“மக்கள் பிரதிநிதியாவதே எனது கனவு” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை ’சிறப்பு’ பேட்டி

“மக்கள் பிரதிநிதியாவதே எனது கனவு” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை ’சிறப்பு’ பேட்டி
“மக்கள் பிரதிநிதியாவதே எனது கனவு” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை ’சிறப்பு’ பேட்டி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுநர் மாளிகையிலேயே உணவு சமைத்துக் கொடுத்தது, அனைவரும் புகார் அளிக்க 24 மணிநேரமும் ஆளுநர் மாளிகையில் தனி பிரிவு துவக்கியது, மாதம்தோறும் தனக்கான உணவு செலவுகளுக்கு பணம் கொடுத்து வருவது, ஆளுநர் மாளிகை ஊழியர்கள் 300 பேருக்கு சொந்த செலவில் உதவிகள் செய்தது, அரசுக்கும் மக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வுகளைத் தொடர்ந்து கொடுத்து வருவது என அன்பு; அதிரடி ஆளுநராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். இதனாலேயே, அம்மாநில மக்கள் ‘இது ராஜ்பவன் இல்லை; பிரஜாபவன்... தமிழிசை அல்ல. ஜன இசை’ என்று பாராட்டித்தள்ளுகிறார்கள்.

ஆளுநராக இருப்பதால் அரசியல் கேள்விகளே கேட்கவேண்டாம் என்று தவிர்த்த தமிழிசை செளந்தரராஜனிடம், அரசியலையும் ஆளுநரையும் தவிர்க்க முடியுமா? அரசியல் கேள்விகள் உட்பட பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? 

நான் இங்கு வந்தவுடனேயே பாஜகவை சேர்ந்த ஆளுநர் எப்படி ஒத்துபோவார் என்ற சந்தேகம் எல்லோருக்குள்ளும் இருந்தது. ஆனால், நான் ஒத்துப்போக வேண்டிய இடத்தில் ஒத்துப்போவேன். தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காண்பிக்கிறேன். நான் மட்டுமல்ல அனைத்து ஆளுநர்களும் மக்கள் நலன் சார்ந்தவர்கள்தான்.

தமிழகத்தில் இருக்கும்போது மேடை மேடையாக அரசியல் பேசிக்கொண்டிருந்தீர்களே? இப்போது எப்படி இருக்கிறது?

வெளியில் பேசுவதில்லையே தவிர நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். தினம் அரசாட்சி சார்ந்த அறிவு சார்ந்த கூட்டங்களில் பங்கேற்றாலும், அரசியல் கூட்டங்களை பெரிதும் மிஸ் செய்கிறேன்.

ஆளுநர்கள்தான் துணை வேந்தர்களை நியமிப்பவர்கள். சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

அந்தந்த மாநிலத்திலுள்ள அமைச்சர்களும், ஆளுநரும், துணை வேந்தர்களும் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனை இது. இதற்கு, நான் பதில் சொல்ல முடியாது.

தமிழக பாஜக தலைவர் முருகனின் செயல்பாடுகள் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அரசியல் ரீதியாக கருத்துக்களை சொல்ல முடியாது என்பதால் முருகனை ஒரு தம்பியாக பிடிக்கும். கடின உழைப்பாளி. பின் தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து இந்நிலைக்கு உயர்ந்திருக்கிறார். 20 வருடமாகத் அவரது உழைப்பை பார்த்து வருகிறேன்.

தெலங்கானா அரசிடம் தமிழக அரசு என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தெலங்கானாவின் கோதாவரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இரண்டு மாநில முதல்வர்களூம் அமர்ந்து பேசினால் தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரமுடியும். தெலங்கானா முதல்வரும் இணக்கமாக செய்யத் தயாராக இருக்கிறார். அதேபோல, இரண்டு மாநில மக்களும் கோயில்களுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால், தமிழகத்தின் வேலைப்பாடு அமைந்த கோயில்கள்போல் இங்கு இல்லை. என்னுடன் வந்த அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோயில், ரங்கநாதர் கோயில்களை பிரமித்துப்போய் பார்த்தார்கள். தெலங்கானாவிற்கும் தமிழகத்திற்கும் ஒரு சுற்றுலா இணைப்பை கொண்டு வரலாம். இப்படி நிறைய விஷயங்கள் உள்ளன. ஆளுநர் பொறுப்பின் மூலம் தெலங்கானா மற்றும் தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதையே சிந்தித்து வருகிறேன்.

கொரோனா சூழலில் தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரையை நடத்துவது சரியா?

எந்தக் கூட்டத்தை நடத்தினாலும் சென்றாலும் பாதுகாப்போடு இருக்கவேண்டும். கொரோனா வைரஸ் மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும்தான் பரவுகிறது. அதனால், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கிருமிகள் கைகள் வழியாக மற்ற இடங்களுக்கும் பரவி மூக்கிலும் வாயிலும் செல்லும் என்பதால் அடிக்கடி கைக கழுவ வேண்டும். நெல்லிக்காய், வேம்பு, இஞ்சி, பூண்டு, அதிமதுரம், அஷ்வகந்தா எல்லாமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இஞ்சி, வெற்றிலைப் போட்டு கஷாயம் குடிக்கலாம். பாலில் மஞ்சள் போட்டு குடிக்கலாம். சுரக்காய், முருங்கைக்கீரை, அகத்திக்கீரை அடிக்கடி எடுத்துக்கொள்ளவேண்டும்.

தலைவர்கள் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தவேண்டும் என்றீர்கள். ஆனால், பிரதமர் மோடி பத்திரிகையாளர் சந்திப்புகளையே நடத்துவதில்லையே?

களத்தில் இருக்கும் தலைவர்களைத்தான் நான் சொன்னேன். பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர், ஆளுநர் என அவரவர்களுக்கென்று விதிமுறைகள் உள்ளன.

மக்கள் பிரதிநிதி ஆகாமலேயே, ஆளுநர் ஆகிவிட்டோம் என்ற வருத்தம் ஏற்பட்டதுண்டா?

எனக்கு மக்கள் பிரதிநிதி ஆகவேண்டும் என்பதுதான் விருப்பம்; கனவு எல்லாமே. பாஜக தலைவராக இருந்தபோதுகூட வாரம்தோறும் செவ்வாய் கிழமை மக்கள் பிரச்சனைகளைக் கேட்பேன். இப்போதும், ஆளுநர் பணி இவ்வளவுதான் என்றில்லாமல், இதில் எப்படி மக்கள் சேவையை செய்ய முடியும் என்றே நினைத்து செயல்படுகிறேன். மிகப்பெரிய அரசியல் குடும்பத்தில் பிறந்ததால், காங்கிரஸ் சென்றிருந்தால் அனைவரும் மகள் மாதிரி பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். பெரிய அறிமுகம் கிடைத்திருக்கும். அதனையெல்லாம் விரும்பாமல் பாஜகவில் இணைந்து 20 ஆண்டுகளாக அடிமட்டத்தொண்டராக களப்பணியாற்றிய பின்னரே மாநிலத்தலைவராக ஆனேன். அரசியல் குடும்பப் பின்னணி, நானும் கணவரும் மருத்துவர்கள் என்பதால் வசதி வாய்ப்புகளில் குறைவில்லை. ஆனாலும், மக்களுக்கு நன்மை செய்யவே அரசியலுக்கு வந்தேன். தூத்துக்குடியில் அதிகம் கிடைக்கும் மீன், முருங்கை, உப்பு, வாழை இவற்றை வைத்து என்ன செய்யலாம் என்று பெரிய கனவுத் திட்டங்களையே வைத்திருந்தேன். அந்த வாய்ப்பை மக்கள் கொடுக்கவில்லை. ஆளுநர் மாளிகையையே மக்கள் மாளிகையாக மாற்றிக்காட்டிய என்னை மக்கள் பிரதிநிதியாக ஆக்கியிருந்தால், நல்ல மக்கள் பிரதிநிதி என்பதை நிரூபித்திருப்பேன். மக்கள் இன்னும் கொஞ்சம் ஆதரவு கொடுத்திருக்கலாமோ என்ற வருத்தம் இருக்கிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கனவு. அது கனவாகவே இருக்கிறது.

எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?

இந்த நொடி இறைவன் கொடுத்தது. இந்த நொடியையும் நகர்வையும் மட்டும்தான் பார்ப்பேன். அடுத்த நொடியும் இறைவன் கையில் இருக்கிறது என்பதால் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்கிறேன். ஆனால், உள்ளுக்குள் சில ஆசைகள் இருக்கலாம். ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆகவேண்டும் என்று நினைத்தேன். தற்போது, பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுநர் உரை ஆற்றுவேன் என்று நினைக்கவில்லை. எங்கள் கட்சித் தலைவர்களும் இறைவனும் அபரீதமான உயரத்தில்தான் வைத்துள்ளார்.

உங்கள் முழக்கமான ‘தமிழகத்தில் தாமரை மலந்தே தீரும்’ இப்போது சொல்ல முடியாமல் இருப்பது எப்படி இருக்கிறது?

கடந்த 20 ஆண்டுகாலமாக என் உணர்வோடு ஒன்றிய வார்த்தை ’தமிழகத்தில் தாமரை மலந்தே தீரும்’ என்பதுதான். ஆளுநராக இருப்பதால், அந்த வார்த்தை நாக்கில் வெளிப்படையாக வராமல் இருக்கலாமே தவிர உள்ளத்தில் இல்லாமல் இருக்காது. ஓங்கிச் சொல்ல முடியவில்லையே தவிர மனதில் தாங்கிக்கொண்டிருக்கும் வார்த்தை அது. அகத்தில் தாமரை மலந்திருக்கிறது என்றுதான் ஆளுநராக பதில் சொல்ல முடியும்.

இப்போது, தெலுங்கில் என்ன வார்த்தை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?
சுபா காஞ்சலு. தமிழில் ’வாழ்த்துகள்’ என்று அர்த்தம்.

ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் முடிவை தள்ளி வைத்துள்ளாரே?
அவர், நல்ல உடல் நலத்தோடு நீடூடி வாழவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

கொரோனாவை கட்டுப்படுத்த தெலங்கானா அரசு தவறிவிட்டது என்றீர்களே? ஆனால், கொரோனா அதிகமுள்ள தமிழகத்தை பாராட்டியது சரியா?

தமிழகத்தைப் பாராட்டக் காரணம், தமிழக சுகாதாரத்துறை மத்தியில் இருந்துவரும் சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்காகத்தான். மேலும், தமிழகத்தில் ஒரு மருத்துவரே அமைச்சராக இருப்பதும் கூடுதல் சிறப்பு.  தெலங்கானாவில் அப்படியில்லை. நோயின் தாக்கத்தை சரியாக கணிக்காமல் மெத்தனமாக இருந்தார்கள். இதனால், கொரோனா எண்ணிக்கைக்கூடி இறப்புகளும் அதிகரித்தது. நான் ஒரு ஆளுநராக இல்லாமல் மருத்துவராகவும் நிறைய ஆலோசனைகளை வழங்கினேன். ஆரம்பத்தில் கொரோனாவுக்காக ஹைதராபாத்தில் ஒரேயொரு மருத்துவமனைதான் செயல்பட்டு வந்தது. நான்தான் 33 மாவட்டங்களுக்கும் கொரோனா மையம் இருக்கவேண்டும், நடமாடும் டெஸ்டிங், ஃபீவர் க்ளினிக்ஸ், மருத்துவர்கள் பாதுகாப்பு என பலவேறு ஆலோசனைகளைக் கூறினேன். மாநில அரசோ, அதனைக் கண்டுகொள்ளவில்லை.

     30 மருத்துவர்களை கொரோனா பாதித்து அட்மிட் ஆகியிருந்தபோது, அத்தனை பேர் தடுத்தும் நானே பாதுகாப்பு உபகரணங்களைப் போட்டுக்கொண்டுப் போய் பார்த்தேன். பின்புதான் மக்களுக்கும் அரசுக்கும் என் செயல்பாடுகள் மீது நம்பிக்கை வந்தது. கொரோனாவும் கட்டுக்குள் அடங்கியது. ஒரு கவர்னராக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன் என்பதில் மன நிறைவு உள்ளது. வெறும் எண்ணிக்கையை வைத்து தமிழகம் இரண்டாவது இடம் என்றில்லாமல், எத்தனை டெஸ்ட் பண்ணார்கள்? எத்தனை பாசிட்டிவ் ஆனது என்பதுதான் முக்கியம். அதனால்தான், தமிழகத்தில் தற்போது குறைந்துள்ளது.

தெலங்கானாவில் பிடித்த விஷயம் என்ன?
இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். உணவுப் பழக்கம், உடை  என அத்தனையும் சிறப்பாக இருக்கும். கலாச்சாரத்தை மிகவும் பின்பற்றி கலர்ஃபுல்லாக உடை அணிவார்கள். அதேபோல, நன்கு சமைப்பார்கள். ஹைதராபாத் பிரியாணியும் பிடிக்கும். ’எங்கள் ஆளுநரும் நல்ல பட்டு பொட்டுடன் இருக்கிறார்’ என்று என்னையும் அப்படியே சொல்வார்கள்.

தெலுங்கு மொழியை கற்றுக்கொண்டீர்களா?
தமிழ் அளவுக்கு சரளமாக பேச வரவில்லை என்றாலும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன். புரிந்துகொள்ளவும் செய்கிறேன்.

ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறீர்கள்?
ஓய்வு நேரங்களில் புத்தங்கள் படிக்கிறேன். தமிழகத்தில் இருக்கும்போது எனக்கு படிக்க நேரம் கிடையாது; நடக்க நேரம் கிடையாது. ஆனால், இப்போது பணி இல்லாத நேரத்தை புத்தகங்களுக்கு செலவிடுகிறேன். எல்லோரும் புத்தகம் படிக்கவேண்டும். ஒவ்வொரு பக்கத்தையும் படிக்க படிக்க நமக்கு பக்கப்பலமாக இருக்கும்.

மருத்துவர் என்பதால் கேட்கிறேன். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்றுக்கூறி கைதாகி இருக்கிறாரே திருத்தணிகாசலம்?

திருத்தணிகாசலம் போன்று தெலங்கானாவில் கைதானவர்கள் யாரும் இல்லை. ஒன்றுபட்ட மருத்துவமுறை இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், மருத்துவம் படிக்காத மருத்துவர்களை எற்க முடியாது. மத்திய ஆயூஷ் நிறுவனத்தின் ஆய்வகத்தில், அவர் கண்டுபிடித்ததாகச் சொன்ன மருந்துகளை சப்மிட் செய்திருக்கவேண்டும். அதற்கும் அரசு வழிமுறையை வகுத்து வைத்துள்ளது. ஆனால், அவர் கடைப்பிடிக்கவில்லை.

தமிழகத்திற்கு வந்து செல்கிறீர்களா?

கொரோனா சூழலால் என்னால் வர இயலவில்லை. ஆனால், தமிழகம்தானே எனக்கு விருப்பமான இடம்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com