு டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய் வரை விற்கக்கூடும் என சொல்லப்படுவது மத்திய அரசை உடனே நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது. விலை ஏற்றம் குறித்த புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், மத்திய அரசின் அதிகாரிகள் குழு ஒன்று வெங்காயத்தின் வரத்து,  விலையேற்றத்துக்கான காரணம், எந்த அளவுக்கு இருப்பு உள்ளது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்தது. 

இதைத் தொடர்ந்து டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பால், காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்யும் மதர் டைரி வெங்காயத்தின் விலையை கிலோவுக்கு 2 ரூபாய் வரை உடனடியாக குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் மத்திய அரசிடம் இருப்பில் உள்ள  வெங்காயத்திலிருந்து உடனடியாக டெல்லி மற்றும் அதன் அருகில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்வதற்காக கூடுதல் அளவு விடுவிக்க வேண்டும் எனவும்  முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

பண்டிகை சமயத்திலேயே தட்டுப்பாடு வரக்கூடாது, விலை அதிகரிக்கக் கூடாது என்கிற நோக்கங்களுடன் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த அதிகாரிகள் குழு ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடையும் சமயத்தில், விவசாயிகள் நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக NAFED போன்ற அரசு அமைப்புகள் மூலம் மத்திய அரசு வெங்காயத்தை கொள்முதல் செய்கிறது. பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், இந்த வெங்காயத்தை சந்தையில் விற்பனைக்கு அனுப்புகிறது.

அதுபோன்ற நடவடிக்கை தற்போது எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து விரைவிலேயே வெங்காய வரத்து அதிகரிக்கும் என்றும் அதன் மூலமாக மேலும் விலை உயர்வை தடுக்க முடியும் எனவும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கருதுகிறார்கள்.நுகர்பொருள் துறை செயலாளர் அவினாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இனிவரும் நாட்களிலும் வெங்காயத்தின் விலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வர இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் லசன்காவ், நாசிக் உள்ளிட்ட இடங்களில் உள்ள சந்தைகளில் வெங்காயம் அதிக அளவு விற்கப்படுகிறது. இந்த வருடம் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் பருவமழை குறைந்ததால், வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு போன்ற பொருட்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com