பிரபலங்கள் வலம்வரும் மாலத்தீவு... யாருக்கு உகந்தது பட்ஜெட்? - ஒரு சுற்றுலா கைடன்ஸ்
சமீப காலமாக சமூக வலைதளங்களின் பிரபலங்களின் புகைப்படங்கள் நிரம்பி வழிகின்றன. பாலிவுட், கோலிவுட் என சினிமா பிரபலங்களும், விளையாட்டுப் பிரபலங்களும் மாலத்தீவுக்கு படையெடுத்து, அங்கிருந்து அள்ளிவீசும் புகைப்படங்கள்தான் அவை.
கொரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல் பலரும் முடங்கிக் கிடந்த நிலையில், சுற்றுலா மனநிலையை தூண்டும் விதமாக இருக்கிறது பிரபலங்களின் மாலத்தீவு விசிட்கள்.
'இடமெல்லாம் வண்ணமயமாகத்தான் இருக்கிறது. ஆனால், பிரபலங்கள் குவியும் மாலத்தீவுக்கு நடுத்தர குடும்பத்தினரெல்லாம் போக முடியுமா?' என்று உங்களுக்குள் ஏதேனும் சந்தேகம் எழுந்தால், அதற்கான பதிலையும் இங்கேயே சொல்லி இருக்கிறோம். மேற்கொண்டு படியுங்கள்.
2009ம் ஆண்டு ஒரு நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது. அந்த அதிசய நாடுதான் மாலத்தீவு. மிகவும் குட்டி நாடு. முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கும் ஒரு நாடுதான் மாலத்தீவு. கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் நீர்தான் இருக்கிறது மாலத்தீவில். புவி வெப்பமயமாதலால் கடலின் நீர்மட்டம் உயர்ந்தால், முதலில் பாதிக்கப்படும் நாடு மாலத்தீவுதான். அதனைக் குறிப்பிடும் விதமாகத்தான் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு மாலத்தீவு. அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல விஷயங்கள் மாலத்தீவில் உள்ளன. பரபரப்புகளுக்கு இடையே நொந்துபோன மனங்களை புத்துணர்ச்சியூட்ட மாலத்தீவில் பல இடங்கள் உள்ளன.
மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு ஆகியவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்கள். மேலில் இருக்கும் வெள்ளி தொழுகை மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று.
மாலத்தீவில் சுற்றுலாத் தலம் எல்லாமே தீவுகளை ஒட்டியவைதான்.
சன் ஐலேண்ட் மனதைக் கவரும் மலர்களையும், இயற்கைக் காட்சிகளையும் உடையது. அலிமதா தீவு குடும்பத்தோடு செல்பவர்களின் தேர்வாக இருக்கிறது. வாழைப்பழ வடிவில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் பனானா ரீஃப் பகுதி கொள்ளை அழகு. மேலும் இங்கு ஸ்கூபா டைவிங் பிரபலமானது. கடல் வாழ் உயிரினங்களின் அழகைப் பார்த்து ரசிக்க விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இடம் ப்ளூட்ரைப் மூஃப்ஷி தான். கடலுக்குள் அழகிய உலகை கண்முன் விரிய வைக்கிறது ப்ளுட்ரைப் முஃப்ஷி.
மாலத்தீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம். கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாள்கள் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். சென்னையில் இருந்து சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது (ஒரு ட்ரிப்). அதேபோல், விமான டிக்கெட்டுகளுடன் கூடிய முழு பேக்கேஜ்களும் பல கிடைக்கின்றன. இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. தற்போது கொரோனா நேரம் என்பதால், அதற்கான சில கட்டுப்பாடுகளும் தற்போது உள்ளன.
தேனிலவு செல்வது, குடும்பத்தினருடன் செல்வது, நண்பர்களுடனான சுற்றுலா என பல வகையான பேக்கேஜ்கள் செல்லும் நபர்களுக்கு ஏற்ப இருக்கின்றன. தேன்நிலவு பேக்கேஜ் என்றால், 3 இரவுகள் கொண்ட சுற்றுலாவானது, ரூ.40 ஆயிரம் (இருவருக்கு) முதல் உள்ளன. இந்த விலைக்குள்ளேயே சாப்பாடு, விமானம், தங்குமிடம், சுற்றிப் பார்க்கும் செலவுகள் இடங்கள். இதேபோல ரூ.50 ஆயிரம், ஒரு லட்சம் என பல பேக்கேஜ்களை கொண்டுள்ளது மாலத்தீவு. இதேபோல் குடும்பத்தினருடன் செல்வதற்கு, சீசன் சுற்றுலா என பல பேக்கேஜ்களை கொண்டுள்ளது மாலத்தீவு சுற்றுலா. ஒரு லட்சம் ரூபாய்க்குள் ஒரு வெளிநாட்டு சுற்றுலா என்று தேர்வு செய்தால், அதில் நிச்சயம் மாலத்தீவு இருக்கும். நம்முடைய பட்ஜெட் என்னவென்பதற்கு ஏற்ப தங்குமிடும், மாலத்தீவில் செல்லுமிடம், தங்கும் நாள்களை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம்.
அது இருக்கட்டும்... இப்படி செலவு குறைவாக இருக்குமிடத்திற்குத்தான் பிரபலங்கள் செல்கிறார்களா என்றுகூட உங்களுக்கு சந்தேகம் வரலாம். வெளியான தகவலின்படி, கொரோனாவுக்கு பிறகு தற்போது சுற்றுலாத் துறையை மேம்படுத்த திட்டமிட்டுள்ள மாலத்தீவு அரசு, பிரபலங்களுக்கு இலவச அழைப்பைக் கொடுத்து, அவர்கள் மூலம் விளம்பரத்தைத் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.
மாலத்தீவில் எடுக்கப்பட்ட பிரபலங்களின் ஒவ்வொரு புகைப்படங்களும் சுற்றுலாவுக்கான விளம்பரம் என்றே திட்டமிடுகிறது அந்நாட்டு அரசு. தொடர்ந்து அடுத்தடுத்த நடிகைகள் பலரும் மாலத்தீவில் குவிய இப்படி ஒரு காரணம் இருக்கிறதா என்று தற்போது வாய்பிளக்கின்றனர் ரசிகர்கள். அதேவேளையில், மாலத்தீவுக்கு ஒரு விசிட் அடித்துவிட வேண்டுமென்பதும் தற்போது பலரின் எண்ண ஓட்டமாகவே இருக்கிறது.
மேலும் தகவலுக்கு https://visitmaldives.com/en என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.
தொடர்புடைய செய்தி > மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் தமிழ் நடிகைகள்... வைரல் புகைப்படங்கள்!