எதை விதைக்கின்றன 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படங்கள்?

எதை விதைக்கின்றன 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படங்கள்?
எதை விதைக்கின்றன 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படங்கள்?

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பல விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் வித்திட்டு வருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை மையமாக வைத்து, இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சர்ச்சைக்குள்ளானதற்கு என்ன காரணம்? உண்மையிலேயே இந்த திரைப்படம் எந்த நோக்கத்திற்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஜம்மு - காஷ்மீரில் 1990-களில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. பாகிஸ்தான் ஆதரவும், காஷ்மீர் பிரிவினையுமே அன்று தீவிரவாதிகளின் முக்கியக் கொள்கைகளாக இருந்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அல்லது இடையூறாக இருந்த அனைவரையுமே அந்தக் காலக்கட்டத்தில் தீவிரவாதிகள் கொன்று குவித்தனர்.

முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்துக்கள் என யாரையுமே அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர். காஷ்மீர் பண்டிட்டுகள், இந்தியப் பிரிவினையை கோரும் தீவிரவாதிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட மறுத்தனர்.

இவ்வாறு தங்களை எதிர்க்கும் காஷ்மீர் பண்டிட்டுகள் உட்பட அனைத்து சமூகத்தினர் மீதும் தீவிரவாதிகள் அன்றைக்கு பயங்கர வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஏராளமானோர் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். பலர் உயிருக்கு பயந்து, காஷ்மீரை விட்டு வெளியேறி சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்திய சரித்திரத்தில் மோசமான படுகொலை சம்பவமாக அது இன்றளவும் இருக்கிறது. அந்த சம்பவம் தந்த கோர வலிகளை தாங்கியபடி, இன்றும் பலர் வாழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்தக் கொடூர அடக்குமுறைகளுக்கு உள்ளான காஷ்மீர் பண்டிட்டுகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரையும் மீண்டும் காஷ்மீரில் மீள் குடியமர்வு செய்ய வேண்டும் என்பதும், அவர்களின் மறுவாழ்வுக்கு அரசு உதவ வேண்டும் என்பது தான் இந்தியர்கள் அனைவரின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

சரித்திர உண்மையை கூறுகிறதா?

சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்த கொடூர சம்பவம் முழுக்க முழுக்க தீவிரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட ஒன்று. ஆனால், சரித்திர உண்மையை பேசுவதாக கூறி, இப்போது வந்திருக்கும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படமானது, காஷ்மீர் பண்டிட்டுகள் மட்டுமே அன்றைக்கு பாதிக்கப்பட்டதை போலவும், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் அந்த வன்முறைக்கு காரணம் என்பது போலவும் படமாக்கப்பட்டுள்ளது. "எது எப்படி இருந்தாலும் நடந்ததை தானே திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்... இதில் உங்களுக்கு என்ன பிரச்னை?" என்பதே இந்த திரைப்படத்தை ஆதரிப்பவர்களின் முக்கிய வாதமாக உள்ளது. மேலோட்டமாக பார்த்தோமேயானால், பெரும்பாலானோருக்கு இப்படித்தான் தோன்றும். அது அவர்களின் தவறு கிடையாது. ஆனால் சற்று ஆழமாக யோசித்து பார்த்தால், இதுபோன்ற திரைப்படங்கள் தார்மீக ரீதியில் தவறு என்ற உண்மை புலப்படும்.

பொதுவாக, திரைப்படங்களை 'மாஸ் மீடியா' என அழைப்பது உண்டு. ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான மக்களை சென்றடையும் வல்லமை இருப்பதாலேயே திரைப்படங்களை 'மாஸ் மீடியா' என அழைக்கிறோம். இவ்வாறு ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை நேரடியாக சென்று சேரும் திரைப்படங்களை இயக்குபவர்களுக்கு கண்டிப்பாக சில கடமைகளும், கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. சமூகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் விதைக்க முடிகிறதோ இல்லையோ, குறைந்தபட்சம் பிரிவினையை தூண்டாமல் இருப்பது தான் ஒரு சிறந்த கலைப் படைப்பாக இருக்க முடியும்.

உதாரணமாக, தமிழகத்துக்கு புரியும்படியே பேசுவோம். 1995-இல் திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் இருவேறு சமூகத்தினர் இடையே பெரிய அளவில் ஜாதி கலவரம் வெடித்தது. இதில் பலர் உயிரிழந்தனர். இந்த கவலரம் நடந்து, இப்போது பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்தக் கலவரத்தில் சம்பந்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் இப்போது ஒருவரோடு ஒருவர் ஒட்டி உறவாடாவிட்டாலும், அவர்களுக்கு இடையே இருந்த பழைய பகைமை உணர்வு இன்றில்லை என நம்மால் உறுதியாக கூற முடியும். அந்த இரு சமூகத்தினர் இன்றைக்கு நெருங்கிய நண்பர்களாகவும், ஏன் குடும்ப நண்பர்களாகவும் கூட இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில், "உண்மையை சொல்லப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு ஒரு திரைப்படம் வருவதாக வைத்துக் கொள்வோம். அதில் ரத்தக் களறியுடனும், வெட்டு - குத்துகளுடனும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த திரைப்படத்தை பார்க்கும் போது அவரது மனநிலை என்னவாக இருக்கும்? தங்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த சமூகத்தினர் அனைவர் மீதும் அவருக்கு வெறுப்பும், கோபமும் வருவது இயற்கை தானே.

அந்த வெறுப்புணர்வு மனதில் வந்த பிறகு, சம்பந்தப்பட்ட மாற்று ஜாதியை சேர்ந்த நண்பரிடம் அவரால் உண்மையாக நட்பு பாராட்ட முடியுமா? அவரை பார்க்கும் போதெல்லாம் உனது முன்னோர் எங்களுக்கு இத்தனை கொடுமைகளை செய்துவிட்டார்களே என்ற எண்ணம் தானே அவருக்கு மேலெழும்பும். இப்போது அந்த குறிப்பிட்ட திரைப்படம் சாதித்ததாக எதை நாம் கூற முடியும்? சரித்திர உண்மையை கூறிவிட்டோம் என அந்த திரைப்பட இயக்குநர் மார்தட்டி கொள்ளலாமா? உண்மையில், அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் சரித்திர திரைப்படமாக நிச்சயம் இருக்க முடியாது. மாறாக, பழைய காயங்களை மறந்து நட்புப் பாராட்ட தொடங்கிய இரு சமூகத்தினரை மீண்டும் பிரித்து வைத்ததே அந்த திரைப்படத்தின் அளப்பரிய சாதனையாக இருக்க முடியும்.

அதுபோன்றே இன்றைய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு மதத்தில் உள்ள அடிப்படைவாதிகள் செய்த அட்டூழியங்களை திரைப்படம் என்ற பெயரில் வெளியிட்டிருப்பதால், அந்த மதத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்கள் மீதும் மாற்று மதங்களை சேர்ந்தவர்களுக்கு வெறுப்புணர்வே தற்போது ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' ஓடும் திரையரங்குகளில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக கோஷங்கள் ஒலிப்பதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி கவலை தெரிவித்துள்ளார். இன்று எழுப்பப்படும் வெறுப்பு கோஷம் தானே நாளை கலவரமாக வெடிக்க காத்திருக்கிறது? இந்த வெறுப்புணர்வை விதைத்தது தான், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தின் சாதனை எனக் கூறலாமா? இல்லையெனில், உண்மையிலேயே அந்த நோக்கத்துக்காக தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டதா? இதுபோன்ற திரைப்படங்கள் நாளை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசாங்கம் கணித்திருக்க வேண்டாமா? அப்படி கணிக்க தவறி இருந்தால் கூட பரவாயில்லை.., அதையும் மீறி இந்த திரைப்படத்தை மத்திய அரசே முன்னின்று பிரச்சாரம் செய்கிறதே... இதை எங்கு போய் கூறுவது?

அனைத்து மதங்களிலும், சமூகங்களிலும் அடிப்படைவாதிகள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் நாடு முழுவதும் பல கலவரங்களும், வன்முறைகளும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. அந்தக் கலவரங்களுக்கு அந்த அடிப்படைவாதிகள் தான் காரணம் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட வேண்டும். உதாரணமாக, குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற மதக் கலவரத்துக்கு ஒட்டுமொத்த இந்துக்களையும் குற்றம்சாட்டுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்? இல்லையெனில், அந்தக் கலவரத்துக்கு காரணமாக இருந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்காக அனைத்து முஸ்லிம்களையும் நாம் வெறுப்பது அறிவார்ந்த செயலாக இருக்குமா? அரசியல் காரணங்களுக்காகவும், வேறு சில உள்நோக்கங்களுக்காகவும் சில திரைப்படங்கள் அவ்வப்போது வந்து கொண்டே தான் இருக்கும். இதனை சில மதவாதிகளும், மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனால், மக்களாகிய நாம் தான் அவற்றை சீர்தூக்கி பார்த்து சரியான விதத்தில் அணுக வேண்டும். அதுதான் நாகரிக வளர்ச்சி பெற்ற மக்களுக்கான முக்கிய அடையாளமாக இருக்க முடியும். அவ்வாறு இல்லாமல், இதுபோன்ற திரைப்படங்களை கண்டு எளிதில் உணர்ச்சிவசப்படுவது சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

மக்கள் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். கலவரங்களுக்கு காரணம் அடிப்படைவாதிகள்... கலவரங்களை பயன்படுத்துபவர்கள் அரசியல்வாதிகள்... ஆனால் அவற்றால் காலம் காலமாக பாதிக்கப்படுவது என்னவோ, அப்பாவி மக்களாகி நாம் தான். இதனை புரிந்துகொண்டால் மற்றொரு பெரிய கலவரத்தை இனி எப்போதும் இந்தியா பார்க்க வேண்டியிருக்காது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com