அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகள்.. ஓபிஎஸ் விடுத்த அறிக்கை : ரவுடிகள் கைதின் பின்னணி!
அண்மையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் ரவுடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சினிமா பட பாணியில் அதிரடி நடவடிக்கையை எடுத்திருந்தது தமிழ்நாடு காவல்துறை. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் மேற்கொண்டு இந்த நடவடிக்கையில் 2512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 48 மணி நேரம் இந்த ஆப்பரேஷன் நடைபெற்றது. அது அனைத்து செய்தி தளங்களிலும் வைரல் செய்தியானது.
இந்த ஆப்பரேஷன் குறித்து தமிழ்நாடு காவல் துறை!
“தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உத்தரவின் படி மாநிலம் முழுவதும் செப்டம்பர் 23 இரவு முதல் Storming Operation மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் பல்லாயிர கணக்கானோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன் மூலம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதில் 244 ரவுடிகள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைது செய்யப்பட்டவர்கள். சுமார் 733 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 1,927 ரவுடிகளிடமிருந்து பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆப்பரேஷனின் போது துப்பாக்கி, கத்தி உட்பட 934 ஆயுதங்கள் கைபற்றப்பட்டன. கொலை குற்றங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையின் இந்த நடவடிக்கை தொடரும்” என தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள் இதற்கு காரணமா?
கடந்த 2012-இல் படுகொலை செய்யப்பட்ட பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் ஐந்தாவது குற்றவாளியான திண்டுக்கல், EB காலனியை சேர்ந்த நிர்மலா தேவி (59) பட்டப்பகலில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். அதே பாணியில் அன்று மாலை திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குகள் தான் தமிழ்நாடு காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுக்க காரணமாக இருக்கலாம் என்ற யூகங்களும் வலம் வருகின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை!
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில், அங்கு அமைதியான சூழல் நிலவ வேண்டும். மாறாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு இடம் இருக்காது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அரங்கேறிய கொலைகள் மனவேதனை அளிக்கிறது.
வாணியம்பாடி, ஆத்தூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, நெல்லை, ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், திண்டுக்கல் மாதிரியான பகுதிகளில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. எனவே தமிழ்நாடு முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி சட்டம் ஒழுங்கு அமைதியை சீரழிக்கும் நோக்கத்துடன் செயல்படுபவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்” என செப்டம்பர் 23 தேதியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறை இந்த ஆப்பரேஷனை மாநிலம் முழுவதும் மேற்கொண்டுள்ளது.
காவல்துறையின் கைது நடவடிக்கை!
வாகன தணிக்கை, சந்தேக நபர்களிடம் விசாரணை, குற்ற வழக்கு பின்புலம் கொண்ட நபர்கள் விசாரணை என நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக 2,500க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
நடவடிக்கை தொடர வேண்டும்...
காவல்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
இருப்பினும் இந்த அதிரடியை காவல்துறை தொடர வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன. குறிப்பாக இந்த நடவடிக்கை அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் காவல்துறை தன்னிச்சையாக செயல்பட்டால் தான் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க முடியும் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

