‘படம் பார்த்து கருத்துச் சொல்லு’: மாறுகிறதா தமிழ் சினிமா டிரெண்ட்?
‘கிளைமாக்ஸை மட்டும் இப்படி மாத்தியிருந்தா, படம் சூப்பர் ஹிட்’.
‘இன்னும் கொஞ்சம் டைட்டா எடிட் பண்ணியிருந்தா போதும், படம் பரபரப்பா
இருந்திருக்கும்’ .
’செகண்ட் பார்ட்ல, கதையை இப்படி மாத்தியிருந்தா வேகமா இருக்கும்’
‘சீரியசா இருக்கு. காமெடியே இல்லை’
-ஒரு படம் முடிந்த பின் இப்படி சிலர் பேசுவதைக் கேட்டிருக்க முடியும். படம் வெளியான பின் வரும் இப்படிப்பட்ட விமர்சனங்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் மார்ச்சில் ரிலீஸ் ஆக இருக்கும் தனது ’இரும்புத்திரை’ படத்தை சிலருக்கு முன்கூட்டியே திரையிட்டு கருத்துக்கள் கேட்டிருக்கிறது, படத்தின் டீம். விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி இருக்கிறார்.
படம் பார்த்தவர்கள், தங்கள் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டிருக்கிறது படக்குழு. இதில் சிறந்த கருத்துக்களை எடுத்துக்கொண்டு படத்தை சரி செய்ய இருப்பதாகத் தகவல்.
இந்த ஐடியாவை தொடர்ந்தால் சினிமாவுக்கு நல்லது தானே என்று விசாரித்தால், உண்மைதான் என்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்.
‘இந்தியில ஆமிர்கான் ஒவ்வொரு படத்துக்கும் அதை செய்றார். சினிமாகாரங்க மட்டும் இல்லாம, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட மற்ற நகரங்கள்ல இருந்து ரசிகர்களை அழைச்சுட்டு வந்து படத்தைக் காண்பிப்பார். படம் ஓடிட்டு இருக்கும்போதே, அவங்களோட ரியாக்ஷனை கவனிப்பாங்க. ’எந்த இடத்துல கைதட்டுறாங்க, எந்த காட்சியில சிரிக்கிறாங்க’ன்னு பார்ப்பாங்க. பிறகு அவங்க கருத்துகளை வெளிப்படையா சொல்லலாம். அது என்னவா இருந்தாலும் அதை நோட் பண்ணிட்டு, அப்புறமா படக்குழு டிஸ்கஸ் பண்ணும். அதில நல்ல பாயின்ட் இருந்தா எடுத்துட்டு மாற்றங்களைப் பண்ணுவாங்க. அதாவது ரீ ஷூட் அளவுக்கு இருக்காது. ஆர்டரை மாற்றலாம். எடிட்டிங்ல கரெக்ட்
பண்ணலாம். எடுத்த படத்துல என்னென்ன மாற்றங்களை கொடுக்க முடியுமோ, அதைச் செய்வாங்க’ என்கிறார் தனஞ்செயன்.
இது ஒன்றும் புதிய ஐடியா அல்ல. எஸ்.எஸ்.வாசன் தயாரித்து 1948-ல் வெளியான ’சந்திரலேகா’ படத்திலேயே இந்த முறையை பின்பற்றி இருக்கிறார்கள். அதாவது, படத்தை முடித்துவிட்டு, தொழிலாளர்களைப் பார்க்கச் சொல்லி, அவர்கள் சொன்ன குறைகளைத்
திருத்தியிருக்கிறார்கள். இதே போல ஏவி.எம்.செட்டியாரும் படத்தை முடித்துவிட்டு தனது ஊழியர்களுக்கு படங்களை போட்டுக் காண்பித்து அவர்கள் கருத்துக்களை கேட்டு சேர்ப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். ஒரு படத்தில், நகைச்சுவை காட்சிக்குச் சிரிக்க முடியவில்லை என்பதற்காக சந்திரபாபுவுக்கு அதிக சம்பளம் கொடுத்து அவரை நடிக்க வைத்து ஷூட் பண்ணி, படத்தில் சேர்த்ததாகச் சொல்வார்கள்.
’இது ஆரோக்கியமான விஷயம். இப்படி செய்தால், கோடிகளை காப்பாற்ற முடியும்’ என்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
’தமிழ் சினிமாவுல டைரட்டர்ஸ் இல்லை. இங்க ரைட்டர்ஸ்னா, நாவல் எழுதறவங்களை வச்சு எழுதறோம். திரைக்கதைய பக்காவா எழுதறவங்களை ’ஸ்கிரின்பிளே டாக்டர்ஸ்’னு சொல்வாங்க. படத்தை எடுத்து முடிச்சுட்டு கருத்துக் கேட்கிறதை விட, ஸ்கிரிப்டை ரெடி
பண்ணினதுமே ’ஸ்கிரின்பிளே டாக்டர்கள்’கிட்ட கொடுத்து கருத்துக் கேட்கலாம். அவங்க சொல்ற மாற்றங்களை செய்யலாம். இதனால பல படங்களைக் காப்பாற்ற முடியும். தமிழ்ல, வருஷத்துக்கு 250 படங்கள் வருது. சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல புழங்குகிற
தமிழ் சினிமாவுல ஸ்கிரிப்டுக்கும் ஸ்கிரிப்ட் டைரட்டர்ஸுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? உதாரணமாக, ரிச்சர்ட் அட்டன்பரோ ’காந்தி’ படத்தை எடுக்கும்போது, அவரோட ஆரம்ப கால வாழ்க்கையில இருந்து கதையை எழுதியிருந்தார். அதை படிச்ச ’ஸ்கிரின்பிளே டாக்டர்கள்’ அதை நிராகரிச்சுட்டாங்க. பிறகு அவங்களோட உட்கார்ந்து, எங்கயிருந்து கதையை ஆரம்பிக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிதான் படத்தை உருவாக்கினாங்க. இப்படிப்பட்ட தீர்வை நோக்கி தமிழ் சினிமா போனா, அது பல வகைகள்ல நல்லதுதான்’ என்கிற அவர், இதில் இரண்டு விதமாக நடக்கவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார் மேலும்.
’’அதாவது, ஸ்கிரிப்ட் மட்டும்தான் காப்பாத்தும் அப்படிங்கறது இன்னைக்கு நிரூபணமாகி இருக்கு. பாரதிராஜாவோட ’கிழக்கு சீமையில’ படத்தை ரெடி பண்ணிட்டாங்க. தங்கச்சிக்காக அண்ணன் எல்லாம் செஞ்சான், கடைசியில உயிரையே கொடுத்தான் அப்படிங்கறதுதான் படம். படத்தை ரெடி பண்ணின பிறகு போட்டுப் பார்த்தா, டைரக்டர் பாரதிராஜாவுக்கு இதுல ஏதோ ஒண்ணு குறையுதுன்னு தோணுது. சிலருக்கு போட்டுக் காண்பிச்சார். எல்லாரும் நல்லாருக்குன்னுதான் சொன்னாங்க. கடைசில, கலைஞானத்தைக் கூட்டிட்டு வந்து காண்பிச்சார். ’படம் நல்லாயிருக்கு. ஆனா, கிளைமாக்ஸ் சரியில்ல’ன்னு சொல்லியிருக்கார். ’நானும் நினைச்சேன், ஏதோ குறையுதுன்னு சொன்னார், பாரதிராஜா. ’அன்புக்குங்கறது இரண்டு வழி பாதைதான். அண்ணன், தங்கச்சிக்காக செஞ்சான் செஞ்சான்னு சொல்ற. தங்கச்சி, அண்ணணுக்காக என்ன பண்ணினா? அவ எதாவது பண்ணணும்ல’னு கேட்டிருக்கார். பிறகுதான் ’அண்ணணுக்காக உயிரையே கொடுத்தான்னு கிளைமாக்ஸை மாத்தினார் பாரதிராஜா. படம் ஹிட். இந்த மாதிரி, டைரக்டர் ஃபீல் பண்ணணும். அப்படி இல்லாம எல்லார்ட்டயும் கருத்துகேட்டா, அது சிக்கலாகவும் வாய்ப்பிருக்கு’ என்கிறார் வசந்த பாலன்.
இதற்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கிறது. கதை, வசனத்துக்காக பிரபலமானவர் இயக்குனர், மகேந்திரன். அவரது ’முள்ளும் மலரும்’ படத்தை பார்த்துவிட்டு, ‘நீ நல்லா வசனம் எழுதுவேன்னுதான் படம் டைரக்ட பண்ண வாய்ப்புக் கொடுத்தேன். படத்துல ரஜினி பேசவே மாட்டேன்கிறாரே, என் படத்தையே நாசமாக்கிட்டியே’ என்று தயாரிப்பாளர் சொல்ல, பிறகு ரிலீஸ் ஆகி ஹிட்டாயிருக்கிறது படம். இப்படியும் ஆக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் திரையுலகினர்.
இதே போல பாலாஜி தரணிதரன் இயக்கிய ’நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம், 2 மணி நேரம் 50 நிமிஷம் ஓடக்கூடியது. இந்தப் படத்துக்கு சுமார் நூறு பிரிவியூ வரை நடந்தது. படத்தை பார்த்த எல்லாரும் 50 நிமிஷம் கட் பண்ணினால் நன்றாக இருக்கும் என்று சொல்ல மறுத்துவிட்டார் பாலாஜி தரணிதரன். பிறகு படம் ஹிட்டானது.
சினிமா என்பது இயக்குனரின் விஷன். ஒரு படத்தில் ஏதோ குறைகிறது என்பதை இயக்குனர் உணரவேண்டும். உணர்ந்தால் இந்த போன்ற கருத்துக் கேட்பதன் மூலம் படத்தை வெற்றிபெற வைக்க முடியும் என்கிறது கோலிவுட்.