'ஆப்' இன்றி அமையா உலகு 17: ‘Tele-Law’ சாமானியர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயலி!

'ஆப்' இன்றி அமையா உலகு 17: ‘Tele-Law’ சாமானியர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயலி!
'ஆப்' இன்றி அமையா உலகு 17: ‘Tele-Law’ சாமானியர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயலி!

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் எளிதாகிவிட்டது. விரல் சொடுக்கும் நேரத்தில் விந்தை உருவாக்க உதவுகிறது தொழில்நுட்பம். அந்த வகையில் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சாதனமாகி உள்ள செல்போனில் அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான அப்ளிகேஷன்கள் (செயலி) குறித்து 'ஆப்' இன்றி அமையா உலகு தொடரில் பார்த்து வருகிறோம். இந்த அத்தியாயத்தில் சாமானியர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை சுலபமாக வழங்கும் கைபேசி செயலியான Tele-Law For Citizens குறித்து பார்க்கலாம். 

Tele-Law For Citizens!

இந்திய நீதித்துறையின் முன்னோடி திட்டங்களில் Tele-Law முக்கியமானதாகும். இதன் மூலம் சட்ட சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சுலபமாக கிடைத்து வருகிறது. எளிய மக்கள் தங்களுக்கு தேவைப்படும் சட்ட உதவி சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை ஒரு வழக்கறிஞர்களிடம் இருந்து நேரடியாக இதன் மூலம் பெற முடியும். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தினால் வழக்கறிஞர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான அணுகலை எளிமையானதாக மாற்றுகிறது இந்த செயலி. 

என்ன மாதிரியான விஷயங்களுக்கு இதில் சட்ட ஆலோசனைகள் பெறலாம்?

>வரதட்சணை கொடுமை, குடும்ப தகராறு, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை. 

>பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல். 

>குழந்தை திருமணங்களை தடுத்தல். 

>குழந்தை தொழிலாளி, அனைவருக்கும் கல்வி. 

>பட்டியலின மக்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் வன்முறைகள். 

>குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்க. 

>குறைந்தபட்ச ஊதியம் சார்ந்த விவகாரங்கள். 

>நிலத் தகராறு, குத்தகை மற்றும் வாடகை விவகாரங்கள், சொத்துரிமைகள். 

>எப். ஐ. ஆர் மற்றும் ஜாமீன் சார்ந்த விவகாரங்கள். 

>இதர (Others) விவகாரங்கள். 

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

>கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Tele-Law for Citizens அப்ளிகேஷனை இலவசமாக மக்கள் தங்களது போன்களில் டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

>பின்னர் அப்ளிகேஷனில் பயனரின் விவரங்கள் கேட்கப்படுகின்றன. இதில் பெயர், மொபைல் எண், ஊர் என அனைத்து அடிப்படை விவரங்களையும் கொடுக்க வேண்டும். அதோடு சேர்த்து புகைப்படமும் கொடுக்க வேண்டும். இந்த செயலிக்கு என பிரத்யேக கடவுச்சொல் ஒன்றையும் உருவாக்க வேண்டியுள்ளது. 

>பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், விசாரணைக் கைதிகள், அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர மக்கள் இந்த செயலியில் சேவையை பெற முடியும். 

>செயலியில் பாஸ்வேர்டு கொடுத்தால் அதனை பயன்படுத்துவதற்கான அக்செஸ் கிடைக்கிறது. அதை பயன்படுத்தி பயனர்கள் தங்களது டேஷ்போர்டை அணுகலாம். அதில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கான அப்பாயிண்ட்மெண்டை பதிவு செய்யலாம். அதில் தேவையான ஆவணங்களை இணைக்கவும் செய்யலாம். 

>வழக்கின் வகை மற்றும் செயலியில் ஃபில்டர் செய்து காட்டப்படும் வழக்கறிஞரை தேர்வு செய்து, அவருடன் பயனர் எந்த நேரத்தில், எந்த நாளில் பேச வேண்டும் என்பதை சப்மிட் செய்ய வேண்டி உள்ளது. 

>அதை செய்து முடித்த பிறகு குறிப்பிட்ட அட்டவணையின் படி அந்த வழக்கறிஞர் இந்த செயலியின் மூலம் சம்பந்தப்பட்ட பயனரை அணுகுகிறார். அதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெற முடியும்.

>தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.  

>இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக பயனர்கள் தங்களது ரிவ்யூக்களில் தெரிவித்துள்ளனர். அதனை துரிதமாக நிவர்த்தி செய்வதன் மூலம் மக்கள் இந்த செயலியின் மூலம் சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம். 

அப்ளிகேஷன் லிங்க்: Tele-Law for Citizens

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com