எல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்!

எல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்!
எல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்!

ட்விட்டரில் எந்த ட்ரெண்டிங்காக இருந்தாலும் அதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு இருக்கும். ஆனால் நேசமணி (வடிவேலு) என்று வந்தவுடன் எல்லாரும் கலாய்த்து, சிரித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். சென்னை ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங், உலக ட்ரெண்டிங் வரை சென்றார் நேசமணி. மீம் கிரியேட்டர்கள் மட்டுமில்லை, அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், ஊடகவியலாளர் என பலரும் நேசமணி ஜாலியில் பங்குபெற்றது வடிவேலுவின் பலத்தை காட்டுகிறது. 

சில காமெடிகளை பார்த்தாலும் சிரிப்பு வராது. சிலதை பார்த்தால் தான் சிரிப்பு வரும். வடிவேலு காமெடிகளை கேட்டாலே சிரிப்பு வரும். அதே போல் சத்தத்தை மியூட் செய்து விட்டு வடிவேலு ரியாக்ஷன்களை பார்த்தாலும் சிரிப்பு வரும். டயலாக் டெலிவரி, உடல் பாவனைகள் இரண்டிலும் சிக்சர் அடிப்பார் வடிவேலு.

ஒரு நாளை வடிவேலு இல்லாமல் உங்களால் கடக்க முடியுமா? யாரிடமாவது நாம் பேசிக்கொண்டு இருக்கும் போதே ''ஒரு படத்துல வடிவேலு சொல்வாறே'' என்று ஒரு எடுத்துக்காட்டை நிச்சயம் சொல்லி விடுவோம். நம்மை விடுங்கள் செய்தியாளர் சந்திப்பில் கூட அரசியல்வாதிகள் வடிவேலு டயலாக்குகளை விடுகிறார்கள். மீம்ஸ், போட்டோ கமெண்ட், ட்ரெய்லர் வடிவேலு வெர்சன், பாடல் வடிவேலு வெர்சன், சீன்ஸ் வடிவேலு வெர்சன், அரசியல் நடப்புகள் வடிவேலு வெர்சன் என வடிவேலு வெர்சன் வராத டிபார்ட்மெண்டுகளே இல்லை. அனைத்துக்கும் பொருந்தும்படி அவ்வளவு கதாபாத்திரங்களை குவித்து வைத்திருக்கிறார் வடிவேலு. 

இன்றைய தேதிக்கு எத்தனையோ பிரச்னைகள் நமக்குள் இருக்கிறது தான். ஆனால் நேற்று முதல் நேசமணி பலரின் சிரிப்புக்கு காரணமாக இருக்கிறார். சோகங்களுக்கு இளைப்பாறுதல் கொடுப்பது எத்தனை பெரிய காரியம். அதை 18 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் காட்சியும், கேரக்டரும் செய்து விட்டது என்றால் அது சாதனை இல்லாமல் வேறென்ன.

எதாவது கான்செப்ட் கிடைத்தால் வடிவேலு டெம்பிளேட்டுகளை வைத்து பொழுதுபோக்கும் மீம் கிரியேட்டர்கள், கான்செப்ட் இல்லை என்றால் வடிவேலுவையே டெம்பிளேட்டாக வைத்து செய்துவிட்டனர்.  அரசியல் நிகழ்வுகளுக்காக ஹேஸ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்யும்  தமிழ்நாட்டு இணையவாசிகள் இன்று காமெடி நடிகரின் கேரக்டருக்காக ஜாலியாக ட்ரெண்டு செய்து மகிழ்கிறார்கள். நேசமணி விவகாரத்தில் தமிழ்நாட்டு இணையவாசிகளை இந்தியாவே ''இவங்க நல்லவங்களா? கெட்டவங்களா?'' என்ற முகபாவனையில் பார்த்துகொண்டிருக்கிறது. 

நேசமணி கதை வடிவேலு வரை சென்று விட்டது. அவரும் ''நேசமணி போன்ற கேரக்டருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆண்டவன் கொடுத்த பரிசு'' என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு போகிறார். வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லுவார், ''ஒவ்வொரு வீட்டு ரேஷன் கார்டலுயும் தான் என் பேர் இல்ல. மத்தபடி நான் எல்லார் குடும்பத்துலயும் ஒருத்தன். என் சீட்டு இப்பயும் காலியாதான் கிடக்கு''ன்னு. அது நூறு சதவீதம் உண்மை. வடிவேலுவின் இடம் இன்னும் நிரப்பப்படவில்லை. அந்த சீட்டு காலியாகவே கிடக்கிறது. நேசமணி மீண்டும் வந்து அமர்வார் என்று நம்புவோமாக.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com