சமூக ஊடகம் எனும் செயற்கை உலகம், மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டன. இணையம் வழியாக அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் கணிக்க முடியாததாக இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், லிங்க்டுஇன், பின்ட்ரஸ்ட், யூடியூப் போன்றவற்றின் ஆதிக்கம் அதிகமாகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும், ஃபேஸ்புக்கை சுமார் 27 கோடி பேரும், வாட்ஸ்ஆப்பை சுமார் 20 கோடி பேரும் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் இருந்தெல்லாம் விடுபட முடியாத அளவிற்கு நம் மனதை அவை மாற்றியிருக்கின்றன.
கட்டுப்பாடு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சமூக ஊடங்களில், போலியான படங்கள், வீடியோ, செய்திகள் உள்ளிட்டவை நாள்தோறும் பரவுகின்றன. அதுபோன்ற தவறான தகவல்களை தடுப்பது சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. குழந்தைக் கடத்தல்காரர்கள் என நினைத்து அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவை நினைவூட்டக்கூடிய உதாரணமாகும்.
சமூக வலைதளங்களில் வரும் செய்திகள், தகவல்களை உண்மையென நம்புவோரின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஊடுருவியிருக்கும் போலிகளின் செயல்பாடு அதிகரித்து இருக்கிறது. எனவே மக்களிடத்தில் சரியான விஷயங்கள் செல்வது அவசியமாகிறது. இதற்காக தவறான தகவல்களை ஆராய்ந்து, அவற்றின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தும், டேட்டா லீட்ஸ், இன்டர் நியூஸ், பூம் லைவ், ஃபர்ஸ்ட் டிராப்ட் போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்திருக்கிறது கூகுள். போலியானவை என்று சந்தேகப்படும் தகவல்களை அடையாளம் காண்பது எப்படி என்று, இந்தியாவில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
நமக்கு கிடைக்கும் தகவல்கள் சரிதானா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதில் உங்களுக்கான ஒரு பார்வை இருக்க வேண்டும். கிடைக்கிற அனைத்தையும் அப்படியே பிறர் மீது வாந்தியெடுக்கக் கூடாது; அது அவசியமும் இல்லை. அவ்வாறு செய்வது நம் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடும். உங்களுக்கு தெரிந்தவரோ அல்லது யாரோ ஒருவரிடம் இருந்து வரும் எந்த விஷயமாக இருந்தாலும், அதில் நம்பும்படியாகவோ அல்லது சந்தேகிக்கும் வகையிலோ ஏதேனும் இருப்பதாக தெரிந்தால், அனுப்பியவரிடமே அதுகுறித்து கேள்வி கேட்க வேண்டும். எப்படி கிடைத்தது? அல்லது உங்களுடைய தகவலா? அல்லது யார் அனுப்பியது? போன்ற விவரங்களை கேட்க வேண்டும். எந்தவொரு விஷயத்திற்கும் பதில் கிடைக்கும்வரை கேள்வி கேட்டு பழகுவதும், அதுகுறித்து தேடுவதும் முக்கியமானதாக இருக்க வேண்டும். சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், அதனை வேறு யாருக்கும் அனுப்பாமல் இருப்பதே நலம்.
உண்மை எது? பொய் எது? என்று கண்டறிந்து தெரிவிக்கும் அளவிற்கு ஊடகங்களுக்கும் சரி, மக்களுக்கும் சரி நேரம் இருப்பது இல்லை. பரபரப்பான உலகில் அதன் பின்னால் ஓடுகிறோம். இதுதான் போலி செய்திகள் பரவலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஏதோ ஒன்று வருகிறது, அதை அப்படியே பிறருக்கு அனுப்பி விடுகிறோம். இதனால் எழும் பிரச்னைகளை பற்றி யாரும் கவலைகொள்வதில்லை. உளவியல் ரீதியாக நம் மீது சமூக வலைதளங்கள் செலுத்தியிருக்கும் தாக்கமே இதற்கு காரணமாக இருக்கிறது. வாட்ஸ்ஆப் போன்றவற்றில் பரவிய சந்கேத்திற்கு இடமான தகவல்களால், இந்த ஆண்டில் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 24 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ’யாரோ ஒருவருக்கு பயன்படுமே, பகிர்ந்து கொள்ளுங்களேன்’ என்ற தகவல்தான் யாரோ ஒருவரை கொல்கிறது அல்லது சந்தேகம் கொள்ள செய்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
ஒவ்வொரு போலி தகவல்களின் பின்னணியிலும் அரசியல் இருக்கிறது என்று கூறும் பூம் லைவ் ஊடகத்தின் நிர்வாக இயக்குநர் மெர்சி ஜேக்கப், வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல நூறு போலி செய்திகள், வீடியோ, படங்கள் சமூக வலைதளங்களில் உலவும் என்கிறார். எனவே உங்களுக்கு வரும் ஒவ்வொரு தகவலையும் கவனமுடன் கையாள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
போலி செய்திகளை யார் அனுப்புகிறார்கள்? அவர்களை அடையாளம் காண்பது எப்படி என்பது தெரியாத நிலையில், நமக்கு வரும் படங்கள், வீடியோவை ஆராய்ந்து பார்க்க கூகுளில் டூல்கள் இருக்கின்றன. கூடுமானவரை தகவலில் சந்தேகம் இருந்தால், அவற்றை கூகுளில் தேடி பார்த்தால் பெரும்பாலனவற்றுக்கு விடை கிடைக்கும். திரித்துக் கூறுதல், செய்திகள் வழியாக கிண்டல் செய்வது, போலியானவற்றை தொடர்புப்படுத்தி கூறுவது, உண்மையானவற்றை தங்களுக்கு ஏற்றது போல் மாற்றி எழுதுவது, தவறான புள்ளிவிவரங்களை வெளியிடுவது போன்றவற்றை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் உண்மையை கண்டுபிடித்துவிடலாம். அதன் பிறகு மற்றவர்களுக்கு அனுப்பலாம். போலி செய்திகளுக்கு எதிராக போர் புரிவதன் மூலம், சமூக ஊடகங்களை ஆரோக்கியமாக கையாளலாம்.