வீரியமிக்க கவிதைகளால் விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியின் நினைவுநாள்
தேசியப் பாடல்களால் சுதந்திர வேள்வியை மூட்டியவர் பாரதி மகாகவியின் 96 ஆவது நினைவு நாள் இன்று.
1882 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார் சுப்பையா என்கிற சுப்பிரமணிய பாரதியார். சிறு வயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றிருந்ததால் பாரதி என அழைக்கப்பட்டார். எட்டயபுரம் மன்னரின் அவைப் புலவராகவும் பாரதியார் திகழ்ந்தார். நாட்டு விடுதலைக்காகவும், பெண் விடுதலைக்காகவும், ஜாதிக் கொடுமைகளை ஒழிப்பதற்காகவும் சாகா வரம் பெற்றப் பல பாடல்களைப் இயற்றியுள்ளார் பாரதியார்.
ஆணுக்கு பெண் நிகரென்றும், குல தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம் என்றும் எடுத்துரைத்தவர் பாரதி. 1904 ஆம் ஆண்டு சுதேசமித்திரன் பத்திரிக்கையிலும் சக்கரவர்த்தினி மற்றும் "இந்தியா" வார இதழிலும் பணியாற்றியவர் பாரதியார். குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட காவியங்களையும், 1912 ஆம் ஆண்டு கீதையையும் மொழிபெயர்த்தார் பாரதி.
சதா சர்வகாலமும், தன் நாட்டைப் பற்றியும், தாய்மொழியாம் தமிழைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தவர் மகாகவி பாரதியார். காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன் என்று காலனுக்குரைத்த பாரதி, 1921 ஆம் ஆண்டு இதே நாளில், காலப் பெருவெளியில் கவிதையாய் கலந்தார்.