30 வயதை தாண்டியும் கலக்கும் நடிகைகள்: மாறுகிறதா சினிமா டிரெண்ட்?
தமிழ் சினிமாவில் முப்பது வயதை தாண்டிய ஹீரோயின்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு டிரெண்ட் மாறியிருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் ஹீரோயின்களுக்கான ஆயுள் குறைவு என்பார்கள். 16 வயதில் நடிக்க வந்தால் இருபது, இருபத்தி ஐந்து வயதுக்குள், அவர்கள் முன்னாள் ஹீரோயின் ஆகிவிடுவார்கள். சில காலம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் சினிமா, பிறகு அக்கா, அண்ணி, அம்மா ரோல்களை கொடுத்து அவர்களை கவுரவிக்கும். இதுதான் சமீபகாலம் வரை தமிழ் சினிமாவின் நடைமுறை. இதற்கு பல நடிகைகளை உதாரணமாகச் சொல்ல முடியும். இதுக்கு விதி விலக்கும் உண்டு.
ஆனால், இந்தி சினிமாவில் கல்யாணம் முடிந்து குழந்தைகள் பெற்ற பின்னும் ஹீரோயின்களாக நடிப்பது வழக்கம். ஒரு குழந்தைக்கு அம்மாவான பின்னும் ஐஸ்வர்யா ராய் இன்னும் ஹீரோயினாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு வயது 43! முன்னாள் ஹீரோயின் கஜோல், திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின், ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கிறார். 2015-ல் வெளியான ஷாரூக்கானின் ’தில்வாலே’ படத்தில் ஹீரோயினாகவே வந்தார் கஜோல். இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறார். அவருக்கு வயது 42!
இதே போல தமிழில், நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், நமீதா, ஸ்ரேயா ஆகியோர் முப்பது வயதைத் தாண்டியும் நடித்து வருகின்றனர். இதில் நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா, காஜல் ஆகியோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர்.
’ஒரு நடிகை, யாரையாவது காதலிக்கிறார் என்று தெரிந்தாலே அந்த நடிகையின் மார்க்கெட் போய்விடும். திருமணம் செய்துகொண்டார் என்றாலோ, செய்துகொள்ள இருக்கிறார் என்றாலோ, கேட்கவே வேண்டாம். இதற்காகவே தமிழ் சினிமா நடிகைகள், தங்கள் காதலை வெளிப்படையாகச் சொல்வதில்லை. அப்படியொரு தகவல் வெளியே கசிந்தாலே, ‘ஐயையோ நான் யாரையும் காதலிக்கலை, அது பொய், வதந்தி’ என்று அலறியடித்து பிரஸ்மீட் வைப்பார்கள். இதெல்லாம் அந்த காலம். இன்று அப்படியில்லை. டிரெண்ட் மாறியிருக்கிறது என்கிறார்கள் சினிமாத் துறையை சேர்ந்தவர்கள்.
‘நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இருவரும் ஒன்றாக இருப்பது போல டிவிட்டரில் புகைப்படங்களை போஸ்ட் செய்கிறார்கள். இருந்தும் அவர் டாப்பில் இருக்கிறார். அவர் கைவசம் நான்கு படங்கள் இருக்கிறது இப்போது’ என்கிறார் சினிமா விமர்சகர் ஒருவர்.
நடிகை அமலா பால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இப்போதுதான் அவர் முந்தைய படங்களை விட, அதிகமாக நடித்து வருகிறார் என்கிறார்கள். ‘திருட்டுப் பயலே-2’, ’விஐபி 2’, ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ’குயின்’ மலையாள ரீமேக், ராமின் ’மின்மினி’, ‘வடசென்னை’ ஆகிய படங்களில் அமலா பால் நடித்து வருகிறார்.
‘சமூக வலைத்தளங்களின் தாக்கம், சினிமாவும் ஒரு வேலைதான் என்பதை உணர்த்தி இருக்கிறது. 80-களில் ஒரு நடிகை காதலிக்கிறார் என்றாலே சினிமாவில் அவரை ஓரங்கட்டி விடுவார்கள். இன்றைக்கு ரசிகர்களின் மனநிலை மாறியிருக்கிறது. சினிமா தொழில் பற்றிய விழிப்புணர்வு ரசிகர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த மாற்றம்’ என்கிறார் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஸ்ரீதர் பிள்ளை.