கொரோனா கால மாணவர் நலன் 9: 'ப்ரவுசிங் ஹிஸ்டரி காட்டுவது எதை?' - உடனடி தேவை, மனநல முகாம்கள்!

கொரோனா கால மாணவர் நலன் 9: 'ப்ரவுசிங் ஹிஸ்டரி காட்டுவது எதை?' - உடனடி தேவை, மனநல முகாம்கள்!
கொரோனா கால மாணவர் நலன் 9: 'ப்ரவுசிங் ஹிஸ்டரி காட்டுவது எதை?' - உடனடி தேவை, மனநல முகாம்கள்!

கொரோனா கால பொதுமுடக்கத்தில் டீன் ஏஜ் குழந்தைகளிடையே நிறைய குணநல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள் மனநல மருத்துவர்கள். அவற்றின் முக்கிய காரணமாக, வயதுக்கு மீறிய நட்புறவை அவர்கள் குறிப்பிடுகின்றனர். வயதுக்கு மீறிய நட்பினால் குணாதிசய மாற்றங்கள் மட்டுமன்றி, நிறைய புதுப்புது தவறான பழக்கங்களுக்கு அடிமையாகியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா இதுபற்றி நம்மிடையே தெரிவிக்கையில், "பொதுமுடக்க நேரத்தில் குழந்தைகளிடையே ஏற்பட்டிருக்கும் மிக முக்கிய பிரச்னை, மொபைல் அடிக்‌ஷன். இதில் டீன் ஏஜ் குழந்தைகள் ஒருகட்டம் மேலே சென்று போர்னோ அடிக்‌ஷன் என சொல்லக்கூடிய ஆபாச படங்களுக்கு அடிமையாவதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். வளரிளம் பருவ குழந்தைகளுக்கு, உடல் சார்ந்த வளர்ச்சி அதிகமிருக்கும் என்பதால், அந்த காலகட்டத்தில் அவர்கள் மீது சிறப்பு கவனம் பெற்றோருக்கு அவசியம்.

கொரோனா காலத்துக்கு முன்பு வரையில் கல்லூரி சென்றபின்பே பிள்ளைகளுக்கென தனி மொபைல் வாங்கிக்கொடுக்கும் பழக்கம் பெற்றோருக்கு இருந்திருக்கும். ஆனால், பொதுமுடக்க நேரத்தில் வந்த ஆன்லைன் க்ளாஸ் கலாசாரம், எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிட்டது. தனி செல்ஃபோன், தனியறை கலாசாரம், அதிக நேர மொபைல் பயன்பாடு என எல்லாமே உருவானது.

குழந்தைகள் தங்களின் நண்பர்களைகூட மொபைல் வழியாகத்தான் அனுகவேண்டியிருந்தது என்பதால், அவர்களிடமிருந்து மொபைலை வாங்குவது பெற்றொருக்கு பெரும் சவாலானது. மொபைல் அதிகம் உபயோகிக்காத குழந்தைகள் என்றால், அவர்களுக்கு வயதுக்கு மீறிய புது நட்பு வட்டம் வீட்டுக்கு அருகிலேயே உருவானது. இவை யாவும்தான் அவர்களின் குணாதிசயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மொபைல் கேம் அடிக்‌ஷன் ஆபத்து என்றாலும்கூட, அதைவிட ஆபத்தானது ஆபாச இணையதளம் பார்த்து, அதற்கு அடிமையாவது. இன்றைய தேதியில் மொபைலில் இதுதான் விளம்பரம் என்றில்லாமல், எல்லா வகையான விளம்பரங்களும் சாதாரண ப்ரவுசிங் வெப்சைட்டிலேயேகூட வருகிறது. தெரியாமல் முதல் ஓரிரு தடவை அதை பிள்ளைகள் க்ளிக் செய்தாலும், அதன் விளைவாக பின்னாள்களில் அது மீண்டும் மீண்டும் வரும். இதைத் தடுக்கவே குழந்தைகளின் மொபைல் ப்ரவுசிங் ஹிஸ்டரியை பெற்றோர் பார்க்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தொடக்கத்திலேயே இப்படியான விஷயங்களை பெற்றோர் தடுத்துவிடுவது மிக மிக முக்கியம்.

ஒருவேளை பெற்றோருக்கே வெகுநாள்கள் கழித்துதான் விஷயம் (குழந்தைகள் ஆபாச தளம் பார்ப்பது, அதைப் பார்த்து சுய இன்பம் தொடர்பான ஏதேனும் செயல்களில் ஈடுபடுவது போன்றவை) தெரியவருகிறது என்றால், உடனடியாக 'நீ எப்படி இப்படியெல்லாம் செய்யத் துணிஞ்ச?' என்றெல்லாம் கேட்டு வன்முறையில் இறங்கக்கூடாது. மாறாக, அவர்களுடன் அமர்ந்து பெற்றோர் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும். அப்படி பேசுகையில், 'உனக்கு யார் இந்த இணையதளம் பற்றி சொல்லிக் கொடுத்தாங்க, இந்தப் பழக்கத்தை உன் நண்பர்கள் யார்கூடலாம் நீ பகிர்ந்த, இதை ஏன் எங்ககிட்ட மறைச்ச, இது தொடர்பா உனக்கு இருக்க வேற பழக்கங்கள் என்னென்ன?' என்று கேட்க வேண்டும்.

'இனிமேல் இப்படி செய்யக்கூடாது' என்று அறிவுறுத்துங்கள். ஒருவேளை குழந்தை அதற்கு பின்பும் உங்கள் பேச்சை கேட்கவில்லை (அ) அப்பழக்கத்திலிருந்து மீளமுடியவில்லை என்று குழந்தை சொல்கிறான்/ள் என்றால், அப்போது அவர்களை குழந்தைகள் மனநல மருத்துவரிடம் அழைத்து வாருங்கள். அவர்கள் மூலம் குழந்தைகளை சரிசெய்யுங்கள். நிபுணர் ஆலோசனை பெறுவது, நிச்சயம் சிக்கலை சரிசெய்யும்.

ஆபாச தளத்துக்கு அடிமையாவதை போலவே, இன்னொரு பிரச்னையும் டீன் ஏஜ் குழந்தைகளுக்கு இந்த பொதுமுடக்கத்தில் அதிகம் ஏற்பட்டுள்ளது. அது வன்முறை. பல குழந்தைகளும் இன்றைய தேதிக்கு வன்முறையே தீர்வென நினைத்து, வீட்டுக்குள்ளேயே அதை ஆயுதமாக கையில் எடுக்கின்றனர். இதுவும் கிட்டத்தட்ட மொபைல் அடிக்‌ஷனின் மற்றொரு வெளிப்பாடுதான். குறிப்பாக கேம் அதிகம் விளையாடுவதனால் ஏற்படும் விளைவுதான் அது. இதிலிருந்து குழந்தைகளை மீட்கவும் நிபுணர் ஆலோசனை உதவிபுரியும்.

இந்த இரண்டு விஷயத்திலுமே, இறுதியில் நாம் முடிப்பது நிபுணர் ஆலோசனை என்ற புள்ளியில்தான். ஆனால் அதற்கு முன் இன்னொரு பொதுவான தீர்வும் உள்ளது. அது, ஆசிரியர்கள் மூலமாக குழந்தைகளை சரிசெய்வது. அரசுப் பள்ளி குழந்தைகள் தொடங்கி நகரங்களில் அடுக்குமாடி பள்ளியில் பயிலும் மாணவன் வரை, யாராக இருந்தாலும் அவன் வகுப்பு ஆசிரியர் நினைத்தால் அவனை மாற்ற முடியும். ஒரேயொரு விஷயம், அந்த ஆசிரியர்கள் இதுசார்ந்த அறிவும் அனுபவும் இருக்கப்பெற்றவர்களாக இருக்க வேண்டும். 

பொதுவாக டீன் ஏஜ் பிள்ளைகளுக்கான ஆசிரியர்கள், கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பார்கள் என்றாலும், இவ்விஷயத்தில் அவர்களுக்கும் கூடுதல் விழிப்புணர்வு தேவை. குறிப்பாக, இப்படியான ஒரு சிக்கலுள்ள குழந்தையிடம் எப்படி பேச வேண்டும் - எதையெல்லாம் பேச வேண்டும் - எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பது ஆசிரியர்களுக்குத்தெரிய வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தியே, ஆசிரியர்களுக்கு மனநல விழிப்புணர்வு சார்ந்த வகுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதற்கு முன்பு அரசு இந்த கோரிக்கைகளை ஏற்காததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால், இந்த கொரோனா பொதுமுடக்கத்துக்கு பின்னான நேரத்தில் அரசு இதை எக்காரணம் கொண்டும் தட்டிக்கழிக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களை கையாள்வதற்கான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். தேவைப்படும் சூழலில் ஆசிரியரே மாணவர்களை மனநல ஆலோசனைக்கு நிபுணரிடம் பரிந்துரைப்பதற்கான வழிமுறைகளும் அந்த முகாமில் தெரிவிக்கப்பட வேண்டும்.

வன்முறை - ஆபாச தளம் அடிக்‌ஷன் என்பதற்காக மட்டும் நான் இதை சொல்லவில்லை. இந்த கொரோனா காலம், எத்தனையோ மாணவர்களை அம்மா இல்லாதவர்களாக - அப்பா இல்லாதவர்களாக - இருவருமே இல்லாதவர்களாக ஆக்கியுள்ளது. பெற்றோரன்றி வேறு யாரேனும் நெருங்கிய சொந்தங்களை, உடன்பிறந்தவர்களைக்கூட அக்குழந்தைகள் இழந்திருக்கலாம். அது அவர்களை மனரீதியாக சோர்வாக்கியிருக்கும். அதை வீட்டிலிருப்போர் உணர்ந்திருந்தாலும், ஏற்கெனவே அவர்களும் அந்த பாதிப்பில் இருப்பதால் அங்கு அக்குடும்பத்தில் மீட்பு சிரமமாகும். அப்படியான சூழலில் அக்குழந்தைகளை இயல்புக்கு கொணர்வது, இன்னும் கடினமாகிவிடும். அப்படியான சூழலில், ஆசிரியர் அங்கு வந்து அக்குழந்தையை மீட்க கை கொடுக்க வேண்டும்" என்றார்.

பள்ளி ஆசிரியை ஒருவர் இதுபற்றி நம்மிடையே தெரிவிக்கையில், "மாணவர்கள் மட்டுமல்ல; பல பள்ளி ஆசிரியர்களும் இந்த கொரோனாவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்களும் எங்கள் உறவுகளை இழந்திருக்கிறோம். இந்த விஷயத்தில், அரசு எங்களுக்கும் மனநல ஆலோசனைகள், முகாம்கள் அமைக்கப்பட்டு சேவை அளிக்கப்பட வேண்டும்.

மருத்துவர் சொல்வதுபோல, ஆசிரியர்களுக்கு முகாம் அமைக்கப்பட்டு அங்கு 'மாணவர்களை ஆசிரியர் எப்படி கவனிக்க வேண்டும் - எப்படி மனநல ஆலோசனை தரப்பட வேண்டும்' என்பதுடன் சேர்த்து 'ஆசிரியர்களுக்கு இருக்கும் மனநல சிக்கல் என்ன - அதிலிருந்து வெளிவர அவர்கள் என்ன செய்ய வேண்டும்' என்பனவற்றையும் சொல்ல வேண்டும்.

பள்ளி திறப்புக்கு முன்னரே, அரசு இதை செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போது பள்ளியும் திறந்தாச்சு. ஆனாலும் மனநலம் சார்ந்த எந்த முன்னெடுப்பும் அரசு தரப்பில் இல்லை. இப்போதும் ஒன்றுமில்லை... மழையால் நிறைய மாவட்டங்களில் பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. இயங்கும் நாட்களும், ஒருநாள் விட்டு ஒருநாள்தான் இயங்குகிறது. ஆகவே இப்போதாவது அரசு இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்க நினைப்பதுபோலவே, மனநல சிக்கலையும் தீர்க்க அரசு முயல வேண்டும்" என்றார் அழுத்தமாக.

மாணவர்களின் கற்றல் இடைவெளியை தீர்க்க கொடுத்த முக்கியத்துவத்தை, மனநல சிக்கலை தீர்ப்பதற்கும் அரசு கொடுக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com