தமிழர் திருநாள்: உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த பொங்கல் பண்டிகை - வரலாறு என்ன?

தமிழர் திருநாள்: உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த பொங்கல் பண்டிகை - வரலாறு என்ன?
தமிழர் திருநாள்: உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த பொங்கல் பண்டிகை - வரலாறு என்ன?

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த திருவிழாவாக உள்ளது. இதன் எளிமையான வரலாறு இங்கே...

தமிழகத்தில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்புபடுத்தி சொன்னாலும், அதன் உள்ளே இன்றும் உயிர்ப்புடன் தமிழர்களின் இயற்கையான மெய்யியல் வழிபாடு பொதிந்துள்ளதை காணலாம். கார்த்திகை தீபம், ஆடிப்பெருக்கு, சித்திரை முழுநிலவு என பல பண்டிகைகளை இந்த பட்டியலில் சேர்க்கலாம். ஆனால் தமிழகத்தில் சாதி, மத, பொருளாதார பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை என்றால் அது இன்றுவரை பொங்கல் பண்டிகைதான்.

தமிழகத்தில் ஒரு போகம், இருபோகம், முப்போகம் என அறுவடை செய்யும் நிலப்பகுதிகள் உள்ளன, ஒரு மாவட்டத்திற்குள்ளேயே இந்த நிலப்பகுதிகள் மாறுபடும். அதனால் பொதுவாக தை மாத அறுவடையை அறுவடை திருநாளாக கொண்டாடியுள்ளனர். அதுபோல, ஆடிபட்டத்தில் விதைக்கப்படும் காய்கறிகள், கிழங்குகள், தானியங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் அறுவடையாகும் மாதம் தை மாதம்தான். எனவே தை மாதம் பிறக்கும் நாளை இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தமிழர்கள் வணங்கி வழிபட்டனர்.

சங்க இலக்கியங்களில் தை:

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” மற்றும் "தண்ணீர்த் தைஇ நின்ற பொழுதே" என்று நற்றிணை 80 மற்றும் 124ஆம் பாடல்களிலும், “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்ற குறுந்தொகையின் 196வது பாடலிலும், "தைஇத் திங்கள் தண்கயம் போல" என்று புறநானூறின் 70வது பாடலிலும், “தைஇத் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறின் 84 வைத்து பாடலிலும், “தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ” என்று கலித்தொகை பாடலிலும் தை மாத நீராடல் பற்றிய குறிப்புகள் உள்ளதால் சங்ககாலம் முதலே தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டதை அறியலாம்.

பொங்கல் பண்டிகையின் நான்கு நாட்களுமே இப்போதும்கூட உழவர்களுடன் பின்னிப்பிணைந்தது, அந்த நான்கு நாட்களை பற்றி பார்ப்போம்...

போகிப்பண்டிகை: அறுவடைதிருநாள் கொண்டாடுவதற்கு முன்பாக வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து பண்டிகைக்கு உழவர்கள் தயாராவார்கள். அப்படி வீட்டில் சேர்ந்திருக்கும் தேவையற்ற பொருட்களை எரிக்கும் பண்டிகையாக போகிப்பண்டிகை உள்ளது. போகிப்பண்டிகை என்பது மழைக்கு நன்றி சொல்லும் நாளாகவும் வணங்கப்படுகிறது. இப்போதும்கூட மார்கழி கடைசியில் சிறு மழையாவது தூறும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது இந்த நம்பிக்கையின் நீட்சியாக பார்க்கப்படுகிறது. மாசுகள் அற்ற அக்காலத்தில் பனி மிகக்கடுமையாக இருக்கும் என்பதால் எரிக்கும் வழக்கம் இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை:
அறுவடை செய்த புது நெல்லை கொண்டு, புதுப் பானை, புது அடுப்பில் சூரியனை பார்த்து பொங்கல் வைப்பார்கள். இந்த பானையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சள், இஞ்சி கொத்துகள் கட்டப்பட்டிருக்கும். அறுவடை செய்யப்பட்ட செடி, கொடிகளின் காய்கறி வகைகள் மற்றும் கிழங்குகளை கொண்டு கூட்டு சமைக்கப்பட்டு அதுவும் சூரியனுக்கு படைக்கப்பட்டு வணங்கப்படும். தமிழர்களின் சிறப்புமிக்க பொங்கல் கரும்பும் சூரியனுக்கு படைக்கப்படும். இயற்கையாக திறந்தவெளியில் படையலிட்டு சூரியன் மட்டுமின்றி, காற்று, ஆகாயம், மண்,நீர் உள்ளிட்ட ஐம்பூதங்களுக்கும் நன்றி கூறும் விழாவாக இது உள்ளது.

மாட்டுப்பொங்கல்:
அந்த காலத்தில் வேளாண்மைக்கு மிக அவசியமானது மாடுகள்தான். உழவுப்பணிக்கு மாடுகள் தேவை, பயிர்களுக்கு ஊட்டமளிக்கும் இடுபொருட்களை மாட்டு சாணம், சிறுநீர் தேவை, அறுவடைக்கு போரடிக்கவும், நெல்லை வீட்டில் கொண்டுவந்து சேர்க்கவும் மாடுகள் தேவை. இதுபோல விவசாயத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி செய்வதற்காகவே ஒரு நாளை ஒதுக்கி, அந்த நாளில் மாடுகளுக்கு சிறப்பு செய்து பொங்கல் வைத்து வழிபடும் நாளாக இந்நாள் உள்ளது.

காணும் பொங்கல்:
பொங்கல் பண்டிகை மற்றும் அதற்கு தயாராகும் வேலைகள், அறுவடைப் பணிகள், வீட்டு தூய்மைப்பணி என பல வாரங்கள் உழைத்த மக்கள், தங்கள் உறவுகளை கண்டு மகிழ்ச்சியுடன் குதூகலிக்கும் நாளாக காணும் பொங்கல் உள்ளது. இந்த நாளில்தான் கிராமங்களில் விளையாட்டு போட்டிகள், மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com