இது டிரெண்ட்: விவசாயத்துக்கு மாறும் தமிழ் சினிமா

இது டிரெண்ட்: விவசாயத்துக்கு மாறும் தமிழ் சினிமா

இது டிரெண்ட்: விவசாயத்துக்கு மாறும் தமிழ் சினிமா
Published on

தமிழ் சினிமாவில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படங்கள், சமீபத்தில் அதிகரித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் அவ்வப்போது, டிரெண்ட் மாறும். திடீரென்று காமெடி படங்களாக வந்து கொண்டிருந்த நிலையில், அடுத்து பேய் படத்துக்கு தாவியது டிரெண்ட். பிறகு த்ரில்லர் படங்கள். அதையடுத்து காமெடி, பேய் படங்களுக்கு, யு டர்ன். இப்போது விவசாயத்துக்குத் திரும்பியிருக்கிறது!

சமீபத்தில் வெளியான ’கனா’ படத்தில் சத்யராஜ், விவசாயியாக நடித்திருந்தார்.  சீனு ராமசாமி இயக்கிய ’கண்ணே கலைமா னே’ படத்தில் உதயநிதி, இயற்கை விவசாயத்தைப் போற்றுபவராக நடித்திருந்தார். அதர்வா நடிப்பில் வெளியான ’பூமராங்’ படமும் விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பேசியது.

இப்போது சுப்ரமணியம் சிவா இயக்கி இருக்கும், ’வெள்ளையானை’ படத்தின் கதை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப் பட்டுள்ளது.

‘தண்ணீரை நம்பி இருக்கும் விவசாயி, தண்ணீர் இல்லாத சூழலில் தவிக்கிறான். விவசாய நிலத்தில் பிறந்து விவசாயம் செய்து வந்த மனிதனின் நிலை இன்று என்னவானது என்பதை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். அப்படிப்பட்ட நீரை இழந்து நிற்கும் விவசாய தலைமுறையின் கதையைதான் உருவமாகச் சொல்கிறது ‘வெள்ளையானை’ என்ற தலைப்பு’’ என்கிறார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா. இதில் சமுத்திரக்கனி, ஆத்மியா நடித்துள்ளனர்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ’லாபம்’ படத்தின் கதையும் விவசாயத்தை மையப்படுத்தியே உருவாகிறது. இதில் காரசாரமான கம்யூனிஸ்ட் அரசியலும் இருக்கிறது என்கிறது படக்குழு. இதில் விவசாயிகள் சங்கத் தலைவராக நடிக்கிறார் விஜய்சேதுபதி. அவர் ஜோடியாக ஸ்ருதிஹாசன்.

’காக்கா முட்டை’, ’குற்றமே தண்டனை’, ’ஆண்டவன் கட்டளை’ படங்களை இயக்கிய மணிகண்டன், அடுத்து இயக்கி இருக்கும் படம், ’கடைசி விவசாயி’. டைட்டிலிலேயே விவசாயத்தைக் கொண்டு வந்துவிட்டார். ‘’விவசாயத்தை தொழிலாகப் பார்க் காமல், வாழ்க்கை முறையாகப் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைக்கு அதன் நிலை எப்படியிருக்கிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறேன்’’ என்கிறார் மணிகண்டன். இதில் விஜய் சேதுபதி, யோகிபாபு, பெருங்காமநல்லூரைச் சேர்ந்த நல்லாண் டி என்கிற விவசாயி உட்பட பலர் நடித்துள்ளனர். 

அமீர் நடிக்கும் ’அச்சமில்லை அச்சமில்லை’ விவசாயத்தை மையப்படுத்தி உருவாகிறது. அமீரின் உதவியாளர் முத்துக் கோபால் இயக்குகிறார். அறிமுக இயக்குனர் இஸ்மாயில் இயக்கியுள்ள ’ஐ.ஆர்.8’ படம், விவசாயிகள் படும் அவஸ்தையை பேசுகிறது. இதில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். விரைவில் வெளியாக இருக்கும் ’பக்கிரி’ படத்தில் விக்ராந்த் விவசாயியாக நடிக்கிறார். 

இவை தவிர அரிசி, கத்தரிக்கா வெண்டைக்கா உட்பட பல படங்கள் விவசாயத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகி வருகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com