அச்சுறுத்தும் கொரோனா.. குழந்தைகள், கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

அச்சுறுத்தும் கொரோனா.. குழந்தைகள், கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
அச்சுறுத்தும் கொரோனா.. குழந்தைகள், கர்ப்பிணிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

கொரோனா வை‌ரஸால் பாதிக்‌கப்பட்டு இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258ஆக உயர்ந்துள்ளது. இதில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 23 பேர் குணமடைந்து வீடு‌ திரும்பிவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. தமிழகத்தில், கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனாவை கட்டுக்குள் வைக்க நாளை சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், கொரோனா குறித்த பயம் பலருக்கு அகலவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா வந்தால் இறந்துவிடுவோம் என்றே அனைவரும் அஞ்சுகின்றனர். முக்கியமாக, கர்ப்பிணி பெண்கள் தங்களின் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு செல்லவே பயமாய் இருக்கிறது என்று கூறி தயக்கத்தில் இருந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கொரோனா தொற்றிவிடுமோ என்ற பயமும் பல தாய்மார்களை போட்டு வதைத்து வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து குழந்தைப் பிறப்பு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளர் டீனா அபிஷேக், புதியதலைமுறை இணையதளத்திற்கு விளக்கம் கொடுத்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் கொரோனாவால் 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 80 சதவிகித பேருக்கு தொடுதல் மூலமாகவே கொரோனா தொற்று பரவியுள்ளது. கொரோனா தொற்றி விட்டால் முதலில் அவர்களுக்கே தெரியாது. 14 நாட்களுக்கு பிறகே அதை கண்டறிய முடியும். அதனால், சளி, காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை இருந்தால் பரிசோதித்து கொள்வது நல்லது.

முதலில் யாரும் கொரோனா, கொரோனா என்று பயப்பட வேண்டாம். பயமே பாதி மக்களை கொன்று விடும் என்றுதான் நான் சொல்வேன். கொரோனாவுக்கு சரியான மருந்து இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அதன் மூலம் வரும் தொந்தரவுகளுக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்த முடியும். யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் பயப்படாமல் அதை வெளிப்படுத்த வேண்டும். தொந்தரவுகள் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதற்காக பயந்து பரிசோதனைக்கே செல்லாமல் இருக்க வேண்டாம்.

கொரோனா இருக்கிறது என்று வெளியே சொல்ல சிலர் வெட்கப்படுகிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். கொரோனா தொற்று இருந்தாலும் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அந்த அறிகுறிகளை கண்டு சிகிச்சை எடுத்தாலே குணப்படுத்தி விட முடியும். கொரோனா வந்தாலே மரணித்துவிடுவோம் என்று பயப்பட வேண்டாம்.

அதேபோல், கை கழுவுவதால் மட்டுமே கொரோனாவை தடுத்துவிட முடியாது. முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் மிகவும் பயப்படுகிறார்கள். இதுகுறித்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. மருத்துவமனைக்கு செல்வதற்கே பயமாய் இருக்கிறது என்கிறார்கள். மருத்துவமனைக்கு செல்லும்போது ‘டெட்டால்’ எடுத்து செல்லட்டுமா என்று கேட்கிறார்கள். அது தேவையில்லை. ஏற்கெனவே தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வைத்துள்ளனர். அதனால் கர்ப்பிணி பெண்கள் பயப்பட வேண்டாம்.

உலக அளவில் ஒரே ஒரு பிறந்த குழந்தைக்கு மட்டுமே கொரோனோ தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் 99.9 சதவீதம் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. ஒருவேளை கொரோனா தொற்றிய கர்ப்பிணியாக இருந்தாலும் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருக்காது. குழந்தை பிறந்தவுடனேயே அனைத்துவிதமான சிகிச்சைகளும் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தாய்மார்கள், அவர்களின் பிறந்த குழந்தைகளுக்கு பாலூட்டுகின்றனர். அதன்மூலம் குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. கர்ப்பிணி பெண்கள் கொரோனா இருந்தாலும் இல்லையென்றாலும் பயப்பட வேண்டாம். உணவு மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக அவசியம். ஆனால் சுகர் கண்டெண்ட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை தவிர்த்து கொள்வது நல்லது.

குழந்தைகளை பொருத்தவரை கொரோனா அதிகமாக பாதிக்கவில்லை. குழந்தைகள் வெளியில் விளையாடிவிட்டு வருகிறார்கள் என்றால் நன்கு கை, கால்களை கழுவிவிட்டு உள்ளே அனுமதிக்க வேண்டும். வீடுகளில் நியூஸ் போட்டு குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் சிறு சிறு விஷயங்களில் கவனமாக இருப்பார்கள். மேலும், பல வதந்திகள் பரப்புகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com