பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா? - விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் அச்சம்கொள்வது ஏன்?!

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில், தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் 11 பகுதிகள் இடம்பெற்றுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
CM Stalin - Delta land
CM Stalin - Delta landPT

தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தியா முழுவதும் 101 இடங்களில்..

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகிய தஞ்சாவூர் திருவாரூர், கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அழைப்பாணை குறிப்பை அனுப்பியுள்ளது. இந்நிலையில் எந்தெந்த பகுதிகளில் நிலக்கரி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் நிலக்கரி எடுப்புத் திட்டத்தில் நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்களை எடுக்க அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1.அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி பகுதி

2.கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாத்தோப்பு நிலக்கரி பகுதி

கடலூர் மாவட்டத்தில் அம்பாபுரம், தலைக்குளம், நத்தமேடு, கிருஷ்ணாபுரம், வடக்குத்திட்டை, தெற்குத்திட்டை, மணவெளி, வண்டுராயன்பட்டு, ஓடையூர், பூதவரையன்பேட்டை, புவனகிரி, அழிசிக்குடி, ஓரத்தூர், சாவடி, நகரமலை, சின்னநத்தம், மிராலூர், மஞ்சக்கொல்லை, பின்னலூர் ஆகிய 20 கிராமங்களும் நிலக்கரி சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு நிலக்கரி சுரங்கப் பகுதிகளாக உள்ளன.

3.தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய வடசேரி நிலக்கரி பகுதி ஆகியவை ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி, கீழக்குறிச்சி, அண்டமி, கருப்பூர், பரவாத்தூர், கொடியாளம் பகுதிகளும், திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்கோட்டை, கண்டிதம்பேட்டை, கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை மற்றும் நெமிரி ஆகியவற்றை உள்ளடக்கி வடசேரி நிலக்கரி பகுதி உள்ளது.

தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக அரசு கொடுத்த விளக்கம்

இது ஆரம்பகட்ட ஆய்வுக்காக விடப்பட்ட அறிவிப்பு என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் அமலில் இருப்பதால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அவர்கள் நிலம் கையகப்படுத்தி சுரங்கம் தோண்ட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் சுரங்கத்துறை அதிகாரிகள் இதுபோன்று ஆய்வு பணிகளை அவ்வப்போது மேற்கொள்வார்கள் என்றும், உண்மையிலேயே அங்கு கனிமம் இருந்தால் மாநில அரசின் அனுமதியை பெற்றுதான் சுரங்கம் தோண்ட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. நிலத்தை மத்திய அரசுக்கு கொடுக்கும் குத்தகை அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது என்பதால் விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

பீதி அடைய வேண்டாம் - வேளாண் அமைச்சர்

இதுகுறித்து வேளாண் நலன் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அதில், ”பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் டெல்டா மாவட்டங்களில் புதிய சுரங்கங்கள் எதுவும் அமைக்க இயலாது. எனவே மக்கள் பீதி அடைய வேண்டாம்” என்று தெரிவித்தார்.

புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி தராது என அமைச்சர் உதயநிதி உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழ்நாட்டில் விவசாயப் பெருங்குடிமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை உடனே கைவிட வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக தலைமையிலான அரசும் ஏதோ முதற்கட்ட ஆய்வுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது விவசாயிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழக டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.

மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லி காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க முடிவு எடுத்து இருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதன் காரணமாக சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டு இருக்கும் விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுப்பதற்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்த பிறகு ஒன்றிய அரசு அதை கைவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு கனிம வளங்கள் அவசியம் தான். அதேசமயம், விவசாயத்தை அழித்து கனிம வளம் எடுப்பது உணவுப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும் என்கிற காரணத்தினால் தான் தமிழ்நாடு சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பிறகு அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் சேத்தியார்தோப்பு, வடசேரி, மைக்கேல்பட்டி ஆகிய பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் கொடுத்துள்ளது. இது தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் அனைத்து கிராமப்புற மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து இம்மக்களை ஓட்டாண்டியாக்கி விடும். தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி இதை செயல்படுத்துவது மாநில உரிமையை மீறிய செயலாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கையில்,

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரிப் படுகையில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு செய்திருக்கும் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் இந்த சதித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமாகத் திகழும் இந்தப் பகுதிகளை முற்றாக சிதைத்துச் சீரழித்து பாலைவனம் ஆக்கும் இந்தக் கேடான திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு டெல்டா பகுதிகளில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முற்பட்டால் ஒன்றிய பாஜக அரசு கடுமையான மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்..

அதில், “இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020-யும் மேற்கோளிட்டு காட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரிசெய்து, தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com