”இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?” - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!

”இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?” - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!
”இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?” - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!

இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார்.

ஏன் இன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்? - 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான 'அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு' அண்மையில், குடியரசுத் தலைவரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இக்குழு அளித்துள்ள அறிக்கையில் நூறு பரிந்துரைகளை முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தியையே பயிற்று மொழியாக்க வேண்டும்; ஒன்றிய அரசின் நிர்வாகத் தொடர்புகள் அனைத்துக்கும் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்;

இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்; இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்தும் வகையில் இன்று இந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை:

“ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை இந்த குழு அளித்துள்ளது.

ஆங்கிலத்தை புறந்தள்ளி, 8வது அரசமைப்பு சட்டத்தின் அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 9ம் தேதி, குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அலுவல் மொழி தொடர்பான அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை பேரவை வலியுறுத்துகிறது” என திட்டவட்டமாக கூறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் - வேல்முருகன்:

“ஒன்றிய அமைச்சர் தலைமையிலான குழு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயம் திணிக்கும் நிலையில், உயர்கல்வி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு ஹிந்தியை கட்டாயம் ஆக்கும் நிலை என்பது கண்டிக்க தக்கதாகும். இன்றைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த தீர்மானம் கொண்டு வந்தது வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம். இதை உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் சார்பாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாகவும் வரவேற்கிறோம்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

கல்வி பொதுப்பட்டியலுக்கு கொண்டு வந்ததே இந்தியை திணிக்கத்தான் - ஈஸ்வரன்:

“இந்தி படிக்க வேண்டுமா?, எந்த மொழி படிக்க வேண்டும்? என்பதை பெற்றோர்கள், மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. கல்வியை ஒன்றிய அரசு பொது பட்டியலுக்கு கொண்டுவந்தது இந்தி திணிப்பிற்க்குதான் என்று தற்போது தெரிய வந்துள்ளது.” என கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு மாநில மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தீர்மானம் - ஜவாஹிருல்லா:

“முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தமிழக மக்களின் உணர்வுகளை மட்டுமல்ல இந்தி பேசாத கன்னடர்கள் தெலுங்கர்கள், வங்காளத்தவர் என்று பல்வேறு மாநில மக்களினுடைய உணர்வுகளை பிரதிபலிக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் குடியரசு தலைவர்களிடம் சமர்ப்பித்திருக்கின்ற மொழி தொடர்பான 11வது அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். என்றைக்கும் மாநில மொழிகளை மாநில மக்களை காக்கும் முதல் மாநிலமாக தமிழகம் இருந்துள்ளது.” என்று தெரிவித்தார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா.

ஒரு குறிப்பிட்ட மொழியை திணிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - சதன் திருமலைக்குமார்:

“இந்தி திணிப்பை உள்ளே கொண்டு வர துடிக்கின்றார்கள். முதல்வர் கொண்டு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சார்பில் வரவேற்கிறேன். பல்வேறு மாநிலங்கள் பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகள் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை திணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது” என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் தெரிவித்தார்.

இந்தியாவின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் - சிந்தனைச் செல்வன்:

“யார் நம்மை காப்பாற்றுவார்கள் என்று விழி பிதுங்கி நிற்கும் வேளையில் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ளது. நம் வாழ்வியல் தொடர்பானது இந்தியாவின் பன்முக தன்மை தொடர்பானது. தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் 24 மணி நேரத்தில் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவது என திட்டமிட்டு வெற்றியும் கண்டுள்ளது திமுக அரசு. இந்தியாவில் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அந்த ஒற்றுமை சுடர் பாதுகாக்கப்பட வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தெரிவித்தார்.

இந்தி பேசாத மாணவர்களை வெளியேற்ற இந்தி திணிப்பு - நாகை மாலி:

“இந்தி பேசாத மாநில மாணவர்களை வெளியேற்றுவதற்காக இந்த இந்தி திணிப்பை கொண்டு வந்துள்ளனர். இந்த திணிப்பை எதிர்த்து தீர்மானம் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் நன்றி தெரிவிப்பதோடு தீர்மானத்தை வரவேற்கிறேன்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தெரிவித்தார்.

பன்முகத்தன்மையை பாதுகாக்கும் தீர்மானம் - ஜி.கே.மணி:

“மொழி தான் ஒரு மனிதனை தீர்மானிக்கிறது. இனங்களில் அடிப்படையிலும் கலாச்சாரத்தில் அடிப்படையிலும் வேற்றுமையின் ஒற்றுமை காண்பதால் இந்தியா பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ள முதலமைச்சரின் தீர்மானத்தை வரவேற்கிறேன்” என பாட்டாளி மக்கள் கட்சியின் ஜி.கே.மணி தெரிவித்தார்.

இந்தி திணிப்பை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் - ஓ.பன்னீர்செல்வம்:

“தமிழ் மக்களை உயிருக்கும் மேலாக நேசித்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. உயிர் போனாலும் கவலையில்லை ; தமிழ் வாழ்ந்திட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இந்தித்திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. அன்னைத் தமிழை மீறி இந்தித் திணிப்பை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். தீர்மானத்தை முழு மனதாக அதிமுக ஆதரிக்கிறது” என எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நிறைவேறியது இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம்:

“திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கட்டிலில் இருக்கும் வரை இந்தியை எந்த கொம்பனாலும் நுழைக்க முடியாது” என அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்தார். “இந்தியை படித்தால் தான் படிக்க முடியும் என்ற நிலை 100 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதை நினைவுபடுத்துகிறது” என சபாநாயகர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தி திணிப்புக்கு எதிரான அரசின் தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

- ரமேஷ், ச.முத்துகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com