மழைக்காடுகள் தொடங்கி வெப்பமண்டல தீவுகள் வரை: பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை

மழைக்காடுகள் தொடங்கி வெப்பமண்டல தீவுகள் வரை: பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை
மழைக்காடுகள் தொடங்கி வெப்பமண்டல தீவுகள் வரை: பழங்குடியின மக்களின் வியக்க வைக்கும் வாழ்க்கை

உலக பழங்குடியின தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பூமி பந்தில் உள்ள மழைக்காடுகள் தொடங்கி வெப்பமண்டல தீவுகள் வரை வசித்து வரும் சில மரபான பழக்க வழக்கங்களை கொண்டுள்ள பழங்குடியின மக்களை குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட இவர்களது வாழ்க்கை அவதார் படத்தில் வரும் நாவி மக்களின் வாழ்க்கை போலவே உள்ளது. 

காடு, மலை என இயற்கையோடு இரண்டறக் கலந்து இணைந்து வாழ்ந்து வரும் வாழ்க்கை முறையை பின்பற்றி வருபவர்கள் பழங்குடியின மக்கள். தங்களுக்கென தனி வழியையும், அது சார்ந்த வாழ்க்கை முறையும் பின்பற்றி வருபவர்கள். 

உடை, உணவு, மொழி, மருத்துவ முறை என உலகம் முழுவதும் வசித்து வருகின்ற பழங்குடியின மக்களின் பழக்க வழக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. இவர்கள் பெரும்பாலும் ஒரு பெருந்திரளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்பவர்கள். ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா என உலகின் அனைத்து கண்டங்களிலும் இவர்களது இருப்பு இருந்து வருகிறது. 

இவர்களை இயற்கையின் பாதுகாவலர்கள் எனவும் சொல்லலாம். அதற்கு காரணம் இயற்கைக்கு எந்தவித ஊரும் கொடுக்காமல் அதோடு இணைந்து வாழ்ந்து வருவதால் தான். இவர்கள் இயற்கையின் நலனுக்காக உலக சக மக்களிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள். 

நவீன யுக வளர்ச்சியினால் சில மாற்றங்கள் வெவ்வேறு பழங்குடியின மக்களின் வாழ்வில் நிகழந்திருந்தாலும் பின்வரும் இந்த பழங்குடியின உலகம் இன்னும் அவர்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற படியே உள்ளது. 

ஹுலி விக்மென் :

பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள தாரி ஹைலேண்ட் தான் ஹுலி விக்மென் பழங்குடியின மக்களின் வசிப்பிடம். 

தங்களது தலை முடியை தொப்பிகளாக மறு உருவாக்கம் செய்து அணியும் வழக்கத்தை கொண்டவர்கள். லட்சக்கணக்கானோர் இவர்களது இனத்தில் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் முகத்தில் மஞ்சள் வர்ணம் பூசிக் கொள்வதையும், கோடாரி மாதிரியானவற்றை கையில் பாதுக்காப்புக்காக கொண்டுள்ளனர். 

இவர்களது பாரம்பரிய நடனமாக பறவை நடனம் உள்ளது. தங்கள் வாசிப்பிடத்தில் காணப்படும் பறவைகளைப் போல குரல் மூலம் பிரதிபலிக்கின்ற தன்மையும் கொண்டவர்கள். இவை அனைத்திற்கும் மேலாக தங்கள் பாரம்பரியத்தை வாழ வைப்பதற்கான ஒரு வழியாக சுற்றுலாவை இந்த மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டின் பிரதமர் James Marape இந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர்களை தவிர இந்த நாட்டில் இன்னும் பல பழங்குடியின மக்கள் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

டோகன் பழங்குடியினர் : 

மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் வசித்து வருபவர்கள் டோகன் பழங்குடியினர். 4 முதல் 8 லட்சம் வரையிலான மக்கள் இந்த இனத்தை சார்ந்தவர்களாக மாலியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் வசித்து வருகின்றனர். அவர்களது மாஸ்க் நடன, மரசிற்ப வேலைப்பாடு பரவலாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றனர். மாலி நாட்டின் சுற்றுலாவில் இவர்களுக்கென தனியிடம் உண்டு. 

அந்த பகுதியில் அமைந்துள்ள மலைகள் மற்றும் பாறைகளில் படிந்துள்ள புறா மாதிரியான பறவைகளின் எச்சங்களை சேகரித்து அதை விவசாய உரத் தேவைக்காக பயன்படுத்தும் நபர்களிடம் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

உலகின் தற்போதைய நிலையினால் இந்த பகுதியில் சுற்றுலா முடங்கி போயுள்ளது. அதனால் தற்போது சில சங்கடங்களை இந்த மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலையும் இவர்கள் எதிர்கொண்ட வேண்டியுள்ளது. 

நெனட் :

சைபீரியாவில் வசித்து வருபவர்கள் இந்த நெனட் பழங்குடியின மக்கள். அங்குள்ள யமல் தீபகற்பம் இவர்களது வசிப்பிடமாக உள்ளது. சுமார் 10000 பேர் கொண்ட குழு அவர்களுடையது. நாடோடிகளாக வாழ்பவர்கள். முழுவதும் பனி நிறைந்த பிரதேசங்களில் வாழ்ந்து வருபவர்கள். மான்களை பூட்டிய வண்டிகளை இடப்பெயர்வுக்கு பயன்படுத்தும் வழக்கத்தை கொண்டவர்கள். 

அவர்களது வசிப்பிடத்தில் சில தசாப்தங்களுக்கு முன்னதாக எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் தற்போது அவர்களது வாழ்க்கை சூழலில் சில சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். காலநிலை மாற்றமும் அவர்களை இம்சித்து வருகிறதாம். 

இம்பா மக்கள் :

ஆப்பிரிக்காவின் நமீபியா பகுதியில் வசித்து வருகின்றவர்கள் இம்பா மக்கள். விலங்குகளின் தோலை ஆடையாக அணியும் வழக்கம் கொண்டவர்கள். கால்நடை வளர்ப்பு இவர்களது வாழ்வாதாரம். உணவில் ஆட்டு இறைச்சி அதிகம் சேர்த்துக் கொள்பவர்கள். இந்த இன மக்கள் மேலாடை அணிவதில்லை. 

நாகரீக வளர்ச்சிக்கு மத்தியில் தங்களது பாரம்பரியத்தை உயர்த்தி பிடித்து வருகின்றனர் இந்த இம்பா மக்கள். 

கழுகு வேட்டையாளர்கள் :

மங்கோலியாவின் பயான்-ஓல்கி மாகாணத்தில் வசித்து வருபவர்கள் கசாக் தங்க கழுகு வேட்டையாளர்கள். கழுகளின் துணையோடு நரிகள், ஓநாய்களை வேட்டையாடும் வழக்கத்தை கொண்டவர்கள். அப்படி வேட்டையாடப்படும் அவற்றின் ரோமங்களை தங்களது உடையின் தேவைக்காக பயன்படுத்துபவர்கள். 13 வயதிலிருந்து இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள் வேட்டையாடத் துவங்குகின்றனர். அதற்கென பிரத்யேக சோதனைகளும் அவர்களுக்கு வைக்கப்படுகிறது. அதில் அவர்களால் கழுகுகளை சுமந்து சென்று வேட்டையாட முடியுமா என சோதிக்கப்படுகின்றனர். இந்த இனத்தில் ஒரு லட்சம் பேர் இருந்தாலும் இப்போது வெறும் சில நூறு பேர் தான் வேட்டையாடும் பணியை செய்து வருகின்றனர். 

பயாக்கா :

மத்திய ஆப்பிரிக்காவின் மழைக் காடுகளில் வசித்து வருபவர்கள் பயாக்கா பழங்குடியினர். காட்டுடன் இணைந்து வாழ்பவர்கள். அதன் மூலம் மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த இனத்தில் ஆண்களே தங்களது குழந்தைகளை அதிகம் பேணி காப்பவர்களாக உள்ளனர். அதுவும் கை குழந்தை என்றால் தந்தைக்கும், குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் அதிகமாக உள்ளது. தாவரங்கள், பூச்சிகள், தேன், காளான் மற்றும் வேர்களை தங்களது உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்றனர். வன பாதுகாப்பு சட்டமான சட்டங்களால் தங்களது குடிகளை இழந்து மாற்று இடத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு இந்த இனத்தினர் ஆளாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com