ஓடிடி திரைப் பார்வை 10: The Hundred-Foot Journey - அன்புப் பரிமாற்ற 'சுவைமிகு' சினிமா!

ஓடிடி திரைப் பார்வை 10: The Hundred-Foot Journey - அன்புப் பரிமாற்ற 'சுவைமிகு' சினிமா!
ஓடிடி திரைப் பார்வை 10: The Hundred-Foot Journey - அன்புப் பரிமாற்ற 'சுவைமிகு' சினிமா!

இனிப்பு, துவர்ப்பு, உப்பு, காரம் என அனைத்து சுவைகொண்ட பதார்த்தங்களையும் ஒரு டப்பாவிற்குள் அடைத்து, வேண்டியதை ருசிக்க எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கோ, அது போலவே இந்த ஓடிடி தளங்களும். நம் விருப்பத்திற்கு ஏற்ப அத்தனை வகையான சினிமாக்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன. அதில் ஃபீல் குட் சினிமாக்களுக்கென்று தனியாக ஒரு ஆடியன்ஸ் கூட்டம் உண்டு. மென்மையான அணுகுமுறை, மயிலிறகு போல வருடும் காட்சிகள், இசை என மனதிற்கு இதம் தரும் சினிமாக்கள் பல இந்த ஓடிடி தளங்களில் உண்டு. அது போலொரு சினிமாதான் 2014-ஆம் ஆண்டு வெளியான 'தி ஹண்ட்ரட் ஃபூட் ஜர்னி' (The Hundred-Foot Journey).

ரிச்சர்ட் சி மோரியஸ் எழுதிய The Hundred-Foot Journey எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சினிமாவை லாஸி ஹால்ஸ்ட்ரோம் இயக்கி இருக்கிறார். ஸ்டீபன் நைட் இதற்கு திரைகக்தை எழுதி இருக்கிறார். ஆங்கிலம், இந்தி, ஃப்ரெஞ்ச் என மூன்று மொழிகள் பேசும் இந்த சினிமாவில் ஓம் புரி, மனிஷ் தயாலன், ஹெலன் மெர்ரின், சார்லோட்டி லீ போன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மும்பையில் வசிக்கும் அபு கதமின் குடும்பம் ஓட்டல் தொழிலை மிகுந்த ஆத்மார்த்தமாக செய்து வருகிறது. அபு கதம் கதாபாத்திரத்தில் ஓம் புரி நடித்திருக்கிறார். அவருடைய வாரிசுகளுக்கும் சமையல் கலை என்பது தங்கள் வாழ்வின் மிக முக்கிய அங்கமாக உள்ளது. அவர்களில் நாயகன் ஹாசன் கதம் சமையலை ஒரு தவம் போல பாவிக்கக் கூடியவர்.

இப்படியாக இந்தியா கரம் மசாலா குடும்பமாக இருக்கும் அவர்களது ஓட்டல் ஒரு கலவரத்தில் பறிபோகிறது. குடும்பத்தோடு ஐரோப்பாவிற்கு குடியேறும் அபு கதமின் குடும்பம் ஐரோப்பாவின் ஓர் அழகிய கிராமத்தில் புதிதாக ஒரு ஓட்டலை துவங்கி நடத்துகின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் சவால்கள், போட்டியாளர்கள் கொடுக்கும் நெருக்கடிகள் எல்லாம் தாண்டி, அவர்கள் அத்தொழிலை கைவிடாமல் செய்யத் தூண்டும் அழகிய நிகழ்வுகளின் சுவையான தொகுப்புதான் இப்படம்.

இப்படத்தின் மிக முக்கிய பலமாக இருவரைச் சொல்லலாம். ஒன்று பின்னனி இசையில் இந்திய - ஐரோப்பிய கலப்புணர்வை இதமாக வழங்கிய ஏ.ஆர்.ரகுமான். இன்னொருவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் லினஸ் சாண்ட்க்ரான். இவ்விருவரும் திரையின் வழியே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிகிறார்கள். அபு கதமாக நடித்திருக்கும் ஓம் புரியின் நடிப்பு கொஞ்சம் மிகை. நாயகன் ஹாசன் கதமாக வரும் மனிஷ் தயாளன் அழகான சாக்லேட் பாயாக மனதில் நிறைகிறார். நடிப்பிலும் சின்னச் சின்ன புன்னகையிலும் நம்மை கட்டி அணைத்துக் கொள்கிறார்.

மனிஷ் தயாளனுக்கும், அவரது காதலியாக நடித்திருக்கும் சார்லோட்டி லீ போன் இடையிலான காதல் காட்சிகள் ரசனை. கனடாவைச் சேர்ந்த சார்லோட்டி லீ போன் தொலைக்காட்சி நெறியாளரும் கூட. மாடலான அவர் இத்திரைப்படத்தில் மனிஷ் தயாளனுக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

கதையின் மையக் கரு முக்கியமானது. வெறுப்பு, போட்டி, பொறாமை என மனித வாழ்விற்கு ஒவ்வாத அனைத்தும் சின்ன மன்னிப்புக் கோரலில் தகர்ந்து போகிறது. விட்டுக் கொடுத்தலில் மறைந்து போகிறது. அபு கதமின் இந்திய பாணி உணவகத்திற்கு எதிரே அமைந்திருக்கிறது ஹெலன் மெர்ரினின் ஐரோப்பிய உணவகம். அபு கதமின் உணவகத்தை முடக்க அவர் பல முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால், அவை அனைத்தும் சின்னச் சின்ன ருசியான உணவு விருந்தோம்பலில், நாயகன் குடும்பத்தார் திருப்பிக் கொடுக்கும் அன்பின் முன்னே தோற்றுப் போகிறது.

ஹெலன் மெர்ரினும் மோசமானவராக சித்தரிக்கப்படவில்லை தொழில் முன்னேற்றத்திற்காக கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார் அவர். அவ்வளவுதான். உண்மைதானே... அமர்ந்து பேசியிருந்தால் உலக யுத்தங்களையே தடுத்திருக்க முடியும்தானே.

ஐரோப்பாவின் அழகிய கிராமத்தை ரசிக்க, சுவையான இந்திய - ஐரோப்பிய உணவுகளை மனதால் ருசிக்க Sony LIV-ல் கிடைக்கும் The Hundred-Foot Journey-ஐ அவசியம் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com