தேர்தல் களம்: எப்போது போர்க்களத்தைச் சந்திக்கப்போகிறார் ரஜினி?

தேர்தல் களம்: எப்போது போர்க்களத்தைச் சந்திக்கப்போகிறார் ரஜினி?
தேர்தல் களம்: எப்போது போர்க்களத்தைச் சந்திக்கப்போகிறார் ரஜினி?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி ஊடகப் பரப்பில் அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. நவம்பரில் கட்சி தொடங்குகிறார். ஆந்திராவில் என்டிஆர் பெற்ற வெற்றியைப்போல அவர் தமிழகத்தில் வெல்வார் என்று அவரது ஆதரவாளர்கள் பேசிவருகிறார்கள். ரஜினியின் எதிர்கால அரசியல் பற்றி பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.

"தமிழக அரசியல் களத்தில் ரஜினியின் வருகை எப்போதும் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்து வருகிறது. 1996 முதலே ரஜினியின் அரசியல் வருகை பேசப்படுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதாகக் கூறினார். இருவருக்கும் இணையான ஆளுமைமிக்க தலைவர்கள் யாரும் இல்லை என்றும் வெளிப்படையாகப் பேசினார்.

கடந்த 2017 டிசம்பரில் போருக்குத் தயாராக வேண்டும் என்று தன் ரசிகர் மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார் ரஜினி. தேர்தலைத்தான் அவர் போர் என்றும் குறிப்பிட்டார். 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்றார். கொரோனா பாதிப்புக்கு முன்பு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த், நற்பணி மன்ற உறுப்பினர்களுக்கு மூன்று முக்கியமான விஷயங்களைச் சுட்டிக்காட்டினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று கனவில்கூட நினைத்திருக்கமாட்டார். அதுபோன்ற அதிசயம் நாளையும் நடக்கலாம் என்றார். அடுத்து கட்சி ஆரம்பிப்பது உறுதி. ஆனால் நான் முதல்வராக இருக்கமாட்டேன். நான் கைகாட்டுபவர் முதல்வராக இருப்பார். கட்சியைத் தாண்டி பல நல்லவர்கள் வெளியில் உள்ளார்கள். அவர்களுக்கும் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார்.

மூன்றாவதாக ஆட்சிக்கு வந்ததும் கட்சிப் பதவிகள் இருக்காது. ஏனெனில் கட்சிப் பதவியைப் பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்துவார்கள் என்றார். மேலும், அலை அலையாகப் பரவி  மக்களிடம் எழுச்சி உண்டாகவேண்டும் என்று கூறியிருந்தார். கொரோனா காலத்தில் அப்படியொரு எழுச்சி எதுவும் உருவாகவில்லை. ஆனால் சில சமூகப் பிரச்னைகளுக்கு மட்டும் கருத்துக்களை வெளியிட்டு அமைதியாகிவிட்டார்.

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல்நிலையத்தில் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில், எல்லை மீறிச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை சும்மாவிடக்கூடாது என்று கண்டித்தார். கந்தசஷ்டி பற்றிய சர்ச்சையில் எம்மதமும் சம்மதம் என்று தெரிவித்தார். திருவள்ளுவர் சிலைக்கு காவி பூசிய சம்பவம் தொடர்பாக, "எனக்கும் காவி பூச முடியாது. வள்ளுவருக்கும் காவி பூசமுடியாது" என்று தன் மீது படிந்துள்ள பாஜக சாயத்தை நீக்க விரும்பினார்.

ப்ரியன், பத்திரிகையாளர் 

தற்போது மீண்டும் பேச்சு தொடங்கியுள்ளது. நவம்பரில் வருவார், தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி தொடங்கி வெற்றி காண்பார் என்றும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் நோக்கர்களும் பேசிவருகிறார்கள். ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேர்தல்களில் பதிவான வாக்குகளில் 70 சதவீதத்துக்கும் குறைவில்லாமல் வாக்குவங்கியைப் பெற்றுள்ளன. ரஜினியின் வாக்கு வங்கி எங்கே இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த காலத்தில் அவர்மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு மற்றும் திமுக எதிர்ப்பு ஆகியவை மிகப்பெரிய அளவில் வெற்றிக்குக் கைகொடுத்தன. தற்போது அப்படியான எழுச்சி எதுவும் தமிழகத்தில் ஏற்படவில்லை. இரு கட்சிகளுக்கும் எதிரான கடுமையான எதிர்ப்பலைகளும் இல்லை. "நீங்க வந்தாதான் தமிழ்நாடு பிழைக்கும்" என்று கட்டாயப்படுத்தி அரசியலுக்கு அழைக்கும் நிலையும் மக்களிடம் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் வென்று திமுக பலமாக இருக்கிறது. அதிமுகவும் தொண்டர் பலத்துடன் காணப்படுகிறது.
ரஜினிக்கு நடுநிலையானவர்கள் வாக்களிப்பார்கள் என்றாலும், அவை 10 முதல் 15 சதவீதமாகத்தான் இருக்கும். அவர்கள் அப்படியே முழுமையாக ரஜினிக்கே வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கமுடியாது. தேர்தல் நேரத்தில் கட்சியைத் தொடங்கி 30 சதவீதம் வாக்குகளைப் பெறுவது என்பது எதார்த்தமானதல்ல. அடுத்து ரஜினி யாருடன் கூட்டணி சேர்வார் என்பதும் விவாதிக்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் ரஜினி சேர்வாரா என்பது சந்தேகம்தான். ஏனெனில் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தால் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற இமேஜ் பாதிக்கப்படும். கமலுடன் இணைவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. "நான் கைகாட்டுகிறவர்தான் முதல்வர்" என்கிற அவரது கருத்தில் கமல் முரண்படலாம். இருவருமே மக்களிடம் பிரபலங்களாக இருப்பதால் அரசியல் நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ரஜினி வேறு யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் அவருக்கு இழப்பாகவே இருக்கும். கூட்டணி சேரும் கட்சிகளுக்கு மக்களிடம் உள்ள எதிர்ப்புகள் ரஜினியையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கும். எனவே ரஜினிகாந்த் புதிதாக கட்சியைத் தொடங்கி தேர்தலில் தனியாக களம் காண்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர் களத்துக்கு வருவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. கொரோனா பரவல் குறையாத காலத்தில், அவர் வெளியே வந்து பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும். காணொலி வாயிலாகவே எல்லாவற்றையும் நடத்திவிடமுடியாது.

தேர்தலில் களத்தில் குதித்தாலும் அதில் வென்று ஆட்சியைப் பிடிப்பதற்கான சாதகமான சூழல் தற்போது இல்லை. தோல்வி கண்டால், மீண்டும் அரசியலில் தீவிரமாக ரஜினி ஈடுபடுவாரா என்பதும் கேள்விக்குறிதான். ரசிகர்கள் சொல்வதைப் போல இப்போது இல்லை என்றால் எப்போதுமே அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை. உண்மையிலேயே, ரஜினிகாந்த் கட்சியைத் தொடங்கினால், அதன் எதிர்காலம் பற்றி கூர்மையாக விவாதிக்கமுடியும்" என்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com