‘மணிகண்டன் டூ ராஜேந்திர பாலாஜி’ - வரிசைகட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - ஓர் அலசல்

‘மணிகண்டன் டூ ராஜேந்திர பாலாஜி’ - வரிசைகட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - ஓர் அலசல்
‘மணிகண்டன் டூ ராஜேந்திர பாலாஜி’ - வரிசைகட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் - ஓர் அலசல்

தமிழக முதல்வவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறநிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து லஞ்சப்புகாரில் சிக்கி வருவது குறித்து சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்தலில் வெற்றிப்பெற்றதும், ‘கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றநிலையில், தற்போது ஊழல் புகாரில் சிக்கி வரும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்து இங்கு காணலாம். லஞ்சப் புகாரில் இல்லாமல், பாலியல் புகாரில் முதன்முதலாக சிக்கினார் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன்.

மணிகண்டன் : கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக சில ஆண்டுகள் பதவி வகித்தவர் மணிகண்டன். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், அமைச்சராக சில ஆண்டுகள் இருந்தார். பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கடந்த தேர்தலில் இவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த மே மாதம், ‘நாடோடிகள்’ திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சேர்ந்து வாழ்ந்துவிட்டு, தற்போது திருமணம் செய்ய மறுப்பதாக, பாலியல் புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.

இந்தப் புகாரின்பேரில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது, 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 351 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துவிட்டு, தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 20-ம் தேதி காவல்துறையினர் கைதுசெய்தனர்.

எம்.ஆர். விஜயபாஸ்கர் : அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், அத்துறையில் 8 நிறுவனங்களிடம் இருந்து, ஜி.பி. எஸ். கருவிகளை வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரெய்டு நடத்தினர். தொடர்ந்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 

கே.சி.வீரமணி : கடந்த அ.தி.மு.க அரசில் 2016-21 காலகட்டத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர், கே.சி.வீரமணி. இவர் மீது அறப்போர் இயக்கத்தினர், லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பினர். அந்தப் புகார் மனுவில், ‘முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2011 முதல் 2021 வரையில் பொது ஊழியராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளார்’ என புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடைபெறுகிறது. 

எஸ்.பி. வேலுமணி : கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2013-16-ம் ஆண்டு வரை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சராகவும், அதன் பின்னர் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 2016 முதல் 2021 வரை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளன. டெண்டர் முறைகேடு, ஸ்டார்ட் சிட்டி திட்டம் என பல கோடி ரூபாய் சொத்து முறைகேடு செய்துள்ளதாக பல வழக்குகள் உள்ளன. இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். இவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சி. விஜயபாஸ்கர் : கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரோடு சேர்த்து, அவரது மனைவி ரம்யாவின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில், 2016 ஆம் ஆண்டு 6 கோடி ரூபாய்க்கான சொத்துகளை அவர் வைத்திருந்ததாகவும் அந்தச் சொத்துகள் 57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், திருச்சி என 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இவர் மீதான விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

பி. தங்கமணி : கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தபோது, தமது பெயரிலும் தமது குடும்பத்தின் பெயரிலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. பி. தங்கமணி அமைச்சராக பதவியேற்ற காலத்தில் அவரது சொத்து மதிப்பு ரூ. 1,01,86,017ஆக இருந்த நிலையில், அவர் பதவி முடிவுக்கு வந்தபோது, சொத்து மதிப்பு ரூ. 8,47,66,318 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது.

கே.டி.ராஜேந்திர பாலாஜி : முன்னாள் அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் தன்னை கைதுசெய்யாமல் இருக்க, முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், 20 நாட்களுக்குப் பிறகு கர்நாடகா மாநிலத்தில் ராஜேந்திர பாலாஜி கைதுசெய்யப்பட்டார். தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுமார் 8 முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் இருப்பதாகக் கூறப்படும்நிலையில், அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com