50% க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே எம்.பி.,எம்எல்ஏ ஆகவேண்டும்

50% க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே எம்.பி.,எம்எல்ஏ ஆகவேண்டும்
50% க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே எம்.பி.,எம்எல்ஏ ஆகவேண்டும்

2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது சந்தேகம்தான் என செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு படு பாதாளத்தை நோக்கி சரிந்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவில் தற்போதுள்ள தேர்தல் நடைமுறையை மாற்றி தங்களுக்கு சாதகமான ஒரு முறையைக் கொண்டுவருவதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்காகவே பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

பாஜகவின் இந்த சதித் திட்டத்துக்கு சட்ட ஆணையம், தேர்தல் ஆணையம், நிதி ஆயோக் ஆகிய அமைப்புகளும் கருவிகளாக்கப்படுகின்றன. இந்தியத் தேர்தல் முறையில் சீர்திருத்தம் தேவை என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வார்கள். அந்த சீர்திருத்தம் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதாக இருக்க வேண்டுமேயொழிய முடக்குவதாக இருக்கக்கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதல்ல, முடக்குவதாகும். அது எப்படி என்பதை நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக இதே சட்ட ஆணையத்தால் முன்வைக்கப்பட்ட வேறு சில ஆலோசனைகளையும் அவற்றை ஏன் பாஜக அரசு பரிசீலனைக்குக்கூட எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் ஆராய்வோம். 

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதுதான் தற்போதிருக்கும் நமது தேர்தல் முறை. அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்கள் யாவரும் சேர்ந்து பெற்ற வாக்குகளைச் சேர்த்துப் பார்த்தால், பலசமயம் அது வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளைவிடக் கூடுதலாக இருப்பதுண்டு. எனவே அந்தத் தொகுதியில் சிறுபான்மை வாக்குகளைப் பெற்றவர் வெற்றி பெற்று அந்தத் தொகுதியின் பிரதிநிதியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. 'பெரும்பான்மைக்கு அதிகாரம்' என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கு இது எதிராக உள்ளது. 

சிறுபான்மை அளவு வாக்குகளைக் கொண்டு வெற்றி பெறும் நிலை ஒன்றிரண்டு தொகுதிகளில் இருந்தால் அதை நாம் அலட்சியப்படுத்தி விடலாம். பல மாநிலங்களில் சுமார் 75  சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி குறைந்த அளவு வாக்குகளில் வெற்றி பெற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களில் பலபேர் இருபது சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இடம் பெற்றிருந்த சுமார் 67 சதவீத எம்.பி.க்கள் குறைந்த அளவு வாக்குகளில் வென்று வந்தவர்களாக இருந்தனர். 2009 ஆம் ஆண்டு தேர்தலிலோ 120 எம்பிக்கள் மட்டும்தான் 50% க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தனர். 2014 பொதுத் தேர்தலில் ஆரவாரத்தோடு பேசப்பட்ட மோடி அலையிலும்கூட 201 எம்பிக்கள் மட்டுமே 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தனர்.


வெற்றி பெறுகிறவர் ஐம்பது சதவீதத்துக்குக் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நமது தேர்தல் முறையில் இல்லை. இதனால் தான் இந்த நிலைமை. ஒரு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்  அந்தத் தொகுதி மக்களில் பெரும்பான்மைப் பகுதியினரின் பிரதிநிதியாக இல்லாமல் ஒரு சிறு தரப்பினரின் பிரதிநிதியாக மட்டுமே இருப்பதற்கு இது வழி வகுக்கிறது. பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையையே இது தகர்த்து விடுகிறது.

இப்போதுள்ள தேர்தல் முறை இன்னொரு ஆபத்துக்கும் இட்டுச்செல்கிறது. ''ஒரு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சேர்ந்த பிரிவினரின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் நாம் வெற்றி பெற்று விடலாம்'' என்ற எண்ணத்தை இது வேட்பாளர்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது சாதி, மத அடிப்படையில் செயல்பட இது வழிவகுக்கிறது. 'பரவலான மக்களின் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய அவசியமில்லை. குறுகிய சில வாக்குறுதிகளைத் தந்தாலே போதும்' என அரசியல் கட்சிகள் எண்ணுவதற்கும் இதுவே காரணமாகிறது.


இந்த நிலையை மாற்றுவதற்கு இரண்டு விதமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. இப்போதுள்ள தேர்தல் முறையிலேயே தேர்தலை நடத்துவது. வெற்றி பெறுகிறவர்கள் எந்தெந்த தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்களோ அங்கெல்லாம் முதலில் வந்துள்ள இரண்டு வேட்பாளர்களை மட்டும் வைத்து மீண்டும் ஒரு வாக்குப்பதிவை நடத்தி அதில் யார் ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறுகிறாரோ அவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது என்பது ஒரு யோசனை.


பெரும்பாலான தொகுதிகளில் மைனாரிட்டி அளவு வாக்குகளில் வெற்றி பெறும் நிலை இருப்பதால் மறுதேர்தல் என்பது ஏறக்குறைய நாடு முழுமைக்கும் நடத்த வேண்டிய நிலை இதனால் ஏற்படும். எனவே இது சாத்தியமில்லை என்ற கருத்து எழலாம். அதனால் அதில் ஒரு தீர்வும் சொல்லப்பட்டது. இந்த முறையினால் ஏற்படும் காலம் மற்றும் பொருள் செலவைத் தடுக்க முதலிலேயே ஒவ்வொரு வாக்காளரிடத்திலும் மாற்று வாக்கு ஒன்றைச் செலுத்தும்படி கோருவது. எந்தெந்த தொகுதிகளில் மெஜாரிட்டி வாக்கு கிடைக்கவில்லையோ அங்கு மட்டும் அந்த மாற்று வாக்குகளை எண்ணுவது என்பதுதான் அந்தத் தீர்வு. எந்திர வாக்குப்பதிவு வந்து விட்ட இன்றைய சூழலில் இது செலவு பிடிப்பதாகவோ, கால தாமதம் ஆவதாகவோ இருக்காது.ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வைக்கும் ஏற்பாடு குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் ஒருவர் வெற்றி பெறுவதைத் தடுப்பது மட்டுமின்றி அரசியல் கட்சிகள் பரந்த அளவிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். சாதி, மத செல்வாக்கையும் அது  கட்டுப்படுத்தும்.

இந்த ஆலோசனைகள் பாஜக அரசால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதுவதற்காக நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷனின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அந்தக் கமிஷனில் தேர்தல் சீர்த்திருத்தங்களை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட துணைக்குழுவினால் அவை ஆராயப்பட்டன. அக் குழுவின் தலைவராக ஆர்.கே.திரிவேதி இருந்தார். பி.ஏ.சங்மா, மோகன் தாரியா, என்.என்.வோரா, பேராசிரியர் ஆர்.பி.ஜெயின் உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்களாக இருந்தனர். அந்தக்குழு ''ஐம்பது சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றவரே ஒரு தொகுதியின் பிரதிநிதியாக வரவேண்டும். அதற்கேற்ப தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும்'' எனப் பரிந்துரை செய்தது. அந்தப் பரிந்துரையை ஏன் மோடி அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சிக்கவில்லை? ஏனென்றால் அது நடைமுறைக்கு வந்தால் மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு அதன் அடிப்படையில் வாக்கு சேகரிப்பது கடினமாகிவிடும். 50%க்கும் கூடுதலான வாக்குகளைப் பெற வேண்டும் என்பதனால் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்தாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்துவிடும். அது எப்படி பஜகவின் வகுப்புவாத அரசியலுக்கு ஒத்துவரும்?  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com