எளியோரின் வலிமைக் கதைகள்-27: “பொருட்கள் விற்கலைனா வாங்கிய கடன்தான் கண்முன்னே வரும்”

எளியோரின் வலிமைக் கதைகள்-27: “பொருட்கள் விற்கலைனா வாங்கிய கடன்தான் கண்முன்னே வரும்”
எளியோரின் வலிமைக் கதைகள்-27: “பொருட்கள் விற்கலைனா வாங்கிய கடன்தான் கண்முன்னே வரும்”

பெரும்பாலும் தமிழ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். அப்படி அவர்கள் வணங்குகிற இறைவனுக்கு தேங்காய், பூ, பழம், கற்பூரம், வெற்றிலை, பாக்கு என படையில் இடுவது வழக்கம்.

எல்லோரும் வீட்டிலிருந்து ஆலயங்களுக்கு புறப்படும்போது இறைவனுக்கு படையல் இட இப்படி பழம், கற்பூரம், பூ, வெற்றிலை பாக்கு, தேங்காய் என எடுத்து வருவதில்லை. செல்லுகிற ஆலயங்களில் அங்கு விற்கப்படும் இந்த பூஜை பொருட்களையே வாங்கி பயன்படுத்துவது வழக்கம். அப்படி இறைவனுக்கு படையல் செய்ய கொடுக்கிற தேங்காய், பூ, பழம், கற்பூரம் என விற்பனை செய்கிற எளிய மக்கள் அந்தந்த ஆலயங்களிலே இருப்பார்கள். அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

''என் பெயர் புஷ்பா. எனக்கு 55 வயது ஆகிறது. நான் கிட்டத்தட்ட 40 வருஷமா இந்த வியாபாரம் தான் பார்க்கிறேன். எனக்கு சொந்த ஊர் புதுச்சேரி. எல்லா நாளிலும் வியாபாரம் இருக்கும்னு சொல்ல முடியாது. கோயில் விசேஷங்களை கணக்குல வச்சிகிட்டு வியாபாரத்துக்கு போகணும். சுத்துப்பட்டு நாற்பது, ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற கோயிலுக்கு மட்டும் தான் வியாபாரம் செய்யப்போக முடியும். ஒருமுறை வியாபாரம் செய்ய போகணும்னா குறைஞ்சது 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரைக்கும் பொருள் வாங்க வேண்டி இருக்கும். அந்த பொருள் அப்படியே எல்லாமே வித்திருமா.. அப்படின்னு பார்த்தா இருக்காது.

எடுத்துவைத்து விக்கிறதுக்கு இது ஒன்னும் பொம்மை பொருளில்லை. பூ, பழம், தேங்காய். இதெல்லாம் ஒரு நாள் இரண்டு நாள் வரைக்கும்தான் தாங்கும். அதுக்கு மேல வச்சி இருக்க முடியாது. எடுத்துட்டு வர பொருள் முழுக்க வித்துட்டா ஒரு திருப்தி. கொஞ்சம் பொருள் மீந்து போனாலும் நஷ்டம்தான் ஏற்படுத்தும். மாசத்துக்கு 10 நாள் கடை போட்ட ஒரு நாள் ரெண்டு நாள் நஷ்டத்தை பார்க்க வேண்டியிருக்கும். இதை நம்பித்தான் என் குடும்பம் இருக்கு. வியாபாரம் பண்றதுக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் ரெண்டு மூணு நாள் ஆகும் திரும்ப வீட்டுக்கு வரதுக்கு. அது வரைக்கும் வந்து இருக்கிற இடத்தில்தான் சாப்பாட்டு வேளையும் பார்த்துக்கணும். கடை போட சரியான இடத்தை தேடணும். எங்கள மாதிரி இன்னும் எவ்வளவோ பேர் வியாபாரத்துக்கு வருவாங்க. அவங்களும் எங்களைவிட முந்திக்கொண்டு வந்துதான் கடை போட பாப்பாங்க.

என் கணவர் இறந்தபிறகு இந்த வருமானத்தை வைத்துதான் நான் என் குடும்பத்தையே நடத்தினேன். என் பொண்ணையும், பையனையும் கல்யாணம் பண்ணி கொடுத்தேன். வெயில் காலத்தில் கூட வியாபாரம் பண்ணிடலாம். ஆனா மழைக் காலத்துல வியாபாரமே நடக்காது. சுத்துப்பட்டு கிராமங்களுக்கு பொருள் எடுத்துட்டு போனாகூட, 2000 ரூபா வாடகை கொடுத்து தான் டாட்டா ஏசி எடுக்கணும். அதுவே கொஞ்சம் தூரமா இருந்தா அதுவே 5 ஆயிரம் வரைக்கும் ஆகிவிடும். இதெல்லாம் கூட லாபக் கணக்கில தாங்க வைக்கணும்'' என்கிறார் புஷ்பா.

பண்ருட்டியை சேர்ந்த அலமேலு கூறுகையில், ''ஒவ்வொரு ஊர் கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான தட்டு வைக்கணும். சில ஊர்ல எலுமிச்சம்பழம் வைக்கணும். சில ஊர்ல நெய்விளக்கு வைக்கணும். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் தட்டில் இருக்கிற பொருள் மாறும். சாதாரணமா ஒரு தட்டு 50 ரூபாய் விற்போம். நான் முப்பது வருஷமா வியாபாரம் பண்றேன். இந்த வியாபாரம் தொடங்கிய காலத்தில் பத்து ரூபாய்க்கு ஐந்து ரூபாய்க்கு வித்த இந்த தேங்காய், பூ, பழம் தட்டு இப்ப அம்பது ரூபா.

சில முகூர்த்த நாளில் கோயில் திருவிழா நடந்ததுன்னா 60 ரூபாய்க்கு கூட விப்போம். அந்த மாதிரி நேரத்துல லாபம் கொஞ்சம் கம்மியா தான் கிடைக்கும். எல்லா பொருளும் விற்று தீர்ந்து போனால் மனசு ஒரு சந்தோஷமா இருக்கும். சில ஊர்களில் கொண்டு போகிற பொருள்  ஒன்னு ரெண்டு போக மீதி அப்படியே நிக்கும். அத பார்த்தா வாங்கின கடன்தான் முன்னாடி வந்து தெரியும். எப்படியோ மீதி இருக்கும் காலத்தையும் இதுபோல கோயில் கோயிலா சுத்தி வியாபாரம் பண்ணி குடும்பத்து ஓட்டறதை தவிர வேற வழியில்லை'' என்றார் அவர்.
 
மஞ்சள் கயிறு, சிகப்பு கயிறு, தேங்காய், பூ, பழம் என தினந்தோறும் இறைவனுக்கு படையல் செய்யும் பொருட்களோடு வாழ்ந்து வரும் இவர்களின் வாழ்க்கை எவ்வளவு சிரமம் என்பதை அவர்கள் சொல்வதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். வெளியூர்களில் தங்குவது என்பது சாதாரணமாக பார்க்கக் கூடியதல்ல. அதுவும் பெண்கள் தங்கி தங்களின் இயற்கை உபாதைகளை சரி செய்து கொள்வதற்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது என்பதும் பெரும் சிரமம் தான்.

- ஜோதி நரசிம்மன்

முந்தைய அத்தியாயம்: எளியோரின் வலிமைக் கதைகள் 26: ”பெரும்பாலும் நின்னுகிட்டே செய்ற வேலைதான்... இருந்தாலும்..!”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com